திங்கள், 13 ஜூலை, 2015

சினிமாவின் கலை – பாகுபலியை முன்வைத்து…சாரு நிவேதிதா

சினிமாவின் கலை – பாகுபலியை முன்வைத்து…(1) சாரு நிவேதிதா

First Published : 12 July 2015 09:00 AM IST
பாகுபலி – இந்தியாவிலேயே மிக அதிக செலவில் (250 கோடி) உருவான பிரம்மாண்டமான படம். உண்மைதான். கதையின் நாயகனும் நாயகியும் இடம் பெறும் காதல் காட்சிகளைத் தவிர, மற்ற பெரும்பாலான காட்சிகளில் பிரமிக்கவைக்கும் பிரம்மாண்டத்தை நிகழ்த்திக்காட்டியிருக்கும் இயக்குனர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் மற்றும் இதன் உருவாக்கத்துக்குக் காரணமான அத்தனை பேரும் நம் பாராட்டுக்குரியவர்கள்.
இதுவரை இந்தியாவில் இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தை யாரும் எடுத்ததில்லை. பாகுபலியே அதைத் தொடங்கிவைத்திருக்கிறது. ஒரு நல்ல பொழுதுபோக்குச் சித்திரம். அனைவரும் பார்த்து மகிழலாம். ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு அருமை. வசனம் சில இடங்களில் கவனிக்க வைக்கிறது. (வீரனுக்கும் அரசனுக்கும் உள்ள வித்தியாசத்தை சிவகாமி - ரம்யா கிருஷ்ணன் - சொல்லும் இடம்). சில இடங்களில் மொக்கையாக உள்ளது. (நாயகனும் நாயகியும் முதல்முதலாகச் சந்தித்து காதல் வசனம் பேசும் இடத்தில், “நீ பெண்; நான் ஆண்” என்று நாயகன் சொல்லும்போது பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள்). பொதுவாகவே கூர்மையான வசனங்களுக்கு நம்முடைய வசனகர்த்தாக்கள், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் நாவல்களைப் படித்துப் பயிலலாம். அவருடைய பாத்திரங்கள் கூர்மையான ‘நாக்கு’ படைத்தவை.
 
Epic என்பதற்கு பழைய வரலாற்றைச் சொல்லும் பெரும் காவியம் என்று பொருள். அந்தப் பாணியில் (genre) படம் எடுத்துவிட்டு, சராசரி படங்களில் வரும் சராசரி டூயட்டை போட்டால் அது பொருந்தி வராது. ஷிவ்வும் (பிரபாஸ்) அவந்திகாவும் (தமன்னா) காதலிக்கும் இடங்கள் அனைத்துமே படத்தின் பிரம்மாண்டமான சரித்திரப் பின்னணிக்கும், போர்க்களக் காட்சிகளுக்கும் ஒத்துவராமல் போகிறது. அதிலும், முதல் டூயட்டில் பார்வையாளர்களில் பாதிப் பேர் அரங்கத்தை விட்டு வெளியே போவதைப் பார்த்தேன். இப்படிப்பட்ட பாடல் காட்சிகள், தெலுங்கு சினிமாவுக்கு வேண்டுமானால் ஒத்துவரலாம். ஆனால், தமிழ்ப் பார்வையாளர்கள் இதையெல்லாம் ரசிக்கக்கூடிய மனநிலையிலிருந்து மாறி முதிர்ச்சி அடைந்துவிட்டார்கள். மற்றும் ஒரு வரலாற்றுக் காவியத்தின் இடையே, இப்படி ஒரு மொக்கையான டூயட்டை போட்டால், அது அந்தப் படத்தின் ethos-க்கே முரண்பட்டதாக இருக்கிறது.
படத்தின் மற்றொரு முக்கியமான குறை, படத்தின் முடிவில் முடிவே இல்லை. என்னதான் இது படத்தின் முதல் பாகம் என்றாலும்கூட, அதற்கும் ஒரு பொருத்தமான முடிவைக் கொடுத்திருக்க வேண்டும். அப்படியில்லாமல், படம் திடீரென்று திடுதிப்பென்று ‘முடிந்ததும்’ பார்வையாளர்கள் அத்தனை பேரும் ‘என்ன நடந்தது?’ என்ற குழப்பத்தில், இருக்கையிலிருந்து நீண்ட நேரம் எழுந்துகொள்ளவே இல்லை. ஒரு ராஜா ராணி கதையை, இப்படித் திடீரென்று எந்த நியாயமும் இல்லாமல் முடித்தால், பார்வையாளர்கள் ஏமாந்துதான் போவார்கள். அந்த ஏமாற்றத்தை அரங்கில் மிகத் தெளிவாகக் காண முடிந்தது.
அதிலும் ‘நான் ஈ’ (2012) என்ற சுவாரசியமான படத்தை இயக்கிய ராஜமௌலிக்கு, ஒரு படத்தை எங்கே முடிப்பது என்று தெரியவில்லையா என்பது ஆச்சரியமாக உள்ளது.
Lord of the Rings (2001-03), மூன்று பாகங்களாக வெளிவந்த படம். மொத்தம் ஒன்பதரை மணி நேரம். மூன்று மணி நேரத்தில் முதல் பாகம் முடியும்போது, அது அரைகுறையாக முடியவில்லை. படத்தின் முதல் பாகம் முடியும்போது, மாய மோதிரத்தின் நெடும் பயணத்தில் ஒரு பகுதி முடிகிறது என்பதை நாம் மிகுந்த மனநிறைவோடு புரிந்துகொண்டு அடுத்த பகுதிக்குத் தயாராகிறோம். அப்படிப்பட்ட நிறைவை பாகுபலி அளிக்கவில்லை. திடீரென்று ஏற்பட்ட மின் தடையால் படம் நின்றுபோவதுபோல் முடிகிறது.
 
கதை ஒன்றும் பெரிதாக இல்லை. எல்லா வரலாற்றுக் கதைகளுக்குமான தலைவிதி ஒன்றுதான். ஆட்சியைப் பிடிக்க அடிதடி, தந்தையை மகன் கொல்வது, சகோதரனை இன்னொரு சகோதரனே போட்டுத் தள்ளுவது… இப்படியாக மகாபாரதத்திலிருந்து மொகலாய அரசக் குடும்பங்கள் வரை - ஏன், இன்றைய ஜனநாயக ‘அரச குடும்பங்கள்’ உள்பட - எல்லாக் கதையும் ஒரே கதைதான். அப்படி ஒரு கதைதான் பாகுபலியும். எனவே அதைப்பற்றிச் சொல்லவேண்டியதில்லை. ஆனால், படத்தைப் பற்றிச் சொல்லவும் அதிகம் இல்லை என்பதுதான் பிரச்னை. அதிலும், பிரம்மாண்டம் என்பதில் இந்தியாவிலேயே முதல்முதலாக சாதனை படைத்திருக்கும் ஒரு வரலாற்றுக் காவியத்தைப் பற்றி எழுதுவதற்கு, இரண்டு வரிக்கு மேல் எதுவும் இல்லை என்றால் அது மிகவும் கவலைக்குரிய விஷயம். இது பாகுபலியின் பிரச்னை மட்டும் அல்ல. ஒட்டுமொத்தமாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பிரச்னை என்று தோன்றுகிறது. அதைப்பற்றி விசாரிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
பாகுபலி, 2000-ம் ஆண்டு வெளிவந்த க்ளாடியேட்டர் என்ற ஹாலிவுட் படத்துக்கான இந்திய எதிர்வினை என்று பல விமரிசகர்களும் பார்வையாளர்களும் மகிழ்வுடன் சொல்கிறார்கள்.
நல்லது. க்ளாடியேட்டர் படத்தில் பூதக் கண்ணாடி வைத்துத் தேடினாலும் கிடைக்காத வஸ்து, வரலாறு. மார்க்கஸ் ஔரேலியஸ், அவரது மகன் கமோடஸ் போன்ற பெயர்களும், ஜெர்மானிய ஆதிவாசிகளை ஔரேலியஸின் படை ஒடுக்கியது போன்ற சில சம்பவங்களும் மட்டுமே அதில் வரலாறு; மற்றதெல்லாம் வெறும் ஹாலிவுட் கற்பனை. அப்படிப்பட்ட ஒரு கற்பனையான ஹாலிவுட் மசாலா படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், கவிதையும் ஞானமும் மிளிர்ந்துகொண்டிருந்ததை நாம் பார்த்தோம். மேக்ஸிமஸ் என்ற கற்பனைப் பாத்திரத்தின் ஆரம்ப வசனமே ஞானத்தின் ஒளிக்கீற்றாக வீசிச் செல்லும். (What we do in life, echoes in eternity!). இன்னொரு இடம், ஔரேலியஸும் மேக்ஸிமஸும், ஔரேலியஸின் தனியறையில் பேசிக் கொள்ளும் காட்சி –
ஔரேலியஸ்: ஜெர்மானிய ஆதிவாசிகளோடு போரிட்டு வென்ற மேக்ஸிமஸுக்கு - ரோமாபுரியின் மிகப்பெரிய தளபதிக்கு - நான் என்ன பரிசு கொடுக்கட்டும்?
மேக்ஸிமஸ்: என் வீட்டுக்குப் போக அனுமதி தாருங்கள்.
ஔரேலியஸ்: நான் இறந்துகொண்டிருக்கிறேன் மேக்ஸிமஸ். ஒரு மனிதன் தன் முடிவைப் பார்த்துவிட்டான் என்றால், அவன் வாழ்ந்த வாழ்க்கையில் ஏதாவது அர்த்தம் இருக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள விரும்புவான். வருங்காலத்தில் வரலாறு என்னை என்னவென்று பேசும்? தத்துவவாதி என்றா? போர் வீரன் என்றா? கொடுங்கோலன் என்றா? ரோமாபுரியின் பழைய பெருமையை மீட்டுத் தந்த பேரரசன் என்றா? ஆம்; ஒரு காலத்தில் ரோமாபுரி என்றோர் மகத்தான கனவு இருந்தது. இப்போது அதைப்பற்றி நீ சத்தமாகக்கூட பேச முடியாது. பேசினால், அந்தக் கனவு கலைந்துவிடும். அவ்வளவு பலஹீனமாக இருக்கிறது அது. அதைப்பற்றி வெறுமனே கிசுகிசுக்க மட்டுமே முடியும். வரும் குளிர் காலம்வரைகூடத் தாங்குமா என்று தெரியவில்லை. எனவே மேக்ஸிமஸ், சத்தமாக வேண்டாம்; ரகசியமாகவே பேசுவோம். எனக்கு உன் வீட்டைப் பற்றிச் சொல்.
மேக்ஸிமஸ்: மலை உச்சியில் உள்ள ஒரு எளிமையான வீடு அது. சூரிய ஒளியின் கதகதப்பை வாங்கித் தக்கவைத்துக்கொள்ளும் கல் வீடு. தோட்டத்தில் மூலிகைச் செடிகளின் நறுமணம் பகல் முழுவதும் வீசிக்கொண்டிருக்கும். மாலையில் மல்லிகையின் மணம் காற்றில் தவழ்ந்து வரும். வாசலில் ஒரு புன்னை மரம். சுற்றி வர ஆப்பிள், அத்தி, பேரிக்காய் மரங்கள். கன்னங்கரேல் என்ற கறுப்பு மண்… என் மனைவியின் தலைமுடியைப்போல. வீட்டிலிருந்து கீழே இறங்கும்போது தெற்கே திராட்சைக் கொடிகள், வடக்கே ஆலிவ் மரங்கள்…
ஔரேலியஸ்: கடைசியாக நீ எப்போது உன் வீட்டுக்குப் போனாய்?
மேக்ஸிமஸ்: இன்று காலையோடு இரண்டு ஆண்டுகள், 264 தினங்கள் முடிந்திருக்கின்றன அரசே.
ஔரேலியஸ்: உன்னைப் பார்த்துப் பொறாமைப்படுகிறேன் மேக்ஸிமஸ்.
க்ளாடியேட்டர் என்ற காவியத்தை விட்டுவிடுவோம்.
மிகச் சாதாரணமான, வணிகரீதியான ஒரு சராசரிப் படம், 50 Shades of Grey (2015). ஏற்கெனவே நாவலாக வெளிவந்து எல்லோராலும் வாசிக்கப்பட்டு, குப்பை என்று விமரிசிக்கப்பட்ட கதை. அந்த நாவலைப் படிக்காத ஒரு ஆங்கில வாசகரைக்கூட நான் இன்னும் சந்திக்கவில்லை. ஆனால், அத்தனை பேருமே அதைக் குப்பை என்கிறார்கள். அதிலிருக்கும் பாலியல் சமாசாரமே அதைப் பிரபலமாக்கிவிட்டது. அந்த நாவல் படமாக்கப்பட்டு சமீபத்தில் வெளிவந்தது. 21 வயது நாயகி அனஸ்தாஸியா, கோடீஸ்வரனான கிறிஸ்டியன் க்ரேவைப் பேட்டி எடுக்கச் செல்கிறாள். அனா, இலக்கியம் படிக்கும் மாணவி. கிறிஸ்டியன், அவளுடைய நடை உடை பாவனையாலும், வித்தியாசமான அழகினாலும் ஈர்க்கப்பட்டு (அவள் ஒரு கன்னிப் பெண் என்பது பிறகு தெரிய வருகிறது), ‘உனக்குப் பிடித்த நாவலாசிரியர் யார்?’ என்று கேட்கிறான். அவள், தாமஸ் ஹார்டி என்கிறாள். ‘ஓ, உனக்கு ஜேன் ஆஸ்டின் அல்லவா பிடிக்கும் என்று நினைத்தேன்?’ என்கிறான் கிறிஸ்டியன்.
இதுதான் கலை நுணுக்கம் (nuance). ஹாலிவுட்டில் ஒரு வணிகப் படத்தில்கூட இது சாத்தியமாகிறது. ஆனால் தென்னிந்தியாவில், ஒரு மாபெரும் வரலாற்றுக் காவியத்தில்கூட இப்படி நினைத்து ரசிக்கக்கூடிய ஒரு இடம் தேறவில்லை.
கூர்ந்து கவனிக்க வேண்டும். இது வெறும் வசனம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. வசனத்துக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. இது முழுக்க முழுக்க Ethos சம்பந்தப்பட்டது. இந்த வார்த்தைக்கு எனக்குத் தமிழ் வார்த்தை தெரியவில்லை. ஓரளவுக்கு சினிமாவின் பண்பு என்று பொருள் கொள்ளலாம்.


