சனி, 14 டிசம்பர், 2013

குளத்தில் சங்கு பிறக்கும் அதிசய கோவில்...

குளத்தில் சங்கு பிறக்கும் அதிசய கோவில்
வேதமே, மலையாய் இருப்பதால் ‘வேதகிரி’ எனப் பெயர் பெற்றது. வேதாசலம் கதலிவனம் கழுக்குன்றம் என்பன இத்தலத்துக்குரிய வேறு பெயர்கள்.
மலைமேல் ஒரு கோயில் உள்ளது.  ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே மலைக்கோயில் தாழக்கோயில் என்றழைக்கப்படுகின்றன. மலையில் தினமும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்குப் ‘பட்சி தீர்த்தம்’ என்று பெயர். மலைமீது உள்ள கோயிலில் வீற்றிருந்தருளும் இறைவன் – வேதகிரீஸ்வரர் (சுயம்பு மூர்த்தி), இறைவி – சொக்கநாயகி. இங்கு சுனை ஒன்றும் உள்ளது.
திருக்கயி3லையில் பரமேஸ்வரன்– பார்வதி திருமணம் நடைபெற்றவுடன், ஈசன் பார்வதி தேவியுடன் தனியாக எழுந்தருளி அருள்புரிந்த இடம் திருக்கழுக்குன்றம். மேலும் திருவாலங்காட்டில் காளியுடன் போட்டியிட்ட சிவன், ஊர்த்துவ தாண்டவம் ஆடிய களைப்புத் தீர, இத்தலத்திலேயே இளைப்பாறியதாகவும் புராண தகவல்கள் கூறுகின்றன.
சிவலிங்கத்தின் முன் மார்க்கண்டேயரும், பின்புறச் சுவரில் திருமாலும், திருமகளும் தம்பதியராக பரமேஸ்வரன்– பார்வதியை வணங்கிய வண்ணம் உள்ளனர். ஆலயக் கருவறை வெளிச்சுவரில் யோக தட்சிணாமூர்த்தியும், பிரம்மதேவரும் உள்ளனர். வேதகிரீஸ்வரர் முன் மண்டப வாசலின் இருபுறமும் விநாயகரும், முருகனும் அருள்பாலிக்கின்றனர்.
இந்த கோவிலில் உள்ள அம்மன் பாதாள அம்மன் என்னும் சொர்க்கநாயகி அம்மன். இவரது கருவறை வேதகிரீஸ்வரரை பார்த்த வண்ணம் பாதாளத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஈசன் கோவில் கொண்டுள்ள இந்த மலை 500 அடி உயரம் கொண்டது. 650 திருப்படிகள் இந்த மலைக்குச் செல்ல அமைக்கப்பட்டுள்ளன.
4டி வழிபாடு: வேதகிரீஸ்வரர் கருவறைக் கூரையில் சிறிய துவாரம் ஒன்று உள்ளது. அதன் வழியாக இந்திரன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடி மூலமாக ஈசனை வழிபடுவதாக ஐதீகம். ‘இடி வழிபாடு’ மறுநாள் ஆலயக் கருவறையில் கடுமையான அனல் இருக்குமாம். இடி பூஜை மூலம் ஆலயத்திற்கோ, பக்தர்களுக்கோ பாதிப்பு ஏற்படாது. மழைக்காலங்களில் மின்னல், இடி இவைகள் நம்மை தாக்காமல் இருக்க கழுக்குன்றத்து ஈசனை நினைத்து வழிபட்டாலே போதும். மலைக் கோவில் அடிவாரத்தில் இரண்டு விநாயகர்கள் தனித்தனி சன்னிதியில் வீற்றிருக்கின்றனர். பூரணை புஷ்கலா தேவி சமேதராக சாஸ்தாவும் எழுந்தருளியுள்ளார்.
கழுகுக2ளுக்கு விமோசனம்: கிருதயுகத்தில் சிரவர முனிவரின் மகன்களான சண்டன், பிரசண்டன் தீய குணங்களுடன் இருந்தனர். அடுத்தடுத்து வரும் யுகங்களில் கழுகாய் பிறந்து, கலியுகத்தில் கழுக்குன்றத்து ஈசனை வழிபட்டு சாப விமோசனம் அடையலாம் என அறிந்து, அவ்விருவரும் கழுகாகப் பிறந்து தினமும் காலையில் காசி விஸ்வநாதரையும், பகலில் கழுக்குன்ற நாதனையும், இரவில் ராமேஸ்வரத்து மகாதேவரையும் வணங்கி, மறுநாள் காலை காசி என ஈசனை வழிபட்டு வந்தனர். இதில் பகலில் திருக்கழுக்குன்ற ஈசனை வழிபட்டு, பின்னர் அங்கு சிவாச்சாரியார்கள் தரும் நைவேத்தியப் பிரசாதத்தையும் அக்கழுகுகள் உண்டு வந்தன. சிறிது நாட்களில் அக்கழுகுகள் சாபம் நீங்கப்பெற்றன.
வேதங்களே இங்கு மலையாக இருப்பதால் இத்தலத்தில் கிரிவலம் செய்வது சிறப்பாகும். புத்திர பாக்கியத்துக்கான பிரார்த்தனை தலமாக இது உள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அல்லது பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவது உகந்தது. 48 நாட்கள் அதிகாலை வேளையில் திருக்கழுக்குன்ற மலையை வலம் வந்து வேதகிரீஸ்வரரை வழிபட்டால் புத்திரப் பேறு உண்டாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
