வியாழன், 12 டிசம்பர், 2013

டாக்டர் பாஷி..

இதய மாற்று ஆபரேஷன் செய்த இளம்பெண்ணுக்கு சிக்கலான குருதி நாள நெளிவு அறுவை சிகிச்சை : நாட்டில் முதல் முறையாக மியாட் மருத்துவமனை சாதனை

 சென்னை: இதய மாற்று ஆபரேஷன் செய்த இளம்பெண்ணுக்கு, சென்னை மியாட் மருத்துவமனையில், மிக சிக்கலான குருதி நாள நெளிவு பிரச்னைக்கான அறுவை சிகிச்சையை, டாக்டர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர். இத்தகைய அறுவை சிகிச்சை செய்யப்படுவது, இந்தியாவில் இதுவே முதல் முறை .
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி நாகராஜின் மகள் அபிநயா, 25. இதயம் செயல் இழந்ததால், 2009ல், சென்னை அரசு பொது மருத்துவமனையில், இவருக்கு இதய மாற்று ஆபரேஷன் நடந்தது. உடல் நலம் சீரடைந்தவர், காப்பீட்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். எனினும், மூன்று மாதமாக, மார்பு வலி, மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, சென்னை மியாட் மருத்துவமனையில், மிக சிக்கலான, குருதி நாள நெளிவு அறுவை சிகிச்சையை, டாக்டர் பாஷி தலைமையிலான குழு, வெற்றிகரமாக செய்துள்ளது.
இதுகுறித்து, நிர்வாக இயக்குனர் மோகன்தாஸ், இதயவியல் சிகிச்சைத் துறை தலைவர் பாஷி ஆகியோர் கூறியதாவது: மார்பு வலி, மூச்சுத் திணறலால் வந்த பெண்ணை பரிசோதித்தபோது, ஏறுமுக பெருந்தமனியில், கூறுபாட்டு குருதி நாள நெளிவு மற்றும் இதயத்தின் முதன்மை வால்வில் கசிவு இருப்பது தெரிய வந்தது.
அவரது உயிரைக் காப்பாற்ற சிக்கலான, அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம்.
மாறுபட்ட இதயத்தை உடல் ஏற்க மறுப்பதை மட்டுப்படுத்த, அவர் உட்கொண்ட மாத்திரைகள், அறுவை சிகிச்சைக்கு, தொழில் நுட்ப ரீதியில் சிக்கலானதாக மாற்றியது. தொற்று ஏற்படும் வாய்ப்பும் அதிகம் இருந்தது.
கால் பகுதியில், இரண்டு குழாய்களை நுழைத்து, இதய நுரையீரல் இயந்திரத்துடன் அவரை இணைத்தோம். மார்பை திறக்கும் முன் குளிரூட்டினோம். குருதி நாள நெளிவு, மார்பறையில் புடைத்துக் கொண்டிருந்ததால், இப்படி செய்தோம். நோயுற்ற வால்வு, ஏறுமுக பெருந்தமனி, கூறுபட்ட இதய சுவர் சிரை தமனிகள் அகற்றப்பட்டன. ஏறுமுக பெருந்தமனி மற்றும் பெருந்தமனி செயற்கை வால்வு மற்றும், கிராப்ட் கொண்டு மாற்றப்பட்டன. இதய சுவர் சிரை தமனிகள் மீண்டும் பொருத்தப்பட்டன. நான்கரை மணி நேரம், அறுவை சிகிச்சை நடந்தது; பூரண குணமடைந்துள்ளார்; இதயமும் நன்றாக செயல்படுகிறது; விரைவி"ல் வீடு திரும்புவார். இதய மாற்று ஆபரேஷன் செய்த நோயாளிக்கு, இத்தகைய அறுவை சிகிச்சை செய்வது, இந்தியாவில் முதல் முறை; உலகளவில், மூன்றாவது முறை. பெண்ணின் குடும்ப ஏழ்மை கருதி, இதற்கான, 5 லட்ச ரூபாய் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக