செவ்வாய், 28 ஜூன், 2011

வளம் இழந்த வனப்பரப்புகள்......


வளர்ச்சி என்ற பெயரில் அடர்ந்த வனங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கும் வேளையில், அண்மையில் வெளிவந்த "ஃபாரஸ்ட் சர்வே' அறிக்கை இந்தியாவில் பசுமைப்போர்வை உயர்ந்து வருவதாகக் கூறுவது மிகவும் வேதனையான நகைச்சுவை.
இந்தியாவிலும் சரி, உலகில் எந்த நாடாக இருந்தாலும் சரி, பூமியின் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 22 சதவீதமாவது அடர்ந்து படர்ந்து மரங்களுடன் பல்லுயிர்ப் பெருக்கங்கள் மிகுந்த வனங்கள் இருக்க வேண்டும் என்ற கருத்தை யாரும் மறுப்பதற்கில்லை.
ஆகவே, வளர்ச்சி என்ற போர்வையில் சுரங்கம், அணைக்கட்டு என்று வனங்களை இனி தாரைவார்க்க அனுமதிக்கவே முடியாது என்ற தர்மத்தை மறந்து, ஒரிசாவில் போஸ்கோ என்ற மாபெரும் தென்கொரிய நிறுவனத்துக்கு சுமார் 40,000 ஏக்கர் வனப்பகுதி வழங்கப்பட்டுள்ளதில் தனியார் நிலங்களும் அடங்கும்.
ஓரளவு வனப்பகுதியில் பழங்குடி விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்கின்றனர். போஸ்கோ ஸ்டீல் ப்ராஜக்ட் 12 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு கொண்டது. இந்த ஆண்டு மே மாதம் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வனப்பகுதியை மேற்படி ஸ்டீல் சுரங்கத் தொழிலுக்குத் தாரை வார்க்க அனுமதித்துவிட்டது.
தனியார் நிலத்தை வாங்கப் பணத்துடனும், காவல்துறை உதவியுடனும் நிறுவன அலுவலர்கள் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் பலிதுத்தம் கிராமத்துக்கு வந்தபோது, சுமார் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி நிலம் வழங்க மறுத்துள்ளனர்.
சுமார் 600 காவலர்கள் துப்பாக்கியுடன் விவசாயிகளை வேட்டையாடத் தயாராயிருந்தபோது, முதலமைச்சர் நவீன்பட் நாயக், ""விவசாயிகள் சம்மதமில்லாமல் நிலத்தை வழங்க முடியாது'' என்று கூறினார். அப்படியும் நுவாகான் கிராமத்தில் வெற்றிலை பயிரிட்டவனுக்கு இழப்புத்தொகை வழங்காமல் யாருக்கோ பல லட்சம் பணம் கொடுத்துக் கொடிக்காலைத் துவம்சம் செய்ததால், விவசாயிகள் கொதித்தெழுந்துள்ளனர்.
இவைதவிர, சுந்தர்கார் மாவட்டத்தில் கந்தாதார் மலைப்பகுதிகளில் சுமார் 6,000 ஹெக்டேர் வனம் தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்து வனங்களில் மக்கள் உரிமைச்சட்டம் 2006-ஐ பயன்படுத்தி, போஸ்கோவின் சுரங்கச் சுரண்டலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், பழங்குடி மக்கள் புரோகிதர் ரேணு சௌத்ரி, ""இங்குள்ள பழங்குடி மக்களின் போராட்டம் வலுப்பட்டுள்ள நிலையில் இப்பகுதி வனம் போஸ்கோவிடமிருந்து காப்பாற்றப்பட்டுவிடும்...'' என்று கூறியுள்ளார். இப்படிப்பட்ட பிரச்னைகள் ஒரிசாவில் நிறைய உண்டு.