மாணிக்கவாசகருக்கு இத்தல இறைவன் தனது பற்பலத் திருக்கோலங்களைக் காட்டி குருவடிவாக காட்சியளித்துள்ளார். பிரகஸ்பதி இத்தல ஈசனை வழிபட்டு பேறு பெற்றுள்ளார்.
தாழக்கோவில்: மலைக் கோவிலில் வேதகிரீஸ்வரராக அமர்ந்த ஈசன், பக்தர்களுக்காக மலையின் கீழே தனிக்கோவிலில் பக்தவச்சலேஸ்வரராக அருள்பாலிக்கிறார். அருகிலேயே பார்வதி தேவிக்காக காட்சியளிக்கும் பொருட்டு மலைக்கோவிலில் வேதகிரீஸ்வரரே பிரத்யட்ச வேதகிரீஸ்வரராக எழுந்தருளியுள்ளார். இந்தக் கோவிலை ‘தாழக்கோவில்’ என்று அழைக்கின்றனர். இந்த கோவிலில் அம்பாள் திரிபுரசுந்தரி என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார்.
இந்த ஆலயத்தி5ல் நெடிதுயர்ந்த நான்கு கோபுரங்கள் உள்ளன. இதில் வடக்கு கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது. மேற்கு கோபுரம் 6 நிலைகளையும், கிழக்கு மற்றும் தெற்கு கோபுரங்கள் 7 நிலைகளைக் கொண்டது. கிழக்கு கோபுரமே ராஜ கோபுரமாகும். ராஜ கோபுரத்தின் உள்ளே கோபுரச் சுவரில் திருவண்ணாமலையைப் போல் கோபுரத்து கணபதி உள்ளார்.
சனி பகவான் வழிபாடு: கோபுரத்தை அடுத்து உள்ளே சென்றால் பதினாறு கால் மண்டபம் உள்ளது. அதில் உள்ள சனிபகவான் சிலை அழகு. இவரை சனிக்கிழமைகளில் 5 நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 5 சனிக்கிழமைகள் வழிபட்டு வந்தால் சகல விதமான சனிக்கிரக தோஷங்களும் அகலும்.
அடுத்ததாக நான்கு கால் மண்டபம் உள்ளது. அதன் இருபுறமும் விநாயகரும், முருகரும் உள்ளனர். இருவரையும் வணங்கி நிமிர்ந்தால், 5 நிலை கொண்ட உள்கோபுரத்தைத் தரிசிக்கலாம். அங்கிருக்கும் அனுக்கிரக நந்திகேஸ்வர தம்பதியரை வணங்கி உள்ளே சென்றால் கொடி மரம், பலிபீடம், நந்தி உள்ளது. அருகில் அகோர வீரபத்திரர் உள்ளார். இவருக்கு பவுர்ணமி நாட்களில் வெண்ணெய் சாத்தி வழிபடுவது சிறப்பாகும். அப்படியே உள்ளே நுழைந்தால் மூலவர் பக்தவச்சலேஸ்வரரை தரிசிக்கலாம்.
சுயம்பு அம்பாள்: இத்தல அம்பாள் திரிபுரசுந்தரி சுயம்புவாய் தோன்றியவள். இதனால் வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. மற்ற நாட்களில் அம்மனின் பாதத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். நான்கு திருக்கரங்களுடன், கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் அம்பாள் வீற்றிருக்கிறார். அம்மன் சன்னிதியின் எதிரில் தனியாக கொடி மரமும், பலிபீடமும் இருக்கிறது.
சங்குkulam தீர்த்தம்: மிகப் பழமையான கோயில். நாற்புறமும் நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன – கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்டவை. இவற்றுள் பிரதானமானது கிழக்குக் கோபுரம். கோயிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சந்நிதிக்கு நேர் எதிரில் வீதியின் கோடியில் மிக்க புகழுடைய ‘சங்கு தீர்த்தம்’ உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது. இதிற்கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்துதந்ததாகவும், அதுமுதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பது மிகவும் விஷேசமாகும்.
சங்கு தீர்த்தம் – பெரிய குளம். ஒரு பாதி படித்துறைகள் மட்டுமே செம்மையாக்கப்பட்டுள்ளன. நீராழி மண்டபமும், நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன.
செங்கல்பட்டு, திருப்போரூர், கல்பாக்கம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கழுக்குன்றம் திருத்தலம்.
DINA MANI..

வியாழன், 12 டிசம்பர், 2013

டாக்டர் பாஷி..

இதய மாற்று ஆபரேஷன் செய்த இளம்பெண்ணுக்கு சிக்கலான குருதி நாள நெளிவு அறுவை சிகிச்சை : நாட்டில் முதல் முறையாக மியாட் மருத்துவமனை சாதனை

 சென்னை: இதய மாற்று ஆபரேஷன் செய்த இளம்பெண்ணுக்கு, சென்னை மியாட் மருத்துவமனையில், மிக சிக்கலான குருதி நாள நெளிவு பிரச்னைக்கான அறுவை சிகிச்சையை, டாக்டர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர். இத்தகைய அறுவை சிகிச்சை செய்யப்படுவது, இந்தியாவில் இதுவே முதல் முறை .
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி நாகராஜின் மகள் அபிநயா, 25. இதயம் செயல் இழந்ததால், 2009ல், சென்னை அரசு பொது மருத்துவமனையில், இவருக்கு இதய மாற்று ஆபரேஷன் நடந்தது. உடல் நலம் சீரடைந்தவர், காப்பீட்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். எனினும், மூன்று மாதமாக, மார்பு வலி, மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, சென்னை மியாட் மருத்துவமனையில், மிக சிக்கலான, குருதி நாள நெளிவு அறுவை சிகிச்சையை, டாக்டர் பாஷி தலைமையிலான குழு, வெற்றிகரமாக செய்துள்ளது.
இதுகுறித்து, நிர்வாக இயக்குனர் மோகன்தாஸ், இதயவியல் சிகிச்சைத் துறை தலைவர் பாஷி ஆகியோர் கூறியதாவது: மார்பு வலி, மூச்சுத் திணறலால் வந்த பெண்ணை பரிசோதித்தபோது, ஏறுமுக பெருந்தமனியில், கூறுபாட்டு குருதி நாள நெளிவு மற்றும் இதயத்தின் முதன்மை வால்வில் கசிவு இருப்பது தெரிய வந்தது.
அவரது உயிரைக் காப்பாற்ற சிக்கலான, அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம்.
மாறுபட்ட இதயத்தை உடல் ஏற்க மறுப்பதை மட்டுப்படுத்த, அவர் உட்கொண்ட மாத்திரைகள், அறுவை சிகிச்சைக்கு, தொழில் நுட்ப ரீதியில் சிக்கலானதாக மாற்றியது. தொற்று ஏற்படும் வாய்ப்பும் அதிகம் இருந்தது.
கால் பகுதியில், இரண்டு குழாய்களை நுழைத்து, இதய நுரையீரல் இயந்திரத்துடன் அவரை இணைத்தோம். மார்பை திறக்கும் முன் குளிரூட்டினோம். குருதி நாள நெளிவு, மார்பறையில் புடைத்துக் கொண்டிருந்ததால், இப்படி செய்தோம். நோயுற்ற வால்வு, ஏறுமுக பெருந்தமனி, கூறுபட்ட இதய சுவர் சிரை தமனிகள் அகற்றப்பட்டன. ஏறுமுக பெருந்தமனி மற்றும் பெருந்தமனி செயற்கை வால்வு மற்றும், கிராப்ட் கொண்டு மாற்றப்பட்டன. இதய சுவர் சிரை தமனிகள் மீண்டும் பொருத்தப்பட்டன. நான்கரை மணி நேரம், அறுவை சிகிச்சை நடந்தது; பூரண குணமடைந்துள்ளார்; இதயமும் நன்றாக செயல்படுகிறது; விரைவி"ல் வீடு திரும்புவார். இதய மாற்று ஆபரேஷன் செய்த நோயாளிக்கு, இத்தகைய அறுவை சிகிச்சை செய்வது, இந்தியாவில் முதல் முறை; உலகளவில், மூன்றாவது முறை. பெண்ணின் குடும்ப ஏழ்மை கருதி, இதற்கான, 5 லட்ச ரூபாய் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்

சனி, 7 செப்டம்பர், 2013

எது மூட நம்பிக்கை?

எது மூட நம்பிக்கை?

First Published : 07 September 2013 09:13 AM IST
ஆண்டவன் மீதும் சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கும் நம்பிக்கையே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவாளர்கள் உண்டு. அவர்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் கெட்டிக்காரத்தனம் என்றும் நம்முடைய நம்பிக்கைகள் மட்டும் மூடத்தனம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். நான் சொல்கிறேன். நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை... எதுவும் கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத்தனம். அதிலே தனியாக ஒரு மூட நம்பிக்கை ஏது?
நாட்டு மக்கள் எல்லாரையுமே நாத்திகர்களாக ஆக்கிவிட முடியும் என்று நம்பித்தான் பெரியார் பிரசாரம் செய்தார். அந்த நம்பிக்கை எப்படி முடிந்தது? திராவிட நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அந்தக் காலத்தில் பலர் தி.மு.க.வில் சேர்ந்தார்கள். அதன் கதி என்ன?
நம்பிக்கை என்பது இப்படி நடக்கும் என்று ஆசைப்படுவது. அப்படி நடக்காமலும் போய்விடலாம். அப்போது அது மூடத்தனமாகிவிடுகிறது. ஆண்டவனை நம்புவதிலும், அதே நிலைதான். அது தோல்வியுற்றால் மூடத்தனம். வெற்றி பெற்றால் கெட்டிக்காரத்தனம்.
ஆகவே, நம்பிக்கை என்ற மூடத்தனம் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. அதில் ஆஸ்திகன் மட்டுமென்ன தனி ஜாதி! இதுவரை எந்த நம்பிக்கை எல்லா நேரங்களிலும் பலித்திருக்கிறது? ஆனால், நம்பிக்கை என்ற மூடத்தனத்தை ஏன் எல்லாருமே மேற்கொள்கிறார்கள்? அதிலே மனத்துக்கு ஒரு சாந்தி.
தெய்வ நம்பிக்கை, நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்குமாகவே ஏற்பட்டது. விஞ்ஞான நம்பிக்கையைப் போல் ஒரு கட்டத்தில் தோல்வியுற்றாலும் மறு கட்டத்தில் வெற்றி பெறுவதுதான் தெய்வ நம்பிக்கை.
"ஒரு சூத்திரதாரியின் கைப்பொம்மைகள் நாம்'' என்பது மறுக்க முடியாதது. மரணம் என்ற ஒன்று, அதைத் தினசரி வலியுறுத்துகிறது. இவ்வளவுக்குப் பிறகும், தெய்வ நம்பிக்கையைச் சிலர் மூட நம்பிக்கை என்று சொல்வார்களானால், "நான் ஒரு மூடன்' என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமைப்படுகிறேன்.
முட்டாள்தனத்தில் இருக்கிற நிம்மதி கெட்டிக்காரத்தனத்தில் இல்லை. உடம்பிலோ எல்லா நோயும் இருந்தும் "ஒன்றுமே இல்லை' என்று நம்புகிற முட்டாள் ஆரோக்கியமாகவே இருக்கிறான். ஒரு நோயும் இல்லாமலேயே ஒவ்வொரு மயிர்க்காலையும் பார்த்து, ""இது அதுவாக இருக்குமோ? என்று ஆராய்ச்சி செய்கிற அறிவாளி, நித்திய நோயாளியாகச் சாகிறான்.