Ethos பற்றி சென்ற கட்டுரையில் குறிப்பிட்டேன். சினிமாவின் கலை அல்லது பண்பு. ஆனால் அந்தக் கலையைப் புரிந்துகொள்ளாமல் சினிமா என்றால், தொழில்நுட்பம் மட்டுமே என்று கொண்டதால்தான் தமிழ், தெலுங்கு மொழிகளில் நல்ல படங்கள் உருவாவதில்லை.  ஃபாண்டஸி, வரலாற்றுக் காவியம் போன்ற பாணிகளில் வெளிவந்த ஹாலிவுட் படங்களோடு பாகுபலியை என்னால் ஒப்பிடவே முடியவில்லை.
போட்டி போடுவதை விடுங்கள்; அவற்றின் அருகில்கூட நெருங்க முடியாதுபோல் தெரிகிறது. இந்தப் பகுதியை எழுதுவதற்கு முன்னால் Gladiator (2000), The Lord of the Rings (2001-2003), Troy (2004) ஆகிய படங்களைப் பார்த்துவிடலாம் என்று நினைத்தேன். பார்த்த பிறகு  தோன்றியது, இன்னும் நூறு ஆண்டுகள் சென்றால்கூட நம்மால் அது போன்ற படங்களை நெருங்க முடியாது. மேலும், இயக்குனர் ராஜமௌலி, பாகுபலியின் மூலம் ஒரு தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்திவிட்டார். ஏனென்றால், அடுத்து நம்முடைய ஷங்கர் 300 கோடியில் பாகுபலி மாதிரியே ஒரு படத்தை எடுத்துவிடுவார். பிறகு, வரலாற்றுப் படம் என்றால் அது அந்தத் திசையிலேயே போய்க்கொண்டிருக்கும். ஃபாண்டஸி அல்லது வரலாற்றுக் காவியம் என்பது அதற்காகச் செலவழித்த கோடிகளில் இல்லை என்பதுதான் பாகுபலியின் மூலம் நாம் கற்க வேண்டிய பாடம். 
பெரூவில் பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்த இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகத் திகழும் மாச்சு பிச்சு அழிவுகளில் போய் டூயட் பாடி விட்டு வந்த பெருமைக்கு உரியது தமிழ் சினிமா. எந்திரனில் அந்தக் கண்கொள்ளாக் காட்சியை நாம் கண்டு ரசித்தோம்.  சினிமா என்பது எத்தனை கோடிகள் செலவழித்தாலும், பொழுதுபோக்கையே அடிப்படையாகக் கொண்டதாக இருந்தாலும், அது ஒரு கலை வடிவம் என்பதைப் புரிந்துகொள்ளாததால்தான் ஒரு மாபெரும் இனத்தின் வரலாற்றுப் பெருமைக்குச் சான்றாக நிற்கும் இடத்தில் போய் டூயட் கம் க்ரூப் டான்ஸ் ஆடவைக்கத் தோன்றுகிறது.
நிகழ்த்துக் கலைகள் எல்லாமே பொழுதுபோக்கை பிரதான குறிக்கோளாகக் கொண்டவைதான் என்றாலும், அதில் கலை அம்சம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், சினிமாவுக்கும் செங்கல், பிளாஸ்டிக் குவளை, டூத் பிரஷ் தயாரிப்பு போன்ற வேலைகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். காசு இருந்தால் தங்கத்தில் டூத் பிரஷ் தயாரித்து மேற்கு நாடுகளுக்கு சவால் என்று சொல்ல முடியுமா? டூத் பிரஷ் தயாரிப்பதற்கும் கலைக்குமான வித்தியாசம் இதுதான். Ethos என்பதைப் புரிந்துகொண்டால், நாம் மாச்சு பிச்சுவில் போய் க்ரூப் டான்ஸ் எடுக்கமாட்டோம். பாப்லோ நெரூதா, மாச்சு பிச்சுவைப் பற்றி ஒரு நீண்ட கவிதை எழுதினார். அதன் இணைப்பு கீழே - 

http://www.poemhunter.com/poem/canto-xii-from-the-heights-of-macchu-picchu/

தென்னமெரிக்க ஆதிகுடிகள், ஸ்பானிய ஆதிக்கவாதிகளை எதிர்த்துப் போராடியதன் குறியீடு அந்தக் கவிதை. ஒரு இனத்தின் கலாசார மாண்பை எடுத்துச் சொல்வது அந்தக் கவிதை. அதுதான் மாச்சு பிச்சு.  நமக்குத் தெரிந்த ஒரு உதாரணம் சொல்கிறேன். ஜாலியன் வாலாபாக் என்ற ஊரில் போய் டூயட் காட்சியைப் படம் பிடிப்பார்களா? பிடித்தாலும் பிடிப்பார்கள்; பள்ளிக் குழந்தைகளைக் கற்பழித்த கொடூரன்களான பில்லா, ரங்கா என்ற இரண்டு கிரிமினல்களின் பெயரையே நாயகர்களுக்குச் சூட்டி, சினிமா தலைப்பாகவும் வைத்துப் படம் எடுத்த சூழல் ஆயிற்றே? 
பாகுபலியின் தவறான முன்னுதாரணம் என்னவென்றால், பல நூறு கோடிகளை செலவழித்துவிட்டால் அது காவியப் படம், ஃபான்டஸி படம் என்ற பெயரைப் பெற்றுவிடலாம் என்பதுதான். மற்றபடி அது எவ்வளவு மொண்ணையான படமாகவும் இருக்கலாம். தென்னிந்திய சினிமாவில் அப்படி ஒரு பாதை வகுக்கப்பட்டால், குறைந்தபட்சம் இந்தக் கட்டுரை அந்தத் தவறான முன்னுதாரணத்தைச் சுட்டிக் காட்டியதாகவாவது இருக்க வேண்டும் என்பதே என் அக்கறை.   படத்தில் என்ன குறை? ஒரு பொழுதுபோக்குச் சித்திரத்தில் கலை எல்லாம் இருக்க வேண்டுமா? 
துப்பாக்கி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கோலி சோடா போன்ற படங்களைப் பற்றி நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.  அதுபோல் நூறு படங்கள் வரலாம். ஆனால் 200 கோடி செலவில் க்ளாடியேட்டர் போன்ற ஒரு வரலாற்றுச் சித்திரம் எடுக்கப்படுகிறது, இந்தியாவிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட முதல் படம் என்ற பெருமைகளையெல்லாம் தாங்கிக்கொண்டு வரும்போதுதான், அதில் கலை அம்சம் கொஞ்சமாவது இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தோன்றுகிறது. 
அகிரா குரஸவா, ஜப்பானின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர்.  1950-ம் ஆண்டு வெளிவந்த ரஷோமான் என்ற படத்தின் மூலம் உலகப் புகழ் அடைந்தார். அந்த வெற்றியைத் தொடர்ந்து, 1965 வரை அவர் ஆண்டுக்கு ஒரு படம் என்று எடுத்தார். சரியாகச் சொன்னால், அந்தப் பதினைந்து ஆண்டுகளில் பனிரண்டு படங்களை இயக்கினார் குரஸவா.  பின்னர் 1975-ல், அவர் ஷேக்ஸ்பியரின் லியர் மன்னன் கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு படம் எடுக்க விரும்புவதாக அறிவித்தார். அந்தப் படத்துக்கான பணம் அவருக்குக் கிடைக்க பத்து ஆண்டுகள் ஆயிற்று. உலகப் புகழ் பெற்ற இயக்குனருக்கு அந்தக் கதி.  அதிலும், பல ஹாலிவுட் படங்கள் அவருடைய படங்களைத் தழுவி அல்லது அவரது பாணியில் எடுக்கப்பட்டவை. அவருடைய Seven Samurai (1954) தான் ஹாலிவுட்டின் Magnificent Seven (1960); குரஸவாவின் Hidden Fortress (1958) தான் ஹாலிவுட்டின் ஸ்டார் வார்ஸ் (1977).  அதேபோல், க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் இரண்டு படங்கள் குரொஸவாவின் படங்களைத் தழுவி எடுக்கப்பட்டவை. ஆனால், குரஸவா தனது படங்களுக்கான கதைகளை ஷேக்ஸ்பியரிலிருந்தும், தஸ்தயேவ்ஸ்கியிடமிருந்தும் எடுத்துக்கொண்டார். 
இப்படியாக ஹாலிவுட்டின் பிரம்மாண்டமான வரலாற்றுப் படங்களுக்கு அகிரா குரஸவாவின் படங்கள் தூண்டுதலாகவும் வழிகாட்டியாகவும் இருந்தன. குரஸவா, இந்தியாவில் பிரபலமாக இருப்பதன் காரணமும் அதுதான். (தனிப்பட்ட முறையில் என் சினிமா ரசனை குரஸவாவின் படங்களுக்கு நேர் எதிரான பாணியில் எடுக்கப்பட்ட ஐரோப்பிய சினிமாவையே சார்ந்தது). பின்னர் 1985-ல் குரஸவா எடுக்க விரும்பிய லியர் படத்துக்கான பணம் கிடைத்தது. அப்போது அவர் வயது 75. Ran (குழப்பம்) என்ற அந்தப் படம் 60 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டபோது, அன்றைய தினம் (1985) ஜப்பானில் அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் அதுதான். அந்தக் காரணத்தினால்தான், பாகுபலியைப் பார்த்தபோது எனக்கு Ran ஞாபகம் வந்தது. ஆனால், இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் கலைக்கும் சந்தைப் பொருளுக்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்றது.
Ran படத்தைப் பார்த்து சுமார் 25 ஆண்டுகள் இருக்கும். அதில் வரும் ஒரு காட்சி இன்றளவும் மனத்தில் நிற்கிறது. அரசன் தன்னுடைய பிள்ளைகளால் விரட்டப்பட்டு தெருவுக்கு வந்துவிடுகிறான். அப்போது, ஒரு காட்டில் குருடன் ஒருவனைச் சந்திக்கிறான். அந்தக் குருடன், ஒரு காலத்தில் அரசனாக இருந்தவன். மற்றொரு அரசனால் தோற்கடிக்கப்பட்டு காட்டுக்கு வந்து வசிக்கிறான். அவனைத் தோற்கடித்த அரசன் மிகவும் குரூரமானவன். அவனுடைய இரண்டு கண்களையும் தோண்டிவிடுகிறான். காட்டில் அந்தக் குருடனின் சந்தோஷம் ஒன்றே ஒன்றுதான். அவனுடைய சகோதரி அவனுக்குக் கொடுத்திருந்த ஒரு புல்லாங்குழல். தன்னிடம் வந்திருப்பவன் பேரரசன் ஹிடட்டோரா என்பது குருடனுக்குத் தெரிந்துவிடுகிறது. அப்போது அவன், ‘அரசே, தங்களுக்கு இந்தப் பிச்சைக்காரன் தருவதற்கு இந்தப் புல்லாங்குழலின் இசை தவிர இங்கே வேறு எதுவும் இல்லை’ என்று சொல்லிவிட்டு ஒரு அற்புதமான பாடலை அதில் வாசிக்கிறான்.   பிறகு ஹிடட்டோரா அவனைப் பற்றி விசாரிக்கும்போது, அவனுடைய கண்களைக் குருடாக்கியவன் தான்தான் என்று தெரிகிறது. ‘உன் கண்களைக் குருடாக்கிய என்னை நீ வெறுக்கவில்லையா?’ என்று கேட்கிறான் ஹிடட்டோரா. அப்போது அந்தக் குருடன் ஒரு அற்புதமான பதிலைச் சொல்கிறான். அந்தப் பதிலுக்காகவே நீங்கள் Ran படத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். Ethos என்று நான் திரும்பத் திரும்பச் சொல்வது அதுதான். அது வெறும் வசனத்தால் வருவது அல்ல. தர்ஸனத்தால் வருவது. 
குரஸவாவைக்கூட விட்டுவிடுவோம். அவர் ஒரு மேதை. Lord of the Rings-ஐ எடுத்துக்கொண்டாலும், அதிலிருந்தும்கூட ராஜமௌலி எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அந்தப் படத்தில் ஒவ்வொரு தருணமும் மனிதனின் அடிப்படை உணர்வுகளும், மேன்மையான மதிப்பீடுகளும் பலவித உணர்வுகளால் கொந்தளித்துக் குமுறுவதைக் காண்கிறோம். தேவதை உலகைச் சேர்ந்த ஆர்வன் என்ற பெண், மனிதனான அரகோனைக் காதலிக்கிறாள். அப்போது ஆர்வனின் தந்தை அவளிடம், ‘மரணம் என்றால் உனக்கு என்ன என்று தெரியாது; மனிதர்களின் உலகம் மரணத்தினால் சூழ்ந்தது; ஒரு கட்டத்தில் அவர்கள் அழிந்துவிடுவார்கள்; மரணத்தின் துயரம் உனக்குத் தெரியாது; அவனை மறந்துவிடு’ என்று எச்சரிக்கும்போது, அவள் கூறும் பதில் ஒரு உதாரணம். ஆனால், இப்படிப்பட்ட தருணங்கள் பாகுபலியில் இல்லவே இல்லை என்பதோடு, படு சாதாரணமான மொக்கை தெலுங்குப் படத்தைப்போலவே உருவாக்கப்பட்டிருக்கின்றன, கதையும் காட்சிகளும். அதிலும், சமீபகாலத்தில் நாஸருக்கு ஏன் எல்லாப் படங்களிலும் அந்தத் தொங்கு மீசையை ஒட்டவைத்து நம்மைப் படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. காவியத் தலைவனில் தொடங்கிய சோகம், உத்தம வில்லனில் தொடர்ந்து இப்போது பாகுபலியிலும் தொங்குகிறது. தேர்ந்த நடிகர்களான நாஸரும் ரோகினியும் இடம் பெறும் காட்சிகள், பள்ளிக்கூட ட்ராமாக்களை ஞாபகப்படுத்துவதுபோல் இருப்பதற்குக் காரணம், இயக்குனரிடம் கலை முதிர்ச்சி இல்லை என்பதுதான்.   
கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் என்ற தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டால், அதிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.  அரண்மனைகள் எல்லாம் ஏதோ நெருப்புப் பெட்டிகளை அடுக்கியது போன்ற தோற்றத்தைத் தருகின்றன. எல்லோருக்கும் பளபளா வண்ணங்களில் ஆடைகள். வரலாற்றுப் படத்துக்கான ஹீரோ என்றால் ஆறேகால் அடி உயரமும் ஆஜானுபாகுவான தோற்றமும் இருந்தால் போதும் என்று நினைத்துவிட்டார்கள்போல் தெரிகிறது. பிரபாஸின் முகத்தில் உணர்ச்சிகளே தெரியவில்லை. லார்ட் ஆஃப் தெ ரிங்க்ஸில் மரங்கள்கூட நன்றாக நடித்திருந்தன.
ஒரு நல்ல படத்துக்கு பட்ஜெட் மட்டும் போதாது; கலா சிருஷ்டியும் வேண்டும் என்பதே பாகுபலி உணர்த்தும் உண்மை. சரி, கலை உணர்வை எப்படிப் பெறுவது? மிகவும் சுலபம். இலக்கியம் பயில வேண்டும்.

வியாழன், 25 ஜூன், 2015

ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்..



ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்.
1.
ஆதார் அட்டை என்னிடம் இல்லை. அதனை நான் பதிவு செய்வது எப்படி?இந்திய பதிவாளர் ஜெனரல் அவர்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.முகவரி:The Director,Directorate of  Cencus Operations, Tamilnadu,E-Wing, Third Floor, Rajaji Bhavan,Besant nagar,Chennai-600 090,Phone:91-44-24912993.Mail: dco-tam.rgi@nic.in

2. 
ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, அது கிடைக்கப் பெறாமல் இருந்தால், அவற்றின் விபரங்களை எப்படி அறிவது?* SMS ல் UID STATUS <14 digit EID> என டைப் செய்து 51969 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.*இலவச அழைப்பு எண்: 1800 300 1947 FREE மூலம் போன் செய்யவும்.*https://resident.uidai.net.in/check-aadhaar-statusஇணைய தளத்தில் பெறலாம்.*
3. 
தொலைக்கப்பட்ட ஆதார் அட்டையை திரும்பப் பெறுவது எப்படி?http://eaadhaar.uidai.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
4. 
தொலைக்கப்பட்ட ஆதார் பதிவுச்சீட்டு (Enrolment Slip)பெறுவது எப்படி?ஆதார் இணையதளமானhttps://resident.uidai.net.inஉள் செல்லவும். பின்னர் "find UID/EID" என்பதினை அழுத்தவும். ஆதார் பதிவின்போது அளிக்கப்பட்ட பெயர் மற்றும் கைபேசி எண்ணை பதிவு செய்து OTP (ஒரு முறை குறியீட்டு எண்) பெறவும். பெறப்பட்ட OTP எண்ணை இணையதளத்தில் பதிவு செய்யவும். பதிவான ஆதார் எண் / பதிவு எண்ணினை உங்கள் கைபேசியில் காணலாம்.
5. 
ஆதார் விவரங்களை திருத்தம் செய்வது (Updation) எப்படி?பெயர், விலாசம், பிறந்த தேதி மற்றும் கைபேசி எண்ணை திருத்தம் செய்ய ,* இணையதளமானhttps://resident.uidai.net.inஉள்சென்று செய்யலாம்.*விண்ணப்பம் எழுதி அதனுடன், அதனை சார்ந்த அடையாள ஆவணத்தை கீழ்கணட UIDAI மண்டல அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம். முகவரி:UIDAI,Post box No.:10,Chhindwara,Mathya Pradesh-480 001,INDIA .அல்லதுUIDAIPost Box No:99Banjara Hills,Hyderabad - 500 034,INDIA.மறக்காமல் அனைத்து ஆவணங்களிலும் தங்களது சுய கையொப்பம் இட்டு அனுப்பவும்.

 



ஞாயிறு, 31 மே, 2015

நேர்மையான ஆட்சியர் சகாயம், வி.பி.துரைசாமியை பற்றி முதல்வருக்கு எழுதிய கடிதம்....