மத்தியப் பிரதேசத்தில் கத்திவாடா வனம் பழங்குடி மக்களின் அனுபவத்தில் உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க பீலர், பாரியர், கோலியர் வசிக்கும் இடங்களை அப்புறப்படுத்தி அதை மனித நுழைவுக்கு அனுமதியில்லாத சரணாலயமாக்கும் திட்டத்தை எதிர்த்து மேற்படி பழங்குடி மக்கள் தங்கள் வசிப்பிடத்தைக் காலிசெய்ய மறுத்துவிட்டனர்.
இம்மக்கள் இந்த வனங்களில் உள்ள இலுப்பைப் பூ, பீடி இலை, அரக்கு, கோந்து, தேன் ஆகியவற்றைச் சேகரம் செய்து பிழைப்பு நடத்துகின்றனர். சால்விதை, இலுப்பை விதைகளும் தாவர எண்ணெய் உற்பத்திக்கு உதவும். அவையும் சேகரிக்கப்படுகின்றன.
மேதா பட்கர் போராடிக் கொண்டிருக்கும் நர்மதை மீது கட்டப்படவுள்ள சர்தார் சரோவர் அணைத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு மூன்று மாநிலங்களில் பிரச்னையாகிவிட்டது. இதனால் குஜராத், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் சார்ந்த 1,10,000 ஹெக்டேர் வனம் இழக்கப்படுகிறது.
வன ஆக்கிரமிப்பு - வன அழிவுக்குரிய உதாரணங்கள் ஒரு சில மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. வனம் மற்றும் சூழலியல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்காகக் காத்துக்கிடக்கும் காகிதத் திட்டங்களுக்கெல்லாம் அனுமதி வழங்கப்படுமானால், இந்தியாவில் சொல்லிக்கொள்வதற்கு வனம் என்று எதுவுமே எஞ்சாது. நாமெல்லாம் கார்பன்-டை-ஆக்சைடை சுவாசித்துச் சாவதைத்தவிர, வேறு வழியில்லை!
வனம் என்றால் வருமானம் இல்லாத ஒரு பொருள் என்பதாகவும், வனம் உள்ள இடத்தில் தொழிற்சாலையோ, அணையோ கட்டினால்தான் வருமானம், வேலைவாய்ப்பு எல்லாம் ஏற்படும் என்பதாகவும் ஒரு தப்பான எண்ணம் மனிதனின் சுயநலத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஒரு வனம் வனமாகவே நீட்டிக்கப்பட்டு வனமே வருமானத்தை உயர்த்தாது என்ற சிந்தனை வளர்ச்சிப் பொருளாதாரத்தை நேசிக்கும் வறட்டுப் பொருளியல் நிபுணர்கள் மத்தியில் நிலவுகிறது.
ஒவ்வொரு நாளும் இந்திய வனம் ஒவ்வொரு ஓரமாக அழிக்கப்படுகிறதே தவிர, ஆக்கப்படுவதாகத் தோன்றவில்லை. வனங்களின் வளத்தைப் பெருக்கி மக்களுக்கு வாழ்வு தரும் மரங்களை நட வேண்டும் என்று பலரும் பேசுவதுண்டு. பேசியதைப்போல் வனங்களில் வெட்டப்பட்ட மரங்களை மீண்டும் நடும் திட்டம் அரிதாகவே செயல்படுகிறது.
வனத்தில் மரங்களை அழிப்பவர்கள் வனங்களில் வாழும் பழங்குடிகள் அல்லர். மரம் வெட்டும் ஒப்பந்தக்காரர்கள் தடுக்கப்பட்டாலும் ஊழலில் திளைக்கும் வளர்ச்சிப் பேயர்களான போஸ்கோவும் கோஸ்கோவும் அழிக்கின்றனர். இவர்கள் வழங்கும் எஃகு யாருக்குத் தேவை?
உத்தரகண்ட் மாநிலத்தில் புனித கங்கையை மாசுபடுத்தும் நீர்மின்சாரத் திட்டங்களின் சட்டவிரோத கல்குவாரிகளை அப்புறப்படுத்தி, 114 நாள்கள் உண்ணாவிரதம் இருந்த நிகமானந்தா சுவாமிகள் கங்கையைக் காப்பாற்ற உயிர்த்தியாகம் செய்தும் பயன் உண்டா?