"சுடு' என்று சொன்னவுடனேயே யாரைச் சுடுகிறோம் என்று பார்க்காமலே சுடுகின்ற படைகள்தாம் நாட்டுக்கு வெற்றி தேடித் தந்திருக்கின்றன. அந்த நேரத்தில் படைகள் பகுத்தறிவை உபயோகிக்கத் தொடங்கினால்... பகுத்தறிவு மிஞ்சும்... நாடு மிஞ்சாது!
போரில் தயக்கம் காட்டிய அர்ஜுனனைப் பார்த்துக் கண்ணன் அதைத்தான் சொன்னான்.
"போர்' என்று வந்த பின் உறவினர்கள் என்ற ஆராய்ச்சி வெற்றிக்கு உதவாது' என்றான். கடைசியில் கண்ணன் மீது மூடநம்பிக்கை வைத்து அர்ஜுனன் காண்டீபத்தைத் தூக்கினான். முடிவு வெற்றியாகக் கனிந்தது.
கீதையில் கர்மயோகம் மானிடக் கடமைகளை வலியுறுத்துகிறது. பக்தியோகம், தியானத்தை வலியுறுத்துகிறது. கடமையும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது. தியானமும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது.
"மனம் உண்டானால் வழி உண்டு' என்பது பெரியோர் வாக்கு. அது மானிட தர்மத்துக்கும் பொருந்தும். தியான தர்மத்துக்கும் பொருந்தும். ஆகவே, தெய்வ நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொல்வதைப் பற்றி நான் வருந்தவில்லை. இந்த மூடனும், அந்த அறிவாளியும் நம்மிடம் தான் வரப்போகிறார்கள்'' என்ற நம்பிக்கை தெய்வத்துக்கு இருக்கிறதே! யார் என்ன செய்ய முடியும்?!

வியாழன், 18 ஜூலை, 2013

தேவை.... நேர்மையின் சிகரம் - ஒரு சிறப்பு பார்வை... காமராஜர்...


தேவை.... நேர்மையின் சிகரம் - ஒரு சிறப்பு பார்வை
'நீதி, நேர்மை, தியாகம், தன்னலம் இல்லா உழைப்பு அத்தனைக்கும் சொந்தக்காரர்.....' என்று தங்கள் கட்சி தலைவர்களைப் பற்றி தொண்டர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வது உண்டு. மேடையில் தலைவரைப் பாராட்டும் பேச்சாளரின் புகழ் மாலைக்கு பரிசாக உடனே கரகோஷம் கிடைக்கும். ஆனால்... மேடையில் முழங்கிய அந்த வார்த்தைகளுக்கும் அவர் குறிப்பிட்ட தலைவருக்கும் கொஞ்சமாவது தொடர்பு இருக்குமா என்பது கேள்விக் குறிதான்.

நாட்டின் மீது உறுதியான பற்று, மக்கள் மீது உண்மையான அக்கறை, நீதியை மதிக்கும் தன்மை, அனைவரிடமும் நேர்மை... இன்னும் ஒரு தலைவருக்கு எத்தனை நல்ல பண்புகள் தேவையோ அத்தனையையும் தன்னிடம் கொண்ட செயல்வீரர் பெருந்தலைவர் காமராஜர். இது அவரது வாழ்க்கைப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் கூறும் உண்மை.