தமிழகத்தின் அவலத்தைக் தோல் உரித்துக்காட்டும்
ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆவணம் இதோ ...
மனசாட்சியை உலுக்கும் ஒரு நேர்மையான ஆட்சியரின் கடிதம்
நேரம் கொடுத்து பொறுமையாக படிக்கவும் ......
மேலும் பார்க்க
தமிழகத்தின் அவலத்தைக் தோல் உரித்துக்காட்டும்
ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆவணம் இதோ ...
மனசாட்சியை உலுக்கும் ஒரு நேர்மையான ஆட்சியரின் கடிதம்
நேரம் கொடுத்து பொறுமையாக படிக்கவும் ...
படித்து விட்டு கட்டாயம் .உங்கள் கருத்து எழுதவும் ...
அப்போதைய முதல்வர் மு.கருணாநிதிக்கு
உ.சகாயம் அவர்கள் அனுப்பிய கடிதம்/ விரிவாக
==============================================
கடிதம் படிக்க செல்லும் முன் ...
"அரசாணையை அமல்படுத்த வேண்டியவர்கள் அதிகாரிகள்.
அதனை அமல்படுத்தச் சொல்வது அரசியல்வாதிகள்.
சமத்துவபுரத்தில் சிலருக்கு வீடுகள் ஒதுக்க வேண்டுமென்று
நானும் மத்திய மந்திரி காந்தி செல்வனும் துணை முதல்வரிடம் சொன்ன போது, “அரசாணை விதிகள்படி தான் வீடுகள் ஒதுக்கப்படும்” என்று சொன்னார் துணை முதல்வர். அதனால் நாங்கள் மேற்கொண்டு வலியுறுத்தவில்லை. சமத்துவபுரம் எங்கு அமைகிறதோ அந்த ஒன்றியத்துக்குட்பட்ட மக்களுக்குதான் முன்னுரிமை தரவேண்டும் என்கிறது அரசாணை. ஆனால் இதை புறக்கணித்துவிட்டு தன்னிச்சையாக ஒதுக்கீடு செய்தார் கலெக்டர் சகாயம் .
14 பவர் புரோக்கர்களை கையில் வைத்துக் கொண்டு மாவட்ட நிர்வாகத்தை சீர்குலைத்தார் சகாயம். இந்த பவர் புரோக்கர்கள் மீது
ரேப் கேஸ், வழிப்பறி கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு
க்ரைம் ரெக்கார்டுகள் உள்ளன. இவர்களின் பிடியில் தான்
நாமக்கல் கலெக்டர் அலுவலகமே இருந்தது. கிரிமினல்களுடன்
ஒரு கலெக்டருக்கு என்ன சகவாசம்?
இந்த பவர் புரோக்கர்கள் சொல்லி எத்தனை தாசில்தார்களை தூக்கியடிச்சார் சகாயம்?
14 பவர் புரோக்கர்களுக்கு ஆதரவாக சகாயம் செயல்பட்டதால் தான் அவருக்கு எதிராக தாசில்தார்கள், விஏஓக்கள் போராடினார்கள்.
இரவு கிராமத்தில் தங்கும் நிகழ்வுக்காக ஒரு 50 பேர்களை அழைத்துக் கொண்டு ஏதேனும் ஒரு கிராமத்தில் தங்குவார் சகாயம். இதற்காகஒரு வீட்டை புடிச்சு அதை புது வீடு மாதிரி மாத்து.. ஏஸி போடு.. என்னோட வந்தவங்க எல்லாத்துக்கும் சாப்பாடு ரெடி பண்ணுன்னு அந்த ஊர் கிராம நிர்வாக அதிகாரிக்கு உத்தரவு போடுவாரு சகாயம். அதை ஏற்பாடு செய்வார் கிராம நிர்வாக அதிகாரி. அதற்கு ரூ.50 ஆயிரம் செலவாகும்.
இந்த 50 ஆயிரத்தை அரசு கணக்கிலும் ஏத்த முடியாது. பிறகு எப்படி அதை சரி செய்வார் அந்த அதிகாரி? ஆக லஞ்சம் தான் அந்த அதிகாரி வாங்க வேண்டும். லஞ்சத்தை ஒழிப்பேன் என்கிற சகாயம், தனக்கு கீழுள்ள அதிகாரிக்கு லஞ்சம் வாங்குகிற சூழலை உருவாக்கலாமா? இதையெல்லாம் உடனே முதல்வரிடமும், துணை முதல்வரிடமும் சொல்ல வேண்டியது என் கடமை. அதைச் செய்தேன். மற்றபடி இவர் மீது எனக்கு தனிப்பட்ட குரோதம் கிடையாது.
தனக்கு ஐஏஎஸ் கிடைக்காத கோபத்தில் தலைமைச் செயலாளர்மீதே புகார் வாசித்தவர் தானே இவர்? ஐஏஎஸ் பதவி மீது தீராத காதல் இருந்தால் முறைப்படி படித்து ஐஏஎஸ் தேர்வில் செலக்டாகிவர வேண்டியது தானே. நிர்வாகத்துக்காக அரசு செய்யும் மாறுதலை ஏற்றுக் கொண்டு பணி செய்வது தான் ஒரு கலெக்டருக்கு அழகு. ஆனோ இவரோ பயிற்சியில் இருந்து கொண்டே சில அமைப்புகளைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார். இது தான் ஒரு கலெக்டருக்கு அடையாளமா?"
- நக்கீரன் அக்டோபர் 20, 2010 இதழில் திமுக முன்னாள் துணை சபாநாயகர்
வி.பி. துரைசாமி (தற்போது திமுக துணை பொது செயலாளர் ) அவர்களின் பேட்டி
=============================================================
இந்தப் பேட்டியினால் தான், அப்போதைய புதிய திருப்பூர்
மேம்பாட்டுக் கழகம் மேலாண் இயக்குனர்சகாயம் அவர்கள்
மேற்படி திமுக முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. துரைசாமி
மீது 25 லட்சத்து 100 ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஒரு நேர்மையான அரசு அதிகாரியை எப்படியெல்லாம் துன்புறுத்துவார்கள் அரசியல்வாதிகள், என்பதற்கு இந்த ஒரு செய்தியே பெரும் உதாரணம்.
இவர்கள் எப்படியெல்லாம் பொய்ப் புகார் சுமத்தியுள்ளார் என்று அப்போதைய முதல்வர் மு.கருணாநிதிக்கு, உ.சகாயம் அவர்கள் அனுப்பிய கடிதம் இங்கே......
அனுப்புதல்
உ. சகாயம், இ.ஆ.ப.,
மேலாண் இயக்குனர்,
புதிய திருப்பூர் பகுதிமேம்பாட்டுக் கழகம்,
சென்னை - 600018
பெறுதல்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு,
பொருள் – நாமக்கல் மாவட்டம் - மாவட்ட ஆட்சியர் மாறுதல் - பொய் குற்றச்சாட்டு -அவதூறு -மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் திரு.வி.பி.துரைசாமி மற்றும் தமிழ்நாடுகிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சம்மந்தமாக.
------------------------------------------
தங்களது ஓராயிரம் பொறுப்புகளிடையே, ஓயாத பணிகளிடையே, எனது கோரிக்கைக்காக இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதி தங்களது பணிச் சுமையை என் பங்குக்கு நானும் கூட்டுவதில் எனக்கு வருத்தம்தான். எனினும் பணிக்காலம்; முழுமையும் ஆற்றும் கடமையே ஆருயிரினும் மேலானது எனவும், பிறழாத நேர்மையே பெருமைமிகு பண்பாகக் கருதும் ஒரு எளிய மக்கள் ஊழியனாகிய எனக்கு தாங்கள்தான், நியாயம் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுத வேண்டிய நிலையில் இருக்கிறேன்.
நான் தமிழக அரசு உத்தரவிட்டவாறு 9.6.2008 அன்று நாமக்கல்
மாவட்ட ஆட்சியராகபணியில் சேர்ந்தேன். நான் மாவட்ட
ஆட்சியராகப் பணியாற்றிய நிலையில் 20.09.2010 அன்று
2 மாத பயிற்சிக்காக லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக
அகாதெமி, மசூரிக்கு அனுப்பப் பட்டேன்.
இதனிடையே தமிழக அரசு ஆணை எண் 3822, பொதுத்துறை, நாள் 28.09.2010ன்படி மாவட்ட ஆட்சியர் பதவியிலிருந்து நான் மாற்றப்பட்டு எந்தப் பதவியும் எனக்கு அளிக்கப்படாமல் விடப்பட்டேன். பிறகு எனக்கு அரசாணை எண் :3960, பொதுத்துறை, நாள்:08-01-2010ன் படி புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டேன்.
2 ஆண்டுகள் 3 மாதம் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றக் கூடிய வாய்ப்பைத் தமிழக அரசு அளித்தது. அந்த வாய்ப்பை அரசின் நலத் திட்டங்களை முனைப்போடும்,உள்ளச்சுத்தியோடும் கடைக்கோடியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தினேன். அதோடு ஒரு அப்பழுக்கற்ற -நேர்மையான நிர்வாகத்தை நடத்தி ஏழை எளிய கிராம மக்களுடைய நம்பிக்கையை அரசின் மீது உருவாக்கிடும் வண்ணம் செயல்பட்டேன். இந்த நிலையில் எனக்கு கிடைத்திருக்கக் கூடிய இந்த மாறுதலை நான் ஒரு அரசு அலுவலருக்கு ஏற்படக் கூடிய, ஒரு வழக்கமான நிகழ்வாகத்தான் கருதிக் கொண்டேன்.
பயிற்சிக்காக சென்ற நேரத்தில் எனது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் இல்லத்தில் வசித்தனர். எனது குழந்தைகள் அங்கிருந்துதான் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் எனது திடீர் மாறுதல் நான் 2000 கி.மீக்கு அப்பாலே பயிற்சியில் இருக்கிறபொழுது செய்யப்பட்டதால் எனது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சங்கடமான ஒரு சூழல்.
புதிய மாவட்ட ஆட்சியருக்கு இல்லத்தை விடமுடியாத ஒரு இக்கட்டான நிலை. நான் இல்லாத நிலையில் என் குழந்தைகளை கல்வி ஆண்டின் பாதியில் சென்னையில் புதிதாக பள்ளியில் சேர்க்க முடியாத ஒரு கடினமான காலம். இது எனக்கு மட்டுமல்லாமல் என் மனைவிக்கும், என் குழந்தைகளுக்கும் மன வேதனையை அளித்தது.
ஆனால் அரசுப் பணியை – அதிகாரத்தை எள் முனையளவும் சுயநலத்திற்கு பயன்படுத்தாது நிகரற்ற நேர்மையோடும் - அளப்பரிய அர்ப்பணிப்புணர்வோடும் ஒரு லட்சியப் பயணமாக மேற்கொள்ளுகின்ற எனக்கு அத்தகைய வேதனை லட்சியத்திற்காகக் கிடைத்திட்ட வழக்கமான ஒன்று என மனப்பக்குவத்தோடும் மகிழ்வோடும் ஏற்றுக் கொண்டேன். மற்றபடி இந்த மாறுதலை நான் இயல்பாகத்தான் எடுத்துக் கொண்டேன்.
அதைப் போல கிராம நிர்வாக அலுவலர்கள் அரசு விதிகளின்படி கிராமத்தில் தங்கவில்லை என்கின்ற நிலையிலும், அவர்களில் சிலர் எளிய கிராம மக்களிடத்தில் லஞ்சம் பெற்று அவர்களை வாட்டி வதைக்கின்ற புகார்கள் வந்த நிலையிலும், அவர்கள் மீது நான் கடுமையான நடவடிக்கை எடுத்தேன். அதன் காரணமாக எனக்கு எதிராக இந்த மாறுதலுக்கு முன்பாக வரை அவர்கள் சங்கத்தின் மூலமாக தொடர் போராட்டம் நடத்தினார்கள். அதைப்போல அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் என்னைத் தரக்குறைவாகப் பேசினார்கள். மாவட்ட ஆட்சியர் பணியிலிருந்து என்னை விரைவில் விரட்டுவோம் என்று சவால் விட்டனர்.
இந்நிலையில் இந்த மாறுதல் வந்திருக்கின்ற காரணத்தினால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆதரவாக இந்த மாறுதல் செய்யப்பட்டிருக்கிறது என்று என்னுடைய நடவடிக்கையை அறிந்த அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரும் சொன்னாலும் இந்த நடவடிக்கையை உண்மையில் ஒரு நிர்வாக ரீதியிலான மாறுதல் என்றேதான் நான் கருதிக் கொண்டேன். இதனைப் பெரிதுபடுத்த ஒன்றுமே இல்லை என உளமாற நினைத்தேன்.
ஆனால் இந்த மாறுதலுக்கு எதிராகப் போராடிய பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில் அக்டோபர் 20-22 2010 நக்கீரன் வார இதழில் வந்த கட்டுரையில் மாண்புமிகு தமிழ்நாடு சட்டப் பேரவைத் துணைத் தலைவர் திரு.வி.பி. துரைசாமி அவர்கள் அளித்த பேட்டி என்னைப் பேர‌திர்ச்சிக்குள்ளாக்கியதோடு மட்டுமல்லா மல் இந்த மாறுதல் மாண்புமிகு தமிழ்நாடு சட்டப் பேரவைத் துணைத் தலைவர் திரு.வி.பி.துரைசாமி அவர்களினுடைய தொடர் முயற்சியாலும் கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டப் பின்னணியிலும் செய்யப்பட்டிருக்கிறது என்று அவரின் கூற்றுப்படியே நான் முடிவு செய்யத் தள்ளப்பட்டிருக்கிறேன்.
அவர் நக்கீரன் கேட்ட கேள்விகளுக்கு வழக்கமான - சாதாரண நிர்வாக நடவடிக்கைதான் இந்த மாறுதல் என்று பதில் அளித்திருந்தால் இதில் எந்தப் பிரச்சனையும் இருந்திருக்காது. நான் கருத்து சொல்ல எதுவும் இல்லாமல் போய் இருக்கும். ஆனால் அவருடைய பேட்டியில் என் மீது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பான அவதூறுகளையும், குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியுள்ளார். அதோடு தான்தான் என்னுடைய மாறுதலுக்கு காரணம் என்றும், என்னைப் பற்றிய குற்றச்சாட்டுக்களை அவரே தங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும், அந்த அடிப்படையிலேயே நான் மாறுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
இவரது இந்த குற்றச்சாட்டுக்களை நான் வன்மையாக மறுப்பதோடு இவை பொய்யையும்,புரட்டையும் தாங்கிய ஒரு வெறுப்பின் வெளிப்பாடாக இருந்தது என்று அன்புடன் கூற விழைகிறேன். அதோடு நான் 20 ஆண்டு காலம் கட்டிக்காத்த, வேள்வியைப் போல் மேற்கொண்ட எனது நேர்மை, தவத்திற்கு களங்கம் அளிக்கக் கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது என்பதோடு இது பொதுமக்கள் மத்தியில் எனக்கு ஒரு அவப் பெயரை உருவாக்கக் கூடிய ஒன்று என உளமாற உணர்கிறேன். உண்மையில் இவர் இவ்வளவு அவதூறாக, கோபம் கொப்பளிக்கும் வகையில் கருத்து கூற அவசியம் எங்கே எழுந்தது? அதன் பின்னணி என்ன? என்று ஆய்ந்திட வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவர் தன்னுடைய பேட்டியில் என்னை பார்த்து 14 பவர் புரோக்கர்களை கையில் வைத்துக் கொண்டு மாவட்ட நிர்வாகத்தை சீர்குலைத்தார் என்றும், இந்த பவர் புரோக்கர்கள் மீது பல கிரிமினல் வழக்குகள் இருக்கிறது என்றும் கூறுகிறார். இவர்களின் பிடியில்தான் கலெக்டர் அலுவலகமே இருந்தது என்றும் கிரிமனல்களுடன் ஒரு கலெக்டருக்கு என்ன சகவாசம் என்கிறார் இவர்.
இந்த கடுமையான குற்றச்சாட்டுக்களை நான் மறுப்பதோடு மட்டுமல்ல,இத்தகைய குற்றச்சாட்டுக்கள் நயவஞ்சகமான - முற்றிலும் பொய்யான - திசை திருப்பக்கூடிய ஒன்று என்றும் இதற்கு என்னுடைய கடுமையான ஆட்சேபத்தையும் நான் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு யார் அந்த 14 பவர் புரோக்கர்கள் என்றும் அவர்களுடைய பெயர் என்ன, நான் எந்த வகையில் அவர்களுக்கு உதவியிருக்கிறேன் என இதுகாறும் இவர் விவரங்களை வெளியிடாதது வருத்தத்திற்கு உரியது என நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கிரிமினல்களுடன் மாவட்ட ஆட்சியருக்கு என்ன சகவாசம் என்றும், மாவட்ட நிர்வாகத்தை சீர்குலைத்தேன் என்றும் இவர் குறிப்பிடுகிறார். யார் அந்த கிரிமினல்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல் எழுப்புகிற இவரது இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. அதோடு வஞ்சகமாய் பிரச்சனையை திசை திருப்பக்கூடிய வார்த்தை வன்முறை எனவும், பொல்லாங்கு நிரம்பிய பொய் பரப்புரை எனவும் அன்புடன் தெரித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நான் அரசினுடைய திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றியது மட்டுமல்ல. ”All those Men have their price “, என்று ராபர்ட் வால்போல் என்ற ஆங்கில நாடாளுமன்ற உறுப்பினர் ஆட்சியாளர்களைப் பார்த்து நேர்மையற்றவர்கள் என்ற பொருளில் குறிப்பிட்ட வார்த்தையை பொய்யாக்கும் வகையில் மாவட்டத்தில் நேர்மையான – தூய்மையான நிர்வாகத்தை நடத்த எத்தனித்தவன் நான்.
தமிழகத்தில் எந்த மாவட்ட நிர்வாகமும் எடுக்காத – எடுக்கத் தயங்குகிற இலஞ்ச இலாவண்யத்திதற்கு எதிரான - இடைத்தரகர்களுக்கு எதிரான ஒரு நேர்மையான நிர்வாக
நிலையை எடுத்தவன்.
“தத்துவங்களே ஆட்சிக்கு அடித்தளம் வகிக்கிறது” என்கின்ற
கிரேக்க நாட்டின் சீரிய சிந்தனையாளன் பிளேட்டோவின் கூற்றுக்கு ஒப்ப,”வார்த்தைகளே வரலாற்றை உருவாக்குகின்றன,” என்ற உண்மையை உணர்ந்த நான் “லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து“என்ற சொற்றொடரை நிர்வாகத் தாரக மந்திரமாய்,
நேர்மைப் புரட்சிக்கு அடிப்படையாய் - அடையாளமாய் என்னுடைய அலுவலகத்தில் மட்டுமல்ல, எல்லா அலுவலகங்களிலும் எழுதச் சொல்லி பின்பற்ற அறிவுறுத்தியவன் நான். அதனால் அலுவலர்கள் மத்தியில் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்திடவும் பொது மக்களிடத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முதன்முறையாக உளமாற முயற்சித்த மாவட்ட ஆட்சித் தலைவர் நான்.