கழுகுகள் வட்டமிடும் வானத்தில் ஓர் அன்னப்பட்சியாக வாழ்ந்த நிகமானந்தா இறந்துவிட்டார். நிகமானந்தா மறைந்த பிறகுதான் அப்படியொருவர் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்குச் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த விவரமே தெரியவந்தது. அண்ணா ஹசாரேவுக்கும், பாபா ராம்தேவுக்கும் வழங்கப்பட்ட விளம்பரம் நிகமானந்தாவுக்குக் கிடைக்கவே இல்லை. நிகமானந்தா மறையும் முன் ஊடகங்கள் அவரைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
அண்ணா ஹசாரே மற்றொரு அமைதிப்புறா. எனினும், பிணம் தின்னும் கழுகுகளுடன் போராட குறைந்தபட்சம் பாபா ராம்தேவ் போன்ற சண்டைக்கோழிதான் லாயக்கு என்று தோன்றுகிறது. கறுப்புப்பண எதிர்ப்பு அலைகளுக்குத் தயாரான சண்டைக்கோழிகள் வாழ்வு தரும் மரங்களைக் காப்பாற்றவும் முன்வர வேண்டும். வனவளர்ப்பு என்றால் பசுமைப் போர்வைக்குமேல் வனப்பாதுகாப்பு அலுவலர்கள் வேறு சமூகப் பொருளாதாரம் பற்றி விவாதிக்க முன்வருவதில்லை.
வனச்சுரண்டலுக்கு வழிகொடாமல் வனப்பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று கூறும் வனஇயல் வல்லுநர்கள், ஆண்டுதோறும் பட்ஜெட் தொடருக்குமுன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருளாதார அறிக்கையில் (எக்கனாமிக் சர்வே) வனங்களின் மதிப்பீடு, வனங்களின் பொருளியல் முக்கியத்துவம் இடம்பெறுவது இல்லை. இந்தியாவின் தேசக்கணக்கில் வனம் விட்டுப்போனது ஏன்?
பொதுவாக வன விளைபொருள்கள் மூலம் பொருளாதாரம் பலம் பெறுவது பற்றிய மதிப்பீடுகள் உண்டு. அப்படி வருமானத்துக்கு ஆதாரமான வனங்கள் பற்றிய மதிப்பீடுகள் உண்டா? வெட்டப்படும் மரங்கள், மூங்கில் பற்றிய மதிப்பீடுகள் உண்டு. ஏனெனில், காவலர்களுக்கும் வருமானத்தில் பங்கு உள்ளது. ஆனால், ஒரு வனம் வழங்கும் ஆக்சிஜன் மூலம் பெறக்கூடிய கார்பன் கிரெடிட் பற்றிய கணக்கு உண்டா?
ஒரு வனம் வழங்கும் மூலிகை, எண்ணெய் வித்துகள், ஏற்றுமதிக்குரிய மரப்பட்டை, வேர் போன்ற மருத்துவப் பொருள்கள், ஆடு மாடு தீவனம், பசும்புற்கள், களைப்புற்கள், வனம் வழங்கும் தீவனத்தால் பெறும் பால் அளவு, வனங்களால் ஏற்றமாகும் நீர்ப்பிடிப்பு, பாசன நீர், வனம் வழங்கும் மண்வளம், வனம் வழங்கும் ஜீவனோபாயம், அதாவது வனத்தில் விளையும் மலர்கள், விதைகள், மூலிகை போன்ற பொருள்களைச் சேகரித்துப் பிழைப்பை நடத்தும் பழங்குடி மக்களின் வசிப்பிடம், அவர்கள் பெறும் வேலைவாய்ப்பு ஆகியவை மதிப்பிடப்பட்டு தேசியக்கணக்கில் சேர்க்கப்பட்டுப் பொருளாதார அறிக்கை சமர்ப்பிக்கப்படுமானால், வனங்களும் வளர்ச்சிப் பொருளாதாரத்தின் அம்சம் என்பது புலனாகும்.