15-6-1903-ல் விருதுபட்டி என்ற ஊரில் சாதாரண குடும்பத்தில் பிறந்த காமராஜர் 16-வது வயதில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஆனார். பின்னர் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். நாட்டின் விடுதலைக்காக பல்வேறு தியாகங்களை செய்த இவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து பலமுறை சிறை சென்றார். காமராஜர் தனது இளமை காலத்தின் 9 ஆண்டுகளை சிறை கம்பிகளுக்குள்ளேயே கரைத்தார்.

செய்த குற்றத்துக்காக சிறை சென்றவர்களுக்கே 'தியாகச்செம்மல்' பட்டம் கொடுக்கும் இன்றைய அரசியலுக்கும்; வெள்ளையர்களை எதிர்த்து கடுமையான தண்டனைகளை அனுபவித்த அன்றைய அரசியலுக்கும் எவ்வளவு நீளமான ஏணியை வைத்தாலும் எட்டாது. அத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு சிறை தண்டனையை பெருமையாக ஏற்றுக் கொண்ட காமராஜர், சிறையில் இருந்த போதும் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியே சிந்தித்தார்.

கட்சித் தொண்டராக இருந்த காமராஜர் இந்திய விடுதலைக்குப்பின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார்.

சிறு வயதில் வறுமை காரணமாக 6-வது வகுப்பு வரை மட்டுமே படித்தார். என்றாலும், சிறை வாழ்க்கையின் போது தனது ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார்.

தான் படிக்க முடியாமல் போனது போன்ற நிலைமை, தமிழ்நாட்டில் யாருக்கும் வரக்கூடாது. அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஏக்கம் காமராஜரின் மனதில் நிலைத்திருந்தது. இந்த நிலையில் தமிழ் நாட்டின் முதல்-அமைச்சர் பதவி அவரைத் தேடி வந்தது. 13-4-1953 (தமிழ்ப் புத்தாண்டு) அன்று தமிழ் நாட்டின் முதல்-அமைச்சராக காமராஜர் பதவி ஏற்றார்.

காமராஜர் 3 முறை முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றார். மொத்தம் 9 பேரை அமைச்சர்களாக கொண்ட இவரது தலைமையிலான ஆட்சி தமிழ் நாட்டில் 9 ஆண்டு காலம் நடந்தது. இவரது ஆட்சி காலத்தில் ஏழை குழந்தைகளும் படிக்க வேண்டும் என்பதற்காக இவர் தொடங்கிய மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும்.

இவர் தனது ஆட்சிக்காலத்தில் 6000 பள்ளிகளைத் திறந்தார். 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்தார். தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆக உயர்ந்தது. அதன் பலனாக தமிழ்நாட்டில் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 7 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக அதிகரித்தது.  பள்ளிகளில் வேலை நாட்கள் 180லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது.

சென்னை இந்தியத் தொழில் நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது. காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் போது கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், புதிய அணைகளான மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகிய 9 முக்கிய நீர் பாசன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவர் காலத்தில் தமிழகத்தில் பாரத மிகு மின் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, நீலகிரி புகைப்படச்சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனை கருவிகள் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, குந்தா மின் திட்டம், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன.

முதல்-அமைச்சர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி 'காமராசர்  திட்டம்' என்ற புதிய திட்டத்தை அவர் கொண்டு வந்தார்.

அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப் பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு காமராஜர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி தனது பொறுப்பினை 2-10-1963 அன்று பக்தவத்சலத்திடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார்.

அதே ஆண்டு அக்டோபர் 9-ந்தேதி அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் ஆனார்.

1964ல் நேரு மரணமடைந்தவுடன் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன்மொழிந்து காமராஜர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966ல் லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை பிரதமராக்கினார்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்த பிறகு அன்றைய தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனை கடுமையாக எதிர்த்தவர்களில் காமராஜரும் ஒருவர்.

இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் 2-ந்தேதி காந்தியின் பிறந்த நாளில் காமராஜர் மரணம் அடைந்தார்.

அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தையும் ஒரு சில வேட்டி, சட்டைகளையும் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்தவித சொத்தோ வைத்திருக்கவில்லை. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.

இன்று கவுன்சிலர் பதவி கிடைத்தாலே கார், பங்களா, குடும்பங்களுக்கு 7 தலைமுறைக்கான சொத்து என்று இறங்கி விடுகிறார்கள். ஆனால் மிகப்பெரிய பதவிகளை வகித்த பெருந்தலைவர் காமராஜர் தனக்காகவும் எதையும் சேர்க்கவில்லை. குடும்பத்தையும் தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை.

தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி யாரும் தவறான காரியத்தில் ஈடுபடக்கூடாது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதில் காமராஜர் உறுதியாக இருந்தார். இதனாலேயே தான் முதல்வரான பிறகும் கூட அவருடைய தாயார் சிவகாமியை விருதுநகரிலேயே தங்க வைத்திருந்தார்.

ஒருமுறை அவரைப் பார்ப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் விருதுநகருக்குச் சென்றிருந்தார். அவரிடம் சிவகாமி அம்மையார் மிகவும் வருத்தப்பட்டு, 'என்னை எதுக்காக இங்கேயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல, என்னையும் மெட்ராசுக்கு அழைச்சுக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒண்டிக்கப் போறேன்' என்று கூறியிருந்தார்.

இந்த விஷயத்தை சென்னைக்கு வந்த பிறகு காமராஜரிடம் கூறினார் அந்த பிரமுகர். அதற்கு நிதானமாக பதில் சென்னார் 'அட போப்பா எனக்குத் தெரியாதா, அம்மாவைக் கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு. அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா வருவாங்க. அவங்ககூட நாலு பேரு வருவான்.

அப்புறமா அம்மாவைப் பார்க்க, ஆத்தாவைப் பார்க்கன்னு பத்து பேரு வருவான். இங்கேயே டேரா போடுவான். இங்க இருக்கற டெலிபோனை யூஸ் பண்ணுவான். முதலமைச்சர் வீட்டுல இருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை மிரட்டுவான். எதுக்கு வம்புன்னுதான் அவங்களை விருதுநகர்லேயே விட்டு வச்சிருக்கேன்' என்றார்.

அவரது நேர்மைக்கு இது ஒரு உச்சகட்ட எடுத்துக்காட்டு. இப்படி எத்தனையோ சம்பவங்கள்.

கல்வி வளர்ச்சியில் சாதனை படைத்த காமராஜருக்கு ஒரு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முன் வந்தபோது நாட்டிலே எத்தனையோ விஞ்ஞானிகள், மேதாவிகள் இருக்கிறார்கள். அவர்களை கண்டுபிடிச்சு இந்த பட்டத்தை கொடுங்க, எனக்கு வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

தன்னைப்பற்றி என்றுமே கவலைப்படாத காமராஜர் நாட்டைப் பற்றியும், நாட்டு மக்களைப் பற்றியும், வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தையும் பற்றி மட்டுமே கவலைப்பட்டார்.

காமராஜரின் ஆட்சி காலத்தில் தான் தமிழ் நாட்டில் கல்வி, விவசாயம், தொழில், சாலைகள், மின்சாரம், நீர் பாசனம் என்று அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்றது. அவர் அமைத்த அடித்தளமே தமிழகத்தின் வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக அமைந்துள்ளது.

அவருக்குப் பின் எத்தனையோ தலைவர்கள் வந்திருக்கிறார்கள். என்றாலும் காமராஜர் என்ற பெயரைச் சொன்ன உடனே எழுந்து நின்று கும்பிடத் தோன்றுகிறது. யாரையும் பிரித்து பார்க்காத நேர்மையின் சிகரமாக திகழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அவர் போன்ற இன்னொரு தலைவர் தேவை.... இனி காண முடியுமா? என்ற எதிர்பார்ப்பு நேர்மையை நேசிக்கும் அனைவருடைய நெஞ்சத்திலும் ஏக்கமாக எழுந்து நிற்கிறது...