அதோடு ஏழை மக்கள் வெகுவாரியாக வாழும் நம் நாட்டில், மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு இலஞ்ச இலாவண்யத்தில் ஊறிப்போன, தொடர்ந்து மக்களை வதைத்திடும் அலுவலர்களை கிரிமினல்களாகக் கருதி குற்றவியல் நடைமுறைச்சட்டம் 110ன் கீழ் ஏன் கொண்டு வரக்கூடாது என்று கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை துணைக்கண்காணிப்பாளர்,நாமக்கல்லிற்கு கடித எண்:ROC 40005 (Confidencial)/2009/A-2 dated :28-02-2010 மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன். இது போன்ற நடவடிக்கை எடுத்தால் 6 மாதத்தில்,அலுவலர்களிடையே காணப்படும் இலஞ்ச இலாவண்யத்தை முற்றிலும் களைந்து விட முடியும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறேன். அந்த கடித நகலை தங்களின் மேலானபார்வைக்கு இணைத்துள்ளேன். (இணைப்பு:1)
அது மட்டுமல்ல 2 கோடிக்கு மேலாக முறைகேடு செய்து ஊழலில் திளைத்த வளர்கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளரை பணி நீக்கம் செய்து கைது செய்து கிரிமினல் வழக்கு தொடர்ந்தவன் நான். தமிழகம் முழுவதும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது, அதனை ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுங்கள் என்று பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு கடிதமும் எழுதியிருக்கிறேன். இதுகாறும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக நான் அறியவில்லை. இது பற்றிய பத்திரிக்கை செய்தியையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன்.( இணைப்பு:2)
அதைப்போல அரசு பயன்பாட்டிற்கு அதிகமாக நிலம் கொடுத்த விவசாய மக்களுக்கு முன்னுரிமைச்சான்று வழங்காமல் சட்டத்திற்கு புறம்பாக வேலைவாய்ப்பு பெற தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமைச் சான்று வழங்கிய நிகழ்வில் 12 கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட 16 பேர் மீது பணியிடை நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்து மாவட்ட நிர்வாகத்தை சீர்படுத்தியவன் நான்.
மேலும் சட்டத்திற்கு புறம்பாகச் சான்று பெற்ற நூற்றுக் கணக்கானவர்களை வேலைக்கு அமர்த்திய வேலைவாய்ப்பு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையருக்கு கடிதம் எழுதியவன் நான். இதில் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக நான் அறியவில்லை. இது பற்றிய பத்திரிக்கை செய்தியையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன்.( இணைப்பு:3)
அது மட்டுமல்ல ‘ஆற்று வளமில்லாமல் வேற்று வளமில்லை; நதியில்லாமல் நமக்கு நாதியில்லை’ என்பதை உணர்ந்து காவிரி நதியை நச்சு நதியாக்கும் திருச்செங்கோடு வட்டம்,பள்ளிபாளையத்தில் இயங்கக் கூடிய சாயப்பட்டறைகளை நூற்றுக்கணக்கில் நான் இழுத்து மூடினேன்.
நாமக்கல்லில் சட்டத்திற்கு புறம்பாக போலி ஆவணங்கள் தயாரித்து பல காலம் நூற்றுக் கணக்கில் பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்த நபரை கைது செய்ய உத்தரவிட்டவன் நான். இது பற்றிய பத்திரிக்கை செய்தியையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன்.
கலப்படம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தேன். குறிப்பாக தேயிலை தூள் தயாரிப்பில் பெருமளவில் கலப்படம் செய்து விற்பனை செய்தவர்களை கைது செய்து கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தினேன். இது பற்றிய பத்திரிக்கை செய்தியையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன். (இணைப்பு:4)
எளிய மக்களின் உயிரோடு விளையாடக் கூடிய போலி மருத்துவர்களைக் கண்டறிந்து 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தேன். இது பற்றிய பத்திரிக்கை செய்தியையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன். (இணைப்பு:5)
ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளில் ஏழை தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கான உணவுப் பொருள் வழங்கலில் முறைகேடு செய்த 20க்கும் மேற்பட்ட விடுதிப் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தினேன்.
மலை வாழ்மக்களின் நலனைக்காக்க கொல்லிமலையில் சரியாக பள்ளிக்குச் செல்லாத ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தேன்.
உழவர் சந்தையில் விவசாயிகள் மட்டுமே இருக்க வேண்டுமென்று வியாபாரிகளை அப்புறப்படுத்தினேன். இது போன்ற சட்டத்தை அமல் படுத்துகின்ற பணி மட்டுமல்ல. பிற முன்னேற்ற,ஆக்கப்பூர்வமான பணிகளையும் நான் மேற்கொண்டேன்.
அரசு பள்ளிகளிலே எம் இணையற்ற தாய்மொழியாம் தமிழ் வழியிலே படிக்கக் கூடியவர்கள், ஏழை எளிய பிள்ளைகள். இவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்று - அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை புரிய வேண்டுமென்பதற்காக பலமுறை உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டத்தை நடத்தி அவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். திட்டங்கள் தீட்டியிருக்கிறேன். அதை நடைமுறைப் படுத்துவதைக் கண்காணித்திருக்கிறேன்.
அதைப் போல ஆரம்பப் பள்ளிகளில் சரியான அடித்தளம் அமைத்திட வேண்டும் என்பதற்காகவும் - அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை அளிக்க வேண்டுமென்பதற்காகவும் எல்லா ஆசிரியர்களையும் அழைத்து ஊராட்சி ஒன்றியம் தோறும் கூட்டங்கள் நடத்தி ஆசிரியர்களை ஊக்கப்படுத்தினேன், வழிகாட்டினேன். நூற்றுக் கணக்கான பள்ளிகளை நானே தணிக்கை செய்தேன். அரசு பள்ளிகளில் படிக்கக் கூடிய சிறந்த ஏழை எளிய குழந்தைகளுக்கு பரிசுகளும், பாராட்டுக்களும் வழங்கியிருக்கிறேன்.
என் தாய்திருநாட்டின் ஏழைப் பிள்ளைகளின் கடைசி நம்பிக்கையாம் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த கூட்டங்களை 08-06-2010 , 22-07-2010, 26-07-2010, 02-09-2010-, 03-09-2010 ஆகிய தேதிகளில் நடத்தி இருக்கிறேன்.
ஒரு தூய்மையான, ஏழை கிராம மக்கள் மீது உளமார்ந்த பரிவு கொண்ட நிர்வாகத்தை நான் நடத்தினேன். எந்த பவர் புரோக்கர்களும் என்னிடத்தில் பணியாற்றிய வட்டாட்சியர்களை மிரட்ட முடியாது. அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அப்படி யாருடைய பரிந்துரையின் படியும் நான் வட்டாட்சியர்களை பணிமாற்றம் செய்ததில்லை.
என்னிடத்தில் பணியாற்றிய எல்லா வட்டாட்சியர்களையும் கடுமையான குற்றச்சாட்டுகள் இல்லாத வரை அவர்களது பதவி முழுக்காலமும் பணியாற்ற அனுமதித்து இருக்கிறேன். எந்த அலுவலர்களாவது அவர்களுடைய இலஞ்ச இலாவண்ய நடவடிக்கைகளால் பொதுமக்களால் மிரட்டப்பட்டால் அதற்கு நான் பொறுப்பாக இயலாது.
எனக்கு எதிராக அலுவலர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்கிறார் இவர். அவர்கள் போராட்டம் நடத்தியது ஊழலுக்கு எதிரான என்னுடைய நடவடிக்கையை கண்டித்துத்தானே ஒழிய அவர்களை மாறுதல் செய்ததால் அல்ல என்று தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
கிராமத்தில் நான் இரவில் தங்கியதற்கு ரூ.50,000 செலவை கிராம நிர்வாக அலுவலர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்கிறார் இவர். கிராமத்தில் தங்குவதற்கு ஒரு வீட்டைப் பிடித்து புது மாதிரியாக வீட்டை மாற்றி ஏ.சி. போடு என்று நான் சொல்லியதாக இவர் கதை விடுகிறார். இது மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் திரு.வி. பி.துரைசாமி அவர்களின் கற்பனைத் திறனுக்கு - பொய்யைப் போனியாக்கி மக்களை நம்ப வைத்துவிடலாம் என்கின்ற இவரது அசாத்திய நம்பிக்கைக்கு ஒரு சான்று.
உண்மையில் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் 20 கிராமங்களிலேயே நான் தங்கியிருக்கிறேன். அங்கெல்லாம் நான் எங்கும் தனியாக வீடு எடுக்கச் சொன்னதில்லை. என்றைக்கும் நான் ஏ.சி. போடச் சொன்னதில்லை. நான் தங்கியிருந்தது எல்லாம் கிராமத்து பள்ளிக்கூடங்களிலும், சாவடிகளிலும்தான்.
கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் வாழக்கூடிய வேலிக்காடு என்கின்ற கிராமத்தில் 17.1.2009 அன்று நான் இரவில் தங்கினேன். இந்த கிராமம் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மின்சாரம் வராத ஒரு இருண்ட கிராமம். இந்த கிராமத்து மக்களின் பிரச்சனைகளை நேரில் அறிந்திட - தீர்த்திட நானே இரவில் அக்கிராமத்தில் தங்கினேன்.
என்னுடைய முயற்சியாலும், அலுவலர்களின் ஒத்துழைப்பாலும் வேலிக்காடு கிராமத்திற்கு ஒரு 6 மாத காலத்திற்குள் மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது. நான் தங்கியபொழுது மின்சாரமே இல்லாத ஒரு கிராமத்தில் எப்படி ஏ.சி. இயந்திரத்தை பொருத்தி அவர்கள் வசதி செய்து கொடுத்திருக்க முடியும்? மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் திரு.வி.பி.துரைசாமி அவர்களின் பொய் சொல்லும் ஆற்றலுக்கு இது ஒரு இன்னொரு சான்று. இது பற்றிய பத்திரிக்கை செய்தியையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன். (இணைப்பு:6)
உண்மையில் நான் ஆடம்பரத்தை அறவே வெறுக்கும் ஒரு எளிய அரசு ஊழியன். உண்மையைச் சொல்லப் போனால் நானும் எனது குடும்பமும் மாவட்ட ஆட்சித் தலைவர் இல்லத்தில்தான் முதன்முறையாக ஏ.சி. பொருத்தப்பட்ட அறைகளில் வாழ்ந்தோம். அதற்கு முன்பு வரை சென்னையிலோ, பிற இடங்களிலோ நானோ, எனது குடும்பமோ ஏ.சி. பொருத்தப்பட்ட வீட்டில் ஒருபோதும் வாழ்ந்ததும் இல்லை, உபயோகப்படுத்தியதும் இல்லை. இதை எனது நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் அறிவார்கள்.
மேலும் நான் எங்கு சென்றாலும் வீட்டிலிருந்து உணவு கொண்டு சென்று விடுவேன். என்னோடு வரக்கூடிய குறைந்த எண்ணிக்கையிலான அலுவலர்களின் உணவுத் தேவைக்காகவும் பிறவற்றிற்காகவும் நிர்வாகத்தின் மூலமாக ரூபாய் 1,000 வழங்கப்பட்டிருக்கிறது. உண்மை இப்படி இருக்கையில் ரூ.50,000 கிராம நிர்வாக அலுவலர்கள் செலவு செய்திருக்கிறார்கள் என்று மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர்; திரு. வி.பி.துரைசாமி அவர்கள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வக்காலத்து வாங்கி பொய் பேச வேண்டிய அவசியம் என்ன, அதன் பின்னணி என்ன என்பதை நாம் ஆய்ந்து பார்த்திட வேண்டிய தருணம் இது என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தனக்கு ஐ.ஏ.எஸ். கிடைக்காத கோபத்தில் தலைமைச் செயலர் மீதே புகார் வாசித்தவர்தானே என்கிறார் இவர். இது உண்மையல்ல. இது முற்றிலும் மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவரின் கற்பனை. முறைப்படி படித்து ஐ.ஏ.எஸ். தேர்வு செலக்ட் ஆகி வரவேண்டியதுதானே என்கிறார் இவர். ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர், திரு. வி.பி.துரைசாமி அவர்களுக்கு ஐ.ஏ.எஸ். பதவிக்கு எப்படி தேர்வு செய்கிறார்கள் என்ற அடிப்படையே தெரியாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
ஐ.ஏ.எஸ். பதவியை யாரும் இலவசமாக கொடுத்து விடவும் முடியாது, பெறவும் முடியாது. எல்லோரும் படித்துதான் ஐ.ஏ.எஸ். பதவிக்கு வரமுடியும். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) மூலமாக நேரடியாக ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி வருவது ஒன்று. அதற்கு இணையான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி 1ல் நேரடியாக துணை கலெக்டராக தேர்வு பெற்று குறிப்பிட்ட ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். பதவிக்கு வருவது மற்றொன்று. இந்த இரண்டிலுமே புத்திசாலித்தனமான இலட்சக்கணக்கான இளைஞர்கள் கடினமாக உழைத்து தேர்வினைச் சந்திப்பார்கள். அந்த கடினமான தேர்வில் தேறியவர்கள்தான் ஐ.ஏ.எஸ். போன்ற பதவிக்கு வரமுடியும்.
என்னைப் பொறுத்தவரை 1989ல் தேர்வு 1ல் துணைக் கலெக்டராக தேர்வு பெற்று பதவிக்கு வந்தவன். அதே காலக்கட்டத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)மூலமாக நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்விலும் நான் தேர்ச்சி பெற்று மத்திய அரசு செயலகத்தில் உள்துறை அமைச்சகத்தில் பணி கிடைக்கப்பெற்றேன். அங்கே 5 மாதம் பணி செய்த பிறகு அதனை ராஜினாமா செய்துவிட்டு தமிழக அரசுப் பணிக்கு வந்திருக்கிறேன்.
இன்னும் சொல்லப்போனால் 2 தேர்வுகளையும் சந்தித்தவன் என்ற முறையில் சொல்லுகிறேன். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வைக் காட்டிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 1 தேர்வு கடினமானது. காரணம் தமிழ்நாட்டுக்குள்ளேயே பணி செய்யக் கூடிய அரிய வாய்ப்பு என்கின்ற காரணத்தினால் லட்சக்கணக்கான இளைஞர்கள் முன்னுரிமை அளித்து எழுதக் கூடிய தேர்வு தொகுதி 1.
மேலும் நாங்கள் குடிமைப்பணி தேர்வு (Civil sevices Exame)எழுதிய காலத்தில் UPSC முக்கியத் தேர்வில் 2 விருப்பப் பாடங்கள். ஆனால் தொகுதி 1ல் மூன்று விருப்பப் பாடங்கள். UPSCதேர்வில் ஆங்கிலப் பாடம் தேர்ச்சிக்கு மட்டுமே. ஆனால் தொகுதி 1ல் ஆங்கிலப் பாடத்தில் எடுக்கக் கூடிய மதிப்பெண் போட்டியாளர்களின் தர நிர்ணயத்திற்கு (Rank) சேர்த்துக் கொள்ளப்படும். எனவே கடினமாக தேர்வு என்றால் அது தொகுதி 1தான் என்று சொல்வேன்.
அதுமட்டுமல்ல ஒரு 20 ஆண்டு காலமாக பல இளைஞர்கள், இளம்பெண்கள் UPSC தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இந்திய வருவாய்ப்பணி, இந்திய காவல்பணி போன்றவற்றை பெறுபவர்கள் கூட அதிலே சேராமல் தொகுதி 1 தேர்வு எழுதி துணை கலெக்டராக பதவிக்கு வந்திருக்கிறார்கள். சமீபத்தில் இந்திய ஆட்சிப் பணிக்கு (IAS) தேறியவர்கள் கூட அதை விட்டு விட்டு தொகுதி 1 தேர்வு எழுதி துணைக் கலெக்டர்களாக வந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. எனவே எந்த வகையிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தகுதியற்றவர்களை தேர்வு செய்வதில்லை. எனவே என்னை வசை பாடுவதாக நினைத்துக் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு முறையை குறைத்து மதிப்பிடவும், கேவலப்படுத்தவும் மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர்;முயன்றிருக்கிறார் என்பதே உண்மை.