யாரோ சில தனிப்பட்ட முதலாளிகளும், நல்ல சம்பளம் பெறக்கூடிய மேல்தட்டு நடுத்தர வர்க்கமும் ஆடம்பரமாக வாழவே வனங்கள் அழிக்கப்பட்டு, தொழிற்சாலைகளும் ஆலைகளும் உருவாக்கப்பட்டு மாசுகள் ஏற்படுகின்றன. ஒரு பசுமாட்டைக் கொல்வது எவ்வளவு பாவமோ அவ்வாறே வனங்களை அழித்து ஆலைகளும் சாலைகளும் ஏற்படுத்துவதும் கொடிய பாவச்செயல்.
வனம் வழங்கும் வளத்தில் அரிய தாவரங்கள், பல்வேறு ஜீவராசிகளின் பல்லுயிர்ப் பெருக்கப் பொருள் மதிப்பீடு அங்கு அந்த வனத்தை அழித்து ஏற்படக்கூடிய தொழில் வருமான மதிப்பீட்டைவிட அதிகம் என்பதால், வனங்களைச் சேதப்படுத்தாமல் தொழிலை வளர்க்கத் திட்டமிட வேண்டும்.
வனங்களில் உள்ள பல மரங்கள் தெய்வீகமானவை. புனிதம் கருதி வெட்டும் மரபு இல்லை. சூழலுக்காக உயிர் துறந்த நிகமானந்தா வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார். நிகமானந்தாவைத் தொடர்ந்து ஜீவன்முக்தர்கள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டாம். குறைந்தபட்சம் வனங்கள் தொடர்ந்து அழிக்கப்படாமல் காப்பாற்றவும், போஸ்கோவையும் கோஸ்கோவையும் எதிர்த்து ஏழைகளின் நலவாழ்வுக்காக ஆசிரமவாசிகள் அமைதியாகப் போராடினால் சமூகத்தில் சாமியார்களுக்குள்ள அவப்பெயர்கள் மாறவும் வாய்ப்புண்டு. கறுப்புப் பண எதிர்ப்புப் போராட்டம் தேவைதான் என்றாலும், வனப் பரப்புகளைக் குறையாமல் பார்த்துக் கொண்டு வன வளத்தை மேம்படுத்துவது அதைவிடவும் முக்கியமானது.

காமராஜ் வழியில்... அண்ணா வழியில்...


ஒரு மனிதன் உயிரோடு வாழ்கிறான் என்பதற்கு எது சான்று என்றால் எண்ணும் எழுத்தும் கற்றவனாக இருத்தல் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
கல்விச் செல்வத்தைப் பெறாதவனுடைய கண்கள் இரண்டிலும் புண்கள் என்கிறார்.
முனிவர்களும் ஞானிகளும் தங்களது குழந்தைகளாக மாணவர்களைத் தங்களோடு வைத்து உணவு, உடை, உறையுள் அனைத்தும் தந்து கல்வி கற்றுத்தந்த நாடு இது.
"எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்' என்றாள் அவ்வைப் பெருமாட்டி. "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது அதிவீரராமபாண்டினின் வெற்றிவேட்கை என்கிற நீதிநூல்.
மூன்று கல் தொலைவுக்கு ஒரு கல்விக்கூடம் என்று கொண்டு வந்த காமராஜ் தான் முதன்முதலாக மாணவர்களிடம் சொன்னார். பிள்ளைகளா, ""பிச்சை எடுத்தாவது படின்னு புலவங்க சொல்லியிருக்காங்கன்னேன். நான் சொல்லுதேன்; நீங்க போயிப் பள்ளிக்கூடத்திலே படிங்க. நான் போயி உங்களுக்காகப் பிச்சை எடுக்கேன்னார்.''
அரசுப் பள்ளிக்கூட ஆசிரியர்களின் மாநாட்டில் பேசும்போது சொன்னார். ஏழைப் பிள்ளைகள் நல்லா சொல்லிக் கொடுங்கய்யா, ஏமாத்திறாதீங்க. படிக்க வச்சிட்டீங்கன்னா பொழச்சுக்கிடுவாம்ய்யா. கை கூப்பி நின்றார். ஒருநேரம் சோறு போட்டாவது ஏழைகளைப் பள்ளிக்கு வர வைக்க ஏற்பாடு செய்தார். 1963-ல் தி.மு.க.வில் இருந்த எம்.ஜி.ஆர். காமராஜின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு, "காமராஜ் என் தலைவர்; அண்ணா என் வழிகாட்டி' என்றார். அதனால்தான் எம்.ஜி.ஆர். மதிய உணவை சத்துணவு ஆக்கினார்.
1980 சட்டப்பேரவைத் தேர்தலிலே பேசினார். கும்பகோணத்திலே எங்கள் தாய், வீடுகளிலே பத்துப் பாத்திரம் தேய்த்து என்னையும் என் அண்ணனையும் காப்பாற்றினார். வேலைக்குப் போகும் நேரங்களிலே என்னையும் என்னுடைய அண்ணனையும் வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டுப் போய்விடுவார். காரணம், பசியில் நாங்கள் பக்கத்து வீட்டில்போய் கையேந்திவிடக் கூடாது என்று. மேடைகளிலே தனது உண்மை வாழ்க்கையை எம்.ஜி.ஆர். சொன்னார். அதனால்தான் சோறு என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். சத்துணவை அதனால்தான் போட்டேன்.
தன்னை ராஜராஜ சோழன் பரம்பரை என்றெல்லாம் பிதற்றவில்லை. அவர்கள் எல்லோரும் கல்வியில் அக்கறை காட்டியதற்குக் காரணம் அவர்களுக்குச் சரியான கல்வி கிடைக்கிற வாய்ப்பில்லை.
அந்தக் கல்வியின் நிலைமை இன்று என்ன? அரசுப் பள்ளிக்கூடங்களிலும், மாநகராட்சிப் பள்ளிக்கூடங்களிலும் மாநிலத்திலேயே முதலாவது வருகிறார்கள் மாணவர்களும் மாணவிகளும். ஆனால், அரசு ஊழியர்களும் அரசுப் பள்ளிக்கூட ஆசிரியர்களும்கூட தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிக்கூடங்களிலே சேர்க்கின்றனர். நமது கல்வியாளர்களும், வருங்காலம் பற்றி அக்கறையுள்ள பெரியவர்களும் கலைமகள் விலைமகளாக்கப்பட்டு விட்டாள் என்று புலம்புகின்றனர்.
அநியாயக் கொள்ளை. நடுத்தர மக்களும் தங்கள் நிலைபுரியாமல் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகளிலே தங்கள் குழந்தைகளைச் சேர்த்துவிட்டுக் கட்டணம் கட்ட முடியாமல் அவமானப்படுகின்றனர். மேட்டுப்பாளையத்தில் ஒரு தாய் கேவலம் யு.கே.ஜி. படிக்கிற தன் குழந்தைக்குக் கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
முதலில் அரசு செய்ய வேண்டியது அரசுப் பள்ளிக்கூடங்கள் பெற்றிருக்கிற தேர்ச்சியை விளம்பரம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களின் எல்லாப் பிரிவினரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிக்கூடங்களில்தான் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். அரசுப் பள்ளிக்கூடத்தில் வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்.
கொள்ளையும் அடித்துவிட்டு, கல்வித் தந்தை, கல்வி வள்ளல், கல்விக் கடவுள் என்று பட்டம் போட்டுக் கொள்கிறவர்களைத் தண்டிக்க வேண்டும். நான்கு, ஐந்து ஆண்டுகளிலே கல்விச்சாலைகளை அமைத்தவர்கள் கோடீஸ்வரர்களாக வலம் வருகிற கொடுமையைத் தடுத்தேயாக வேண்டும். அரசுப் பள்ளிக்கூடங்கள்தான் பள்ளிக்கூடங்கள். மற்றவை அரசு அங்கீகாரம் பெற்றவைதான் என்று விவரம் சொல்ல வேண்டும்.