அது மட்டுமல்ல, இம்முறையில் தேர்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஸ். அலுவலர்களை இவர் அவமானப்படுத்த முயன்றிருக்கிறார். எந்த வகையிலும் தமிழிலும், ஆங்கிலத்திலும், எழுத்தாற்றலிலோ, பேச்சாற்றலிலோ, தகவல் பரிமாற்றத்திலோ, முடிவெடுப்பதிலோ, நேர்மையாக நிற்பதிலோ, சட்டத்தை கடுமையாக அமல் படுத்துவதிலோ –கடுமையாக உழைப்பதிலோ எவருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல. இன்னும் சொல்லப்போனால் ஒருபடி மேலாக இருக்கவே நாங்கள் முனைகிறோம்.
நான் எனது பணி மாற்றத்திற்கு எதிராக இவர் குறிப்பிடுவது போல எவரையும் தூண்டி விடவில்லை. 2000 கி.மீக்கு அப்பாலே உள்ள உத்தரகாண்ட் மாநிலம் மசூரியில் பயிற்சி பெறக்கூடிய நான் என் பயிற்சியில் கவனம் செலுத்தாமல் எப்படி மக்களை தூண்டி விடமுடியும். தூண்டி விடுவதற்கு நான் என்ன இயக்கமா நடத்துகிறேன், அல்லது அதற்கான நிதி வசதிதான் என்னிடத்தில் இருக்கிறதா? அதற்கான அவசியம் எனக்கு என்ன இருக்கிறது?ஆனால் இலஞ்ச இலாவண்யத்தில் புரையோடிப்போன நிர்வாக அமைப்பில் அதிகாரத் தோரணையும், ஆணவமும் மிக்க, போலி சமூகப் பார்வை கொண்ட அலுவலர்கள் மத்தியில் அத்திபூத்தாற்போல் இருக்கக் கூடிய நேர்மையான – எளிமையான அலுவலர்கள் மாற்றப்படுகிற பொழுது மக்களினுடைய கோபத்தின் - எதிர்ப்பின் வெளிப்பாடாகவே அந்தப் போராட்டம் நடைபெற்றிருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.
ஊழலில் ஊறிப்போன கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆதரவாக இந்த மாற்றம் நடைபெற்றிருக்கிறது என்று ஒரு வேளை மக்கள் கருதிய காரணத்தினால் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்திருக் கலாமே ஒழிய நான் தூண்டி அவர்கள் போராட வேண்டிய அவசியம் இல்லை.
நாட்டில் எவரும் நேர்மையாயில்லை, எவருக்கும் சிந்திக்கக் கூடிய ஆற்றல் இல்லை என்று மாண்புமிகு துணை சபாநாயகர் கருதுகிறார் என்றே நான் நம்புகிறேன். எனவே இது முழுக்க முழுக்க மாண்புமிகு துணை சபாநாயகர் அவர்களின் கற்பனையான, நயவஞ்சகமான குற்றச்சாட்டு என்று நான் தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
மேலும் என்னை மாறுதல் செய்யவும், என்னை எந்தப் பதவியில் சரியாக பயன்படுத்த முடியும் என்ற அடிப்படையிலும், ஒரு பதவியில் அமர்த்த தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று சட்டம் படித்த நான் நன்றாக அறிவேன். அதில் முரண்பட எனக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதை உணர்ந்தவன் நான்.
மேலும் ஒரு மாவட்ட ஆட்சியர், அந்த மாவட்டத்தின் மாவட்ட நிர்வாக நீதிபதி. மாவட்ட ஆட்சியர் பதவி என்பது மாவட்ட நிர்வாகத்திற்கு பொறுப்பான, கௌரவமான பாரம்பரிய அமைப்பு. அரசின் முகமான ஒரு மாவட்ட ஆட்சியரை, தன் பணிக்காலம் முழுமையும் நேர்மை தவம் புரிந்து எல்லையற்ற நியாயத்தை – உளமார்ந்த சமூகப் பரிவை வெளிப்படுத்திய அலுவலராகிய என்னை, “எச்சில் சோறு தின்று உடம்பை வளர்த்தவனே,நாயே லீவு போட்டு ஓடிவிடு” என்று இழிவு படுத்தி ஊழலில் திளைத்து ஊரைக் கொள்ளையடித்த கிராம நிர்வாக அலுவலக சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரம் தாழ்ந்து பேசினார்கள்.
அதை அப்படியே வீடியோ எடுத்து உயர் அலுவலர்கள் அனைவருக்கும் அனுப்பி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதியிருந்தேன். ஆதாரத்துடன் கடிதம் எழுதியும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக உயர் அலுவலர்களில் சிலர் என்னை கடிந்து கொள்வதிலும், கட்டுப்படுத்துவதிலும் தீவிரம் காட்டினார்கள். இந்த நிலையில் நேர்மை மிகுந்த சுயமரியாதை நிரம்பிய எந்த அலுவலரும் அப்பதவியில் தொடர விரும்ப மாட்டான்;எனக்கும் அது பொருந்தும். அதனை உயர் அலுவலர்களுக்கும் சுட்டிக்காட்டியிருக் கிறேன். எனவே இந்த மாறுதலை தடுத்து நிறுத்த வேண்டிய எண்ணம் எள் முனையளவும் என் உள்ளத்தில் உதிக்கவில்லை.
என்னுடைய பணியில் கடந்த காலத்தில் என்றைக்கும் இந்தப் பதவிதான் வேண்டும் என்று ஒருபோதும் நான் எவரையும் கேட்டதில்லை – பெற்றதில்லை. எந்தப் பதவியையும் மனம் உவந்து ஏற்று எம் நாட்டு மக்களுக்கும் குறிப்பாக, ஏழைகளுக்கு சேவை செய்ய முடியுமா என்று உளமாற முயற்சிப்பவன் நான்.
வியட்நாமின் மகத்தான தலைவர் கோசிமினின் வார்த்தையே எனக்கு நினைவுக்கு வருகிறது. அவர் மரணத் தருவாயில் இருந்தபொழுது குறிப்பிடுகிறார்.
”என் வாழ்க்கை முழுவதும் இதயப்பூர்வமாகவும், முழுமனத்துடனும் நம் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பாடுபட்டுவந்திருக்கிறேன். இந்த உலகத்திலிருந்து நான் விடைபெற்றுக் கொள்ளும் வேளையில் இன்னும் அதிக மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லையே என்ற ஒரு ஏக்கத்தை தவிர வேறு எதற்காகவும் வருந்தத் தேவையில்லை” என்று.
இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்ல விரும்புவது அதிகாரம் மிகுந்த பதவிகளில் நான் அமர்த்தப்படுகின்ற பொழுது அந்த அதிகாரத்தை ஏழைகளின் நலனுக்காகவும், அரசின் நலனை பாதுகாக்கவும் முழுமையாக பயன்படுத்த எத்தனிப்பேன். இதற்கு தடையாக இருக்கக் கூடிய இலஞ்ச இலாவண்யத்தில் திளைத்த அலுவலர்கள் மீது நான் கடுமையான நடவடிக்கை எடுக்க முற்படுவேன்.
இந்த நியாயமான நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கு பதில் என்னையே பழி வாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தொடர்ந்து அதனை நான் சந்தித்து வருகிறேன். அதன் காரணமாக நான் அவமானப்பட்டதோடு மட்டுமல்ல, பல சிரமங்களை நானும் எனது குடும்பத்தினரும் சந்தித்து வந்திருக்கிறோம். எனவே எதிர்காலத்தில் மீதம் இருக்கிற எனது 12 ஆண்டு கால பணிக்காலத்தில் எந்த முக்கியத்துவமும், அதிகாரமும் இல்லாத ஒரு சாதாரண பதவியில் தொடர்ந்து நான் அமர்த்தப்பட்டால் உண்மையில் நான் பெருத்த மகிழ்வடைவேன் என்பதை தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
நான் மாவட்ட ஆட்சியர் பதவியை ஏற்றுக் கொண்டது கோடிக் கணக்கில் சம்பாதித்து என்னுடைய குடும்ப வளத்தை பெருக்கிக் கொள்ள அல்ல. மாறாக இந்த நாட்டின் ஜீவனாக விளங்கக் கூடியது கிராமங்கள் என்று சொன்னாரே தேசப்பிதா காந்தியடிகள், அத்தகைய கிராமங்களில் வாழும் இந்த தேசத்தினுடைய முதுகெலும்பாக விளங்கக் கூடிய உழைத்து உழைத்து உருக்குலைந்து போன எளிய விவசாயிகளுடைய வாழ்வில் ஒரு சிறு மாற்றத்தையும், ஏற்றத்தையும் உருவாக்கிடவும், சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கக் கூடிய ஏழை மக்கள், தாழ்த்தப்பட்டோர், ஊனமுற்றோர், முதியோர், விதவைகள் இவர்களுடைய வாழ்க்கை உயர்வுக்கு எள்முனையளவாவது உதவ முடியுமா என்கின்ற அடிப்படையிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியை நான் பயன்படுத்தினேன். அந்த அடிப்படையில் அலட்சியப்படுத்தாத இலட்சியத்துடன் என் கடமையை ஆற்றி வந்தேன்.
என்னுடைய சுய நலத்திற்காக நான் மாவட்ட ஆட்சியர் பதவியை ஒருக்காலும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக தமிழக அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் எளிய மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த தீவிரத்தோடு பணியாற்றினேன். இதற்கான ஒன்று, இரண்டு உதாரணங்களை கீழே கண்டவாறு குறிப்பிட விரும்புகிறேன்.
மாண்புமிகு தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான உழவர் சந்தையில் தமிழகத்திலேயே இல்லாத அளவில் வறுமையோடும், வெறுமையோடும் வாழும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து அவர்களை மதிப்பூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்யக்கூடியவர்களாக - விற்பனை செய்யக் கூடியவர்களாக எம்மாவட்டத்தில் மாற்றியிருக்கிறேன்.
அது மட்டுமல்லாமல் “உழவன் உணவகம்“என்கின்ற சிறப்புத் திட்டத்தை தமிழகத்திலேயே முதன்முதலாக 2009 செப்டம்பர் மாதத்தில் தொடங்கி அது இன்று மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. நான் பதவியில் இருந்த வரை ஏறக்குறைய 1.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து, இதில் எளிய விவசாயிகளுக்கு 40 சதவீதம் அளவில் இலாபம் கிடைக்கச் செய்திருப்பதே இதன் சிறப்பிற்கு சாட்சி. இது பற்றிய பத்திரிக்கை செய்தியையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன். (இணைப்பு:7)
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 18.09.2009 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் பிற மாவட்ட ஆட்சியர்களும் இந்த திட்டத்தினை தங்கள் மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியதை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.
அதைப்போல மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் சிறப்புத் திட்டமான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்களில் மாநிலத்திலேயே மிக அதிக எண்ணிக்கையில் ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கச் செய்திருப்பது எம்முடைய மாவட்டத்தில்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதைப்போல நாமக்கல் மாவட்டம் தொடர்ந்து நுகர்வோர் நலன் காக்கும் நடவடிக்கையில் மாநில அளவில் முதல் பரிசை பெற்று வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இதைப்போல பிற திட்டங்களையும் எம்முடைய மாவட்டத்தில் நான் சிறப்பாக நிறைவேற்றி வந்திருக்கிறேன்.
இந்த திட்டங்களை சிறப்பாக அமல்படுத்தியதிலிருந்து என்னுடைய உளமார்ந்த ஈடுபாட்டினை புரிந்து கொள்ளலாம். மிகுந்த அர்ப்பணிப்போடு நான் பணியாற்றினேன். அர்ப்பணிப்பு என்பது வெறும் அலங்காரமான வார்த்தை அல்ல. அது ஆர்ப்பரித்து எழும் ஆடம்பர ஆசைகளை அடக்கும் அற வாழ்க்கை. தனக்கானதைத் தவிர்க்கும் தவம். விருப்பங்களை விட்டெறியும் வேள்வி. சுற்றிச்சுற்றி வரும் சுயநல ஆசையெனும் விட்டில்களை சுட்டெரிக்கும் சுடர் ஏந்தல்.
என்னைப் பொறுத்தவரை ஒரு மக்களுக்கான நல அரசு என்பது கவின்மிகு கட்டடங்களாலும்,கணக்கற்ற திட்டங்களாலும், கடுமையான சட்டங்களாலும் மட்டுமே உருவாக்கப்படுபவை அல்ல. அத்தகைய திட்டங்களையும், சட்டங்களையும் நிறைவேற்றக்கூடிய நிரம்பிய நியாய உணர்வும் - நெஞ்சம் நிமிர்த்தும் நேர்மைத் தன்மையும், சார்பு இல்லாத சமூகப்பார்வையும்,கடமையே கண்ணாகக் கருதும் பண்பு கொண்ட அலுவலர்களே அதன் உயிர்நாடி என்று கருதுகிறேன். இந்த அடிப்படையில்தான் எனக்கு கீழே பணியாற்றக் கூடிய அலுவலர்களை நோக்குகிறேன்.
இங்கே “மக்கள் நல்ல சட்டங்களால் ஆளப்படுவதைக் காட்டிலும் ஒரு நல்ல மனிதரால் ஆளப்படுவதே சிறப்புக்குரியது என்கிற கீர்த்தி மிகு கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டிலின் வார்த்தையை நினைவு கூற விரும்புகிறேன். “.
பல நேரங்களில் அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் எனக்குக் கீழே பணியாற்றக் கூடிய ஊழியர்களில் சிலர் ஒத்துழைத்தாலும், பலர் எனக்கு ஒத்துழைக்காது தாமதம் செய்வதிலும் கருத்தாய் இருப்பார்கள். சிலர் இலஞ்சப் புகார்களுக்கு இடம் கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். அந்த நிலையில் எங்கெல்லாம் கண்டிக்க வேண்டுமோ அங்கெல்லாம் கண்டித்தும், எங்கெல்லாம் தண்டிக்க வேண்டுமோ அங்கெல்லாம் தண்டித்தும் நான் அவர்களை நெறிப்படுத்தி மிகச் சிறந்த நிர்வாகத்தை நடத்தி வந்திருக்கிறேன்.
பல நேரங்களில் ஏராளமான லஞ்சப் புகார்கள் கீழே பணியாற்றக் கூடிய அலுவலர்களைப் பற்றி என்னிடத்தில் வருகின்ற பொழுது குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு மாவட்ட அளவிலான அலுவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே நான் இருக்கின்ற பொழுதே இலஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்ட போது நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
இந்த நிலையில் எனக்கு கீழே பணியாற்றக் கூடிய அலுவலர்களுக்கு ஒரு முன் உதாரணமாக விளங்க வேண்டுமென்று விரும்பிய நான் என்னுடைய சொத்துக் கணக்கை 2009 அக்டோபரில் நாமக்கல் மாவட்ட இணையதளத்தில் வெளியிட்டேன்.
இந்த சொத்துக் கணக்கு விவரங்களை ஒருபோதும் பத்திரிக்கை யாளர்களிடத்தில் நான் அறிவிக்கவில்லை. நான் எந்த பத்திரிக்கை யாளரிடத்திலும் இந்த தகவலை சொல்லவில்லை. இதன் பிறகு பல நாள் கழித்து டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆங்கில இதழின் நிருபர் நாமக்கல் மாவட்ட இணையதளத்திற்குள் சென்றவர் எனது சொத்து பட்டியல் விவரத்தைப் பார்த்து அடுத்தநாள் அவரே தன்னுடைய பத்திரிக்கையில் இந்தச் செய்தியை வெளியிட்டதற்கு பிறகுதான் வெளியுலகத்திற்கு நான் சொத்துக் கணக்கு வெளியிட்ட விவரம் தெரியும்.
இதில் எனக்கு எந்த விளம்பர நோக்கமும் இல்லை. மாறாக இலஞ்ச இலாவண்யத்தில் ஊறிப்போய் அரசு நலனுக்கும், மக்கள் நலனுக்கும் ஊறு விளைவிக்கின்ற ஊழியர்களுக்கு உதாரணமாக திகழ இதனை நான் வெளியிட்டேன். அதன் மூலமாக அவர்கள் மத்தியில் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதன் காரணமாக அரசு திட்டங்களை சிறப்பாக ஏழை மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும் என்று நான் நம்பினேன். அந்த அடிப்படையிலேயே சொத்துக் கணக்கை வெளியிட்டேன்.
இந்த சொத்து கணக்கை வெளியிட்டதற்கு பிறகு இது விளம்பரத்திற்கான ஒரு நடவடிக்கை என்று சிலர் வியாக்கியானம் செய்தார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அப்படி வியாக்கினம் செய்து வெறுப்பை கக்கிய மனிதர்களில் மிக முக்கியமானவர் மாண்புமிகு துணை சபாநாயகர் ஆவார்.
ஆனால் இந்த சொத்து கணக்கு வெளியிட்டதற்கு பிறகு சில உயர் அலுவலர்களால் நான் தனிமை படுத்தப் பட்டதை உணர்ந்தேன். சில உயர் அலுவலர்கள் நான் அனுப்பக் கூடிய கருத்துருக்களை நிராகரித்தனர். மாவட்டத்தில் நேர்மைக்கு புறம்பான, கடமை தவறிய சில அலுவலர்களை மாறுதல் செய்யக் கோரி கடிதம் எழுதிய பொழுது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டனர். விளைவாக நிர்வாகத்தை நடத்த நான் மிகவும் சிரமப்பட்டேன்.
இருப்பினும் தளராமல் அதே நேர்மையோடும், நியாய உணர்வோடும் அரசு திட்டங்களை கடைக்கோடி ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு கொண்டு சென்று நிறை வேற்றுவதில் தீவிரம் காட்டினேன்.