இன்னொரு கொடுமை, ஒருமுறை சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிவிட்டால் அதிலே பாதிப் பேர் கல்வி வணிகர்களாகி விடுகின்றனர். காந்தியடிகள் படத்தையும் காமராஜ் படத்தையும் போட்டுப் பிழைப்பு நடத்துகிற காங்கிரஸ்காரர்களும் இந்தக் கல்விக் கொள்ளையர்கள் மத்தியில் இடம்பெற்றிருக்கின்றனர் என்பதுதான் மிகப்பெரிய கொடுமை. எல்லோருக்கும் கல்வி அளிக்க ஆணையிட்ட அவர்கள் படங்களையோ சிலைகளையோ தொடக்கூடத் தகுதியற்றவர்கள் இவர்கள்.
அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி என்று மூன்று பிரிவுகளாகக் கல்விச்சாலைகள் செயல்படுகின்றன. ஏழைகளுக்கும் வசதியற்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் என்றும், வசதி படைத்தவர்களுக்குத்தான் தனியார் பள்ளிகள் என்றும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
பணம் படைத்திருந்தால் நல்ல கல்வி, ஆங்கிலக் கல்வி என்றும், பணம் இல்லாத ஏழைகளுக்கு அரசுப்பள்ளி என்பதும் சமத்துவ, சமதர்ம சமுதாயம் என்கிற தத்துவத்தையே கேலி செய்வதாக அல்லவா இருக்கிறது? "சமச்சீர் கல்வி' என்கிற போர்வையில் கல்வியின் தரத்தைக் குறைப்பது எப்படித் தவறோ அதேபோல குழந்தைகளை ஏழை பணக்காரர்கள் என்று பார்த்துப்பார்த்து அதற்குத் தகுந்தாற்போல கல்வி அளிப்பது என்பதும் தவறுதானே!
கல்விதான் இலவசமாகத் தரப்பட வேண்டியது. அதை இலவசமாகத் தருவதற்கே அரசு முயல வேண்டும், மற்ற இலவசங்களைப் புறந்தள்ளி விடலாம். மக்கள் வருத்தம் கொள்ள மாட்டார்கள். ஆனால், ஏழையாகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தரமான கல்வி தரப்படாது என்று ஒரு குழந்தைக்கு மறுக்கப்படுவது அநியாயத்திலும் அநியாயமல்லவா?
"உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்'.
செல்வர்கள் முன் வறியவர்கள் கையேந்தி நிற்பதுபோல கற்ற பெரியவரிடம் பணிந்து கல்வியைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. ஆனால், இன்று நிலை கையேந்தி நின்றவர்களுக்கு உதவினார்கள் செல்வந்தர்கள். அதுபோலவே கல்வியை நல்லுடைமையாகக் கொண்டிருந்த பெரியவர்களும் அதனைத் தானமாகத் தருவதிலே மகிழ்வு கொண்டிருந்தனர் .
இன்று பணக்காரர்கள்தான் இருக்கின்றனர். செல்வந்தர்கள் இல்லை. பணக்காரர்களுக்கு எல்லாமே வணிகம்தான்.
அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் அரசுப் பள்ளிகளிலும் அதிகச் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால், சிறப்பான கல்வி கற்றுத் தரப்படுவதில்லை. தனியார் பள்ளிகளில், தரமான கல்வி என்கிற பெயரில் பெற்றோர் பிழிந்தெடுக்கப்படுகின்றனர். கேள்விகேட்க ஆளில்லை என்கிற நிலைமை.