நகர்புறங்களில் வாழும் நமக்கு உணவு அளித்து உயிர் அளிப்பவன் உழவன். நாம் நலமாக வாழ, அருந்துகிற பாலை அளிப்பவன் இந்த கிராமத்து மனிதன்தான். நாம் அழகாக ஆடைகள் அணிய பருத்தி விளைவிப்பவன் எங்கோ கோவணம் கட்டி நிலத்தில் உழைக்கும் அரை நிர்வாண விவசாயிதான், நகர்புறங்களில் மாட மாளிகைகள் எழுப்பப்பட கிராமத்து தொழிலாளியே செங்கல் சுமக்கிறான். எனவே இந்த கிராமத்து மனிதர்கள் எம்மைப் போன்ற மாவட்ட ஆட்சித் தலைவரின் தனிக்கவனத்திற்கும், கனிவுக்கும், கருணைக்கும் உரியவர்கள் என்று நான் உளமாரக் கருதினேன். அதோடு இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கக் கூடிய விவசாயிகளின் முன்னேற்றத்தை தேசத்தின் உண்மையான முன்னேற்றம் என்பதாக கருதினேன்.
உண்மையையும் - உழைப்பையும் நம்பிய ஒரு எளிய விவசாயியின் மகன் நான். கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான், எம் கிராமத்து எளிய விவசாயிகள், ஏழைத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை நன்கு அறிவேன். “உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது,” என்ற பழமொழி அன்று மட்டுமல்ல, இன்றும்கூட பொருள் பொதிந்த ஒன்று என்று நான் உளமாற உணர்கிறேன்.
இன்றும் என் கிராமத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பி உழைத்த ஒரு உழவனின் வாழ்க்கையில் எந்தப் பொருளாதார மாற்றமும் ஏற்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. இது, இந்த நாட்டில் இருக்கும் கோடானு கோடி எளிய விவசாயிகளுக்கும் பொருந்தும் என்றே நான் நம்புகிறேன். எனவே ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் என்கின்ற முறையில் இவர்கள் மீது உளமார்ந்த பரிவு காட்டினேன். அவர்களுக்கு உண்மையில் ஏதாவது உதவி செய்து ஒரு குறைந்த எண்ணிக்கையிலாவது சிரம‌த்திலிருந்து மீட்டு அவர்களை கரையேற்ற முடியுமா என்று எத்தனித்தேன்.
உழவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும், பிற அரசு அலுவலகங்களிலும் கௌரவமாக நடத்திடவும், அவர்களுடைய பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்த்திடவும் அலுவலர்களுக்கு உறுதியாக அறிவுறுத்தினேன்.
விவசாயிகளினுடைய குறைதீர் கூட்டங்களை அவர்களுடைய குறைகளைக் களைய அந்தந்த கிராமங்களிலேயே சிறப்பாக நடத்தினேன். அவர்களுடைய பிரச்சனைகள் தீர முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுத்தேன். கிராம மக்களின் சிறு சிறு பிரச்சனைகள் தீர கிராம குறைதீர் மன்றத்தை அமைத்தேன். இந்த குறைதீர்மன்றம் மூலமாக 400க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தேன்.
கிராமங்களில் இருந்து தொலை தூரத்தில் இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்து கிராம மக்கள் மனுக்களை கொடுப்பதற்கு சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு நாள் வருவாய் இழப்போடு செலவும் ஏற்படுகிறது. இதனைப் போக்கிடக் கிராமங்களில் இருந்தே ஊராட்சி அலுவலகத்தில் இருக்கும் கணினியை பயன்படுத்தி வலைப்பூ மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனுக்களை அனுப்பக்கூடிய “தொடுவானம்” திட்டத்தை அறிமுகப்படுத்தினேன். அதன் மூலம் மாவட்டத் தலைநகருக்கு வராமலே கிராமத்திலிருந்தே மனுக்களைக் கொடுத்த நூற்றுக் கணக்கான மக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறோம்.
“தொடுவானம்” திட்டத்தை 1.1.2010 அன்று தொடங்கி வைத்தவர் மாண்புமிகு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு.செ.காந்திச்செல்வன் ஆவார்.
அதோடு, அரசு விதிகளின்படி கிராம நிர்வாக அலுவலர்களை கிராமங்களில் தங்க வேண்டுமென்று உத்தரவிட்டேன், நடைமுறைப்படுத்த முயன்றேன். ஆனால் இந்த சிறந்த நிர்வாகத்தை விரும்பாத கிராம நிர்வாக அலுவலர்கள் நான் கிராமத்தில் தங்கி பணியாற்ற வற்புறுத்திய காரணத்தினாலும் அவர்களில் சிலர் ஏழை எளிய மக்கள், விவசாயிகளுக்கு எதிராக இலஞ்ச இலாவண்யத்தில் ஈடுபட்ட காரணத்தினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததினாலும் என் மீது கோபம் கொண்டார்கள்.
கிராம நிர்வாக அலுவலர்கள் அரசுக்கு என் மீது புகார் செய்தார்கள். இந்த நிலையில் இவர்கள் எனக்கு எதிராக 16.4.2010 அன்று நான்கு வட்டாட்சியர்கள் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். கடுமையாக என்னை வசை பாடினார்கள். மேலே குறிப்பிட்ட மக்கள் நலனுக்கான திட்டங்களை எனது சொந்த விளம்பர திட்டங்கள் என விம‌ர்ச‌ன‌ம் செய்தார்கள்.
கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது ஊழலை எல்லாம் மறைத்து விட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு - அரசுக்கு எதிராக போராடக் கூடிய அவல நிலையை கண்டு கோபம் கொண்ட விவசாயிகள், நுகர்வோர் அமைப்புகள் ஊழல் எதிர்ப்பு அமைப்பினர் ஒன்று சேர்ந்து 20.05.2010 அன்று நாமக்கல் நகரில் எனது வேண்டுகோளையும் மீறி
இவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் முழுக்க முழுக்க கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் செய்யக் கூடிய இலஞ்ச இலாவண்யத்திற்கு எதிரான - மக்களை அலட்சியமாக நடத்துகின்ற இவர்களின் ஆணவப் போக்கிற்கு எதிரான மக்களின் கொந்தளிப்பு தான்.இதனை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
இவ்வளவு எதிர்ப்பினையும் மீறி மீண்டும் 16.06.2010 அன்று தமிழகம் முழுவதுமிருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து வந்து எனக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள். அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பிரதிநிதிகள் என்னை ஒரு மாவட்ட ஆட்சியர் என்று கூட பாராமல் கடுமையாக வசை பாடுகிறார்கள்.
"அதுவும் நீ என்ன பெரிய யோக்கியனா?" என்றும்
"எச்சில் சோறு திண்ணு உடம்பை வளர்த்தவனே" என்றும்,
"தூ நாயே" என்றும்,
''மரியாதையாக லீவ் போட்டு ஓடி விடு, உன்னை துரத்தி விடுவோம்''.
''நீ ஒரு மதம் மாறியவன்'' என்றும் பேசுகிறார்கள்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கிரிமினல்களை உருவாக்குகிறார்கள் என்றும் அவர்கள் விபச்சாரிகளைப் போன்றவர்கள் என்றும் சேசன் குறிப்பிட்டிருக்கிறார், என்று என்னை இழிவு படுத்தி பேசியிருக்கிறார்கள். இது சம்பந்தமாக நான் அப்படியே இதனை வீடியோ எடுத்து வருவாய்த்துறைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையர், தலைமைச் செயலர் உள்ளிட்டோர் அனைவருக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி கடிதம் எழுதியிருக்கிறேன். இதுவரைக்கும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது என்னை வருத்தத்தில் ஆழ்த்துவது மட்டுமல்ல எனது நேர்மையை சிறுமைப்படுத்து வதாகவே கருதுகிறேன்.
மேலும் மிகுந்த வருத்தத்தோடு சொல்லிக் கொள்கிறேன்,ஊழல் செய்யக்கூடிய மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய அலுவலர்களுக்கு சாதகமாகவே அரசு ஒரு நிலைப்பாடு எடுத்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.
அதற்குப் பிறகு தனியே கிராம நிர்வாக அலுவலர்கள் எனக்கு எதிராக வருவாய் நிர்வாக ஆணையரிடமும், அரசிடமும் புகார் அளித்திருக்கிறார்கள். அந்தப் புகாரில் நான் சார்ந்திருக்கக் கூடிய மதத்தைக் குறிப்பிட்டு அந்த மதத்தை பரப்புவதற்காக மத போதகர்களையும், கன்னியாஸ்திரிகளையும் அழைத்து செலவு செய்யச் சொன்னார் என்றும் அப்படி செலவு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்றும் முற்றிலும் கற்பனையான, பொய்யான, நயவஞ்சகமான - பிரச்சனையை திசை திருப்பக் கூடிய ஒரு குற்றச்சாட்டை இவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டிற்கான எள்முனை அளவு ஆதாரத்தைக் கூட இவர்கள் இதுவரைக்கும் அளிக்க முன்வரவில்லை.
நான் தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வர விரும்புவது என்னவென்றால், நான் எந்தக் காலத்திலும் மத அடையாளங்களை முன் வைத்து செயல்பட்டதில்லை. மதம் தனி மனிதரின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒன்று என்றும், அந்த மத நம்பிக்கை ஒரு அரசு அலுவலரின் செயல்பாட்டில் எள் முனையளவும் வெளிப்பட்டு விடக்கூடாது,குறுக்கிடக் கூடாது என்பதில் உறுதியாய் இருப்பவன் நான்.
மேலும் மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்த்து நேசிக்கத் தெரிந்தவன் நான். ஆனால் மிக நயவஞ்சகமான இந்தக் குற்றச்சாட்டை கூறுவதற்கு காரணம் இந்தப் போராட்டத்திற்கு தூண்டுகோலாக இருந்த மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் திரு.வி.பி.துரைசாமி அவர்கள்தான் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்.
காரணம் போராட்டம் நடந்து அடுத்த சில தினங்களில் இவர் நாமக்கல்லிற்கு வந்தவர் அன்றே வருவாய்த் துறை செயலரிடமும், இன்னும் ஒருசில உயர் அலுவலர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாவட்ட நிர்வாகம் சீர் குலைந்து விட்டது, உடனடியாக மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதோடு நக்கீரனுக்கு அளித்த பேட்டியிலும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சார்பாக கருத்து சொல்லியிருக்கிறார் என்பதை தங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
சாதி மதங்களைக் கடந்து மக்களை உளமாற நேசிப்பவன் நான். மக்களை நேசிப்பது என்பது அவர்களின் மரபுகளையும், மத உணர்வுகளையும் மதிக்கின்ற பொழுதுதான் முழுமை பெறுகிறது என்பதை உளமாற உணர்ந்தவன் நான். நான் நாமக்கல் மாவட்ட மக்களை மதங்களுக்கும், சாதிகளுக்கும் அப்பாற்பட்டு உளமாற நேசித்துப் பணியாற்றினேன் என்று நெஞ்சில் சத்தியத்தை தாங்கிய எவரும் அறிவர். இன்று கூட நாமக்கல் மாவட்ட மக்களிடத்தில் இதுபற்றி விசாரித்தால் உண்மை தெரியும்.
ஆனால் நயவஞ்சகமான பொய் குற்றச்சாட்டை கிராம நிர்வாக அலுவலர்கள் கூறுவது மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் திரு. வி.பி.துரைசாமி அவர்களின் தூண்டுகோலாலும், துணையாலும்தான் என்று தங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
ஒரு ஆட்சித்தலைவர் பதவியில் இருப்பவர் தன் ஆளுகைக்குக் கீழே இருக்கக் கூடிய குடிமக்கள் மீது மதம், சாதி தாண்டி பரிவு காட்ட வேண்டும். அவன் மதமும் சாதியும் பார்த்து தன் குடிமக்களை பிரித்து ஆண்டால் நியாய - நேர்மை உள்ள ஆட்சியாளராக
அவன் இருக்க முடியாது என்பது என் எண்ணம்.
நேர்மை என்பது இலஞ்சப் பணம் பெறாதது மட்டும் அல்ல,அது மதம், சாதி தாண்டி எல்லா பிரிவு மக்களையும் உளமாற நேசிப்பதையும் உள்ளடக்கியது என்று நான் நம்புகிறேன்.
உண்மையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கக்கூடிய சமூக நீதி என்பது இந்தியா என்கின்ற ஜனநாயக நாட்டில் சமூகத்தின் எல்லா பிரிவு மக்களுக்கும் அதிகார மையத்தில் பங்களிப்பது - உரிய இடத்தை அளிப்பதுதான். இவர்களின் வாதத்தின்படியே - இவர்கள் அடையாளப்படுத்துகிறபடியே என்னை கிறித்த‌வ‌னாக‌ எடுத்துக் கொண்டால் அத்தி பூத்தாற்போல் இருக்கக் கூடிய கிறித்த‌வ சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த என்னைப் போன்ற மாவட்ட ஆட்சித் தலைவர்களை பலவீனப்படுத்தி - அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென்கின்ற இவர்களின் நயவஞ்சக எண்ணம் - கோரிக்கை சமூக நீதிக்கு மட்டுமல்ல,அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.
அது மட்டுமல்லாது கிறித்த‌வ‌ சமூகத்தில் பிறந்தவர்கள் அனைவரும் மதம் பரப்புகிறார்கள் என்கிற ஒரு விஷமத்தனமான - நயவஞ்சகமான எண்ணத்தை அரசு ஊழியர்களாகிய இவர்கள் திட்டமிட்டு பரப்ப எத்தனிப்பது, சட்டத்திற்குப் புறம்பானதாகும். இவர்களின் இந்த
பொய் பரப்புரை தமிழ்நாட்டில் வாழும் லட்சக்கணக்கான கிறிஸ்துவ மக்களை இழிவு படுத்துவதோடு மட்டுமல்லாமல் பெரும்பான்மை மக்களை அவர்களுக்கு எதிராகத் திருப்பிவிடக் கூடிய அபாயத்தை உள்ளடக்கிய ஒன்றாகும்.
சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய அரசு ஊழியராக இருந்து கொண்டு சமூகத்தைப் பிளவு படுத்தக் கூடிய இவர்களை எப்படி தொடர்ந்து அரசு பதவிகளில் அனுமதிக்க முடியும்? கிராம நிர்வாக அலுவலர்களின் இந்த மத துவேச பின்னணிக்கு முழுக்க முழுக்க காரணமானவர் மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் திரு.வி.பி.துரைசாமி ஆவார் என்று தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
இந்திய அரசியல் சாசனத்து அடிப்படையில் பதவியேற்றுக் கொண்ட ஒருவர் எப்படி மத துவேசத்தை கிளப்ப முடிகிறது? இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல, அரசியல் அமைப்பு சட்டம் அளித்திருக்கக் கூடிய பிரிவு 16ன்படி என்னுடைய அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும் நான் குறிப்பிட விரும்புகிறேன். இவ்வாறு இவர் செயல்பட்டதற்கு காரணம், நான் நேர்மையாகச் செயல்பட்டேன் என்கின்ற அந்த வெறுப்பு மட்டுமல்ல அதற்கான காரணத்தை 1, 2 மட்டும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை என்கின்ற இடத்தில் கல் குவாரி அடிப்பதற்கு தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அங்கே ஒவ்வொரு நடைக்கும் அரசுக்கு இவர்கள் பணம் கட்ட வேண்டும். ஆனால் கூடுதலாக கல் எடுத்து விட்டு குறைவாக பணம் கட்டியிருக்கிறார்கள் என்கின்ற புகாரின் அடிப்படையில் என்னுடைய உத்தரவுப்படி திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அரசுக்கான இழப்புத் தொகை நிர்ணயம் செய்து வசூலிக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் அபராதத்தை ரத்து செய்யக் கோரியும்,என்னுடைய முடிவை மாற்றக் கோரியும் கல் குவாரி உரிமையாளர்கள் சார்பாக மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் திரு.வி.பி.துரைசாமி 24.12.2008ல் தங்களுடைய செயலருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் திரு.வி.பி.துரைசாமி தொடர்ந்து என்னிடத்தில் தொலைபேசியில் பேசி அபராதத்தை ரத்து செய்ய நச்சரிக்கிறார். மீண்டும் 00-00-00 தேதியன்று அபராதத்தை ரத்து செய்யவேண்டிக் கடிதம் எழுதுகிறார். இவருக்கு இதில் என்ன அவ்வளவு ஆர்வம் என்று என்னுடைய அதிகாரிகளிடத்திலும், பிறரிடத்திலும் நான் விசாரித்த போது,அவர்கள் மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர்; திரு.வி.பி.துரைசாமி கல் குவாரி உரிமையாளர்களிடம் சில லட்ச ரூபாயை லஞ்சமாக பெற்றதாக அப்பொழுதே எனக்கு தகவல் வந்தது. இது விசாரிக்கப்பட வேண்டியது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்..
இதில் அரசுக்கு இழப்பு ஏற்படக் கூடாது என்று உடனடியாக இந்த கல் குவாரியினுடைய உரிமம் புதுப்பிக்க வருகின்ற பொழுதுரூ. 5 இலட்சத்தை வசூல் செய்து விட்டோம். மேற்கொண்டு தொகையை உரிமம் புதுப்பிக்க வருகின்ற பொழுது வசூல் செய்ய அறிவுறுத்தினேன். இந்த அபராதத்தை முழுமையாக நான் ரத்து செய்யவில்லை என்று மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர்; திரு.வி.பி.துரைசாமிக்கு என் மீது தாங்க இயலா கோபம்.
பிறகு நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வசந்தபுரம் ஊராட்சி மன்றத்தலைவரை நீக்குவதற்காக அறிவிப்பு அனுப்பினேன். உடனே மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் திரு.வி. பி.துரைசாமி அவர்கள் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த முயன்றார். அதற்காக ----------------------- நாளிட்ட அவரது கடிதத்தில் வசந்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் என்னுடைய முயற்சியை கைவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதனை நான் ஏற்கவில்லை.
நிதி முறைகேடுகளை உறுதிப்படுத்தி வசந்தபுரம் ஊராட்சிமன்றத் தலைவரை ந.க.எண்: 4551/2007/ஊ.நி.3 /24-03-2010 நாளிட்ட உத்தரவுப் படி பதவி நீக்கம் செய்தேன். இதிலிருந்து ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர் பணியில் இவர் குறுக்கீடு செய்தது உறுதியாகிறது. இந்த முயற்சிக்கு இவர் ஆதாயம் அடைந்ததாக அப்பொழுதே குற்றசாட்டு எழுந்தது. இவரது இந்த ஆதாய முயற்சிக்கு நான் ஆதரவாக இல்லையென்று இவருக்கு என்மீது அப்படி ஒரு கோபம். அதுவே கிரிமினல் கதையாக கிளம்பி வந்திருக்கிறது.
மேலும் திருச்செங்கோடு வட்டம், படைவீடு வருவாய் கிராமம், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பின் போது நிலம் அளித்தவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மேல் முறையீட்டு மனு செய்திருந்தார்கள். இந்நேர்வில் ஆயிரக்கணக்கான வர்கள் வழக்கறிஞர்கள் மூலமாக மேல்முறையீடு செய்திருந்தார்கள். அந்த வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டின் போது ஒரு அளவிற்கு மேல் நீங்கள் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்துக் கொடுக்க முடியாது. எனவே நீங்கள் எந்த உத்தரவு போட்டாலும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். பிறகு நீதிமன்றத்தில் உரியவாறு முறையிட்டு நியாயமான இழப்பீட்டை பெற முயற்சிக்கிறோம் என்று என்னிடத்தில் குறிப்பிட்டார்கள்.
அந்த ஆயிரக்கணக்கானவர்களில் ஒரு 40, 50 பேரை மாண்புமிகு துணை சபாநாயகர் அவர்கள் தனியாக மாவட்ட ஆட்சித் தலைவரிடத்தில் மேல் முறையீடு செய்யச் சொல்லி, அவ்வாறே அவர்கள் மேல் முறையீடு செய்தார்கள். இவர்களுக்கு ஒரு நியாயமான கூடுதல் இழப்பீட்டுத் தொகை விதிகளுக்குட்பட்டு உத்தரவிடலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் அவர்கள் விளைநிலங்களுக்கு சதுரடி கணக்கு போட்டு பல மடங்கு கூடுதலாக இழப்பீட்டு தொகை கொடுக்க வேண்டுமென்று கோரி என்னிடத்தில் அடிக்கடி வற்புறுத்தி வந்தார்.
இதற்கிடையில் நாமக்கல்லில் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்தார் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த திரு.கோவிந்தராஜன். மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் தான் கோரியவாறு பல மடங்கு இழப்பீட்டு தொகையை திரு.கோவிந்தராஜன் பரிந்துரைக்கவில்லை என்ற கோபத்தில் அவரை தொலைபேசியில் அழைத்து அவரது சாதியை குறிப்பிட்டு அந்த தொழிலை செய்வதற்கு தான் நீ லாயக்கு அதை போய் செய்யடா என்று தரக்குறைவாக பேசினார். உடன் அவர் பயந்து போய் என்னிடத்தில் வந்து கண்ணீரோடு சொல்லி விட்டு விடுப்பில் சென்றார். அதற்கு பிறகு அவர் மாறுதலில் சென்று விட்ட நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தில் பலருக்குத் தெரியும்.
இது சம்பந்தமாக என்னையும் அடிக்கடி தொலைபேசியில் பேசி இழப்பீட்டு தொகையை அதிகரித்துக் கொடுக்கச் சொல்லி நச்சரித்து வந்தார் இவர். இதைப்பற்றி விசாரித்த பொழுது இந்த விவசாயிகளிடத்தில் அதிகமான இழப்பீட்டை பெற்று தருகிறேன் என்று சொல்லி இவர் கனிசமான அளவில் நிதி ஆதாயம் பெற்றுக் கொண்டதாக அலுவலர்கள் என்னிடம் தெரிவித்தனர். இதுவும் விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று என்று தங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
இன்னும் சில இனங்களில் எனது நடவடிக்கைகளில் இவர் தலையிட்டு பரிந்துரை செய்தார். விதிகளுக்குட்பட்டு எவையெல்லாம் செய்ய முடியுமோ அவைகளை நான் செய்தேன். விதிகளுக்கு மீறி நான் இவருக்கு உதவி செய்ய முடியாததற்கு இவர் ஆத்திரம் கொண்டு என்னை வசை பாடுகிறார். பொய் பரப்புரை செய்கிறார். கிராம நிர்வாக அலுவலர்களை தூண்டி எனக்கு எதிராக போராடச் செய்தார்.
என் களங்கமில்லாத நேர்மையை அங்கீகரிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை இவர் அவமானப்படுத்த எத்தனிக்கிறார் என்பதே எனது வருத்தமும் வேதனையும்.
இவரது இந்த நிலைப்பாடு “A little sincerity is a dangerous thing, and
a great deal of it is absolutely fatal” என்ற ஆஸ்கார் ஒயில்டின்
வார்த்தை தான் என் நினைவிற்கு வருகிறது.
பொதுவாக இவர் சுற்றுலா மாளிகையிலும், இவர் தங்கி இருக்கக் கூடிய பிற இடங்களிலும் அரசியல் தலைவர்களையோ (ஆளும் கட்சியாக இருந்தாலும்) அலுவலர்களையோ குறிப்பிட்டு தரக் குறைவாக – ஆபாசமான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தித்தான் பேசுவார் என்பதை நாமக்கல் அரசு அலுவலர்களும், பொதுமக்களும் நன்கு அறிவர்.
ஒரு பொறுப்பான உயர் பதவியில் இருக்கக் கூடிய இவர் இப்படி தரம் தாழ்ந்து பேசுவது நாகரீகம் அல்ல - ஏற்புடையது அல்ல என்று பொது மக்கள் அலுவலர்கள் பேச நான் கேட்டிருக்கிறேன். இன்னும் கண்ணியம் கருதி நான் சிலவற்றை தவிர்க்க விரும்புகிறேன். இப்படிப்பட்ட சூழலில் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவராகிய என்னைப் பற்றி மற்ற அரசு அலுவலர்களிடத்தில், கட்சிக்காரர்களிடத்தில் நக்கலாக, நையாண்டியாக, கெட்ட வார்த்தைகளைச் சொல்லி வசவு பாடிய நிலையிலும் நான் நாகரீகம் கருதி அமைதியாக இருந்தேன்.
ஒன்றை நான் மெத்த பணிவன்புடன் தங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புவது நான் மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியிலிருந்து சரியாக அரசின் திட்டங்களை நிறைவேற்றவில்லை என்றால் என்னை பணி நீக்கம் செய்யலாம்.
நான் சார்ந்த ஒரு மதத்தினருக்கு ஏதாவது சலுகை காட்டி பிற மதத்தினரை புறக்கணித்திருந்தால் என்னை சிறையில் அடைக்கலாம்.
நான் என்னுடைய மாவட்ட ஆட்சித் தலைவர் பணி மட்டுமல்ல 20 ஆண்டு கால பணிக்காலத்தில் எங்காவது ஒரு சிறு ஊழல் செய்திருந்தாலோ, ஒரு ரூபாய் லஞ்சப் பணம் பெற்றிருந்தாலோ என்னை பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடலாம்.
ஆனால் முழு நேர்மையானவனாக திட்டங்களை திறம்பட செயல்படுத்தியவனாக எல்லா மக்களையும் நேசித்து பணியாற்றிய நிலையில் மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவரின் குற்றச்சாட்டுக்களும், எனக்கு எதிராக கிராம நிர்வாக அலுவலர்களை இவர் தூண்டியதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
இந்த நிலையில் நான் அரசு திட்டங்களை தீவிரமாக கிராம மக்களிடத்திலே கொண்டு செல்ல விரும்பி நடவடிக்கை எடுத்தேன். அதனுடைய ஒரு அம்சமாக கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமத்திற்கே செல்வதில்லை என்கின்ற புகாரில் அவர்களை கிராமத்திற்கு செல்ல வலியுறுத்தினேன். கிராமத்தில் தங்க அறிவுறுத்தினேன். 23.03.2007 நாளிட்ட வருவாய் நிர்வாக ஆணையர் கடிதத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கிராம நிர்வாக அலுவலர்களை கிராமத்தில் தங்குவதை உறுதி செய்திட வேண்டுமென்று கடுமையாக அறிவுறுத்தப்பட்டது.
அந்த அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர்களைநான் கிராமத்தில் தங்க அறிவுறுத்தினேன். வருவாய் கோட்டாட்சியர்களுக்கும் நான் உத்தரவிட்டேன்.
மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் எளிய கிராமத்து விவசாயிகளிடமும், ஏழைத் தொழிலாளர்களிடமும் கையூட்டு பெற வற்புறுத்துவதை தடுக்க முற்பட்டேன்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெறுக்கத் தகுந்த வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக வெடித்துக் கிளம்பிய கருப்பு ரோஜா மார்ட்டின் லூதர்கிங் குறிப்பிடுவார் "இந்த உலகத்தில் நடக்கும் அநியாயங்களுக்கு காரணம் அதைச் செய்யக்கூடிய அக்கிரமக்காரர்கள் அல்ல. அந்த அநியாயங்களை வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய பெரும்பாலான மக்கள்தான்" என்று. அந்த அடிப்படையில்எளிய மக்களை வாட்டி வதைக்கும் சில கிராம நிர்வாக அலுவலர்களை கண்டித்தேன், தண்டித்தேன்.
அதைப் பொறுக்காமல் எனக்கு எதிராக கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தினர். எனது விசாரணையில் தெரிய வந்தது என்னவென்றால் மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் திரு.வி.பி. துரைசாமி இவர்களை அழைத்து நாமக்கல் மாவட்டஆட்சித் தலைவரை அப்புறப்படுத்த நீங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள், நான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செயலர் திரு.இராஜமாணிக்கம் அவர்களிடம் சொல்லி அதற்கு ஆவண செய்கிறேன் என்று முடுக்கி விட்டார்.
இதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் இவரிடம் நாமக்கல்லில் பேசியதும்,சென்னையில் பேசியதும், தொலைபேசியில் தொடர்பு கொண்டதும் உண்மை.
அத்தோடு மட்டுமல்லாது மத அடிப்படையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துங்கள்,நான் உங்களுக்கு துணை நிற்கிறேன் என்று தூண்டி விட்டவர் மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் திரு.வி.பி. துரைசாமி ஆவார். அந்த அடிப்படையில்தான் இவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவராகிய என்னை மிக கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஏசினார்கள்,பேசினார்கள்.
அது மட்டுமல்லாது முழுக்க முழுக்க பொய்யான, கற்பனையான, நயவஞ்சகமான குற்றச்சாட்டான மதம் பரப்ப முயற்சித்தேன் என்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் 15.06.2010 தேதியிட்ட கடிதத்தை வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதற்கு முழுக்க முழுக்க காரணம் மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் திரு.வி.பி.துரைசாமி அவர்களே ஆவார்.
மேலும், 11.10.2010 அன்று மேலவை தேர்தலில் ஆசிரியர் - பட்டதாரிகள் தொகுதி பற்றி நடைபெற்ற கூட்டத்திலும் என் மாறுதல் பற்றி குறிப்பிட்டு என்னை அவன், இவன் என்று தரக்குறைவாக கேவலமாக இவர் பேசியிருக்கிறார்.
அதோடு, கடந்த மாதத்தில் எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு துணை சபாநாயகர் அரசு பள்ளிகளை புறக்கணித்தவன் நான் என்று தேவையில்லாமல் என் மீது குற்றச்சாட்டை எழுப்பி பேசியிருக்கிறார். இவ்வாறு, எனக்கு எதிராக தரக்குறைவாக இவர் தொடர்ந்து பேசி வருகிறார் என்பதை தங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
இதிலிருந்து ஒன்றை நான் தெளிவாக புரிந்து கொண்டேன்.
நான் விதி முறைகளுக்கு புறம்பாக இவருக்கு சலுகை காட்டவில்லை என்கின்ற காரணத்தினால் என் மீது இவர் கோபம் கொண்டார்.
என்னை அகற்றுவதற்காக கிராம நிர்வாக அலுவலர்களை போராடச் சொல்லி வழிகாட்டியிருக்கிறார். மத அடிப்படையை வைத்து பொய்யான புகாரை இவர் அனுப்பச் சொல்லி தூண்டியிருக்கிறார். அதன் மூலமாக இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இவர் செயல்பட்டிருக்கிறார்.
எனவே, மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் திரு.வி.பி.துரைசாமி அவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் நான் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்து அரசு ஆணையை அமல்படுத்திய காரணத்திற்காக நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் என்று கூட பார்க்காமல் மிகவும் தரக்குறைவாகவும், கேவலமாகவும், அரசு அமைப்புக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய வகையிலும் பேசிய கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினரை பணியிடை நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழர்தம் பேராசான் வள்ளுவர் பெருந்தகை கூட,
“அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு“
அரசன் தன் பணியாளர்களை தேர்ந்தெடுக்கிற பொழுது மேற்கண்ட தகுதிகளைக் கொண்டிருப்பவர்களை குறிப்பாக பொருள் கிட்டுமேயாயினும் ஆசைப்படாதவர் களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார்.
நான் இந்த குறள் கூறும் பண்புக்குத் தகுதியான நேர்மையானவன் என்றே கருதுகிறேன். நேர்மையான எனது கோரிக்கை மீது தாங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அப்படி நடவடிக்கை எடுக்கிற பொழுதுதான் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தியதாக அமையும்.
ஒரு வேளை அத்தகைய நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உருவாகுமேயானால்எதிர்காலத்தில் சமூகப்பார்வையும்,
நிறைந்த நியாய உணர்வும், ஏழைகளின் மீது உண்மையான பரிவும் கொண்ட முழு நேர்மையான ஐ.ஏ.எஸ். அலுவலர் தமிழகத்தில் உருவாக மாட்டான் என மிகுந்த வலியோடும், வருத்தத்தோடும் சொல்லிக்கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
(உ. சகாயம்)
=========================================================
இந்தக் கடிதம் தான் கிடப்பில் போடப்பட்டது கடந்த ஆட்சியில்.
தற்போது உ.சகாயம் அவர்கள் சட்டப்படி வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது .
நேர்மையாக நடக்க முயலும் அரசு அதிகாரியை எப்படியெல்லாம் பாடாய்ப்படுத்துகிறார்கள் சுயநல அரசியல்வா(ந்)திகள்?!