தனியார் பள்ளிகளுக்கும் கட்டண நிர்ணயக் குழுவுக்கும் இடையில் நிர்ணாயசமாகச் செயல்பட வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்லவா? அரசுதானே பெற்றோர்களின் பிரதிநிதியாகச் செயல்பட வேண்டும்?
அனைவருக்கும் கல்வி என்பது மட்டுமே முக்கியமல்ல. அனைவருக்கும் தரமான கல்வி என்பதும், இலவசக் கல்வி என்பதும்கூட முக்கியம். பத்தாம் வகுப்பு வரையில் அனைவருக்கும் இலவசக் கல்வி என்பது பெருந்தலைவர் காமராஜும், அறிஞர் அண்ணாவும் வரையறுத்த வழிமுறை. கல்விக் கொள்ளையிலிருந்து தமிழகத்தைக் காக்க வேண்டிய கடமை தமிழக முதல்வருக்கு உண்டு. இது அவருக்குத் தெரியாமலா இருக்கும்?

பெட்ரோல் விலை உயர்வு..

சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்த உடனேயே பெட்ரோல் விலையை உயர்த்தும் பணியை மத்திய அரசு செவ்வனே தொடங்கிவிட்டது. தேர்தல் முடிவுகள் வந்த மறுநாளே பெட்ரோல் விலை ரூ.5 உயர்த்தப்பட்டது. ஆனால், இந்த உயர்வு எங்களுக்குப் போதாது என்று எண்ணெய் நிறுவனங்கள் புலம்பிக்கொண்டிருக்கின்றன.

 இதற்கு மனமிரங்கி அரசு இன்னொருமுறை பெட்ரோல் விலையை உயர்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த உயர்வுகளெல்லாம் தேர்தலுக்கு முன்பே வந்திருக்க வேண்டியவைதான். ஆனால், அரசின் முயற்சியால் ஒத்திப்போடப்பட்டு வந்தன.
 கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே பெட்ரோல் விலையைச் சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயிக்கும் உரிமையை பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிவிட்டது. பெட்ரோல் விலையை நிர்ணயிப்பதில் இருந்து அரசு ஒதுங்கிக் கொண்டுவிட்டதால், எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் இஷ்டப்படி விலையை உயர்த்துகின்றன. ஆனாலும் டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை நிர்ணயிக்கும் உரிமையை அரசே இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறது.
 பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமை எண்ணெய் நிறுவனங்களின் கையில் இருக்கும்போது, விலையேற்றத்தைத் தள்ளிப்போடும் அதிகாரம் மட்டும் அரசுக்கு எப்படி வந்தது என்று அப்பாவி பொதுஜனங்கள் கேட்கலாம். வெளிப்படையாக ஒன்று, மறைமுகமாக ஒன்று இருப்பதெல்லாம் அரசியலில் சாதாரணம். இதுவும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.
 ஒன்றுமட்டும் தெரிகிறது. பெட்ரோலிய நிறுவனங்களிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டோம் இனி எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று அரசு கூறுவதெல்லாம் பொய். விலையேற்றத்தைத் தள்ளிப்போட முடிந்த அரசால், விலையையும் கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் உண்மை.
 அரசு நினைத்தால் விலையை நிர்ணயிக்கும் உரிமையை பெட்ரோலிய நிறுவனங்களிடமிருந்து திரும்பப் பெறக்கூட முடியும். ஆனால், பொருளாதாரச் சீர்திருத்தத்தையும், வளர்ச்சியையும் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளைக் கொண்ட இந்த அரசிடமிருந்து இதை எதிர்பார்க்க முடியாது.
 இவர்கள் விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்று கூறுகிறார்கள். அதற்கான காரணங்களையும் அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காரணங்கள் எல்லாம் நியாயமானவையல்ல. மக்களை ஏமாற்றும் தந்திரங்கள். இந்தத் தந்திரங்களைக் கொண்டுதான் அரசு அப்பாவி மக்கள் மீது விலையேற்றத்தைத் திணிக்கிறது.
 பெட்ரோலியப் பொருள்களின் விலையேற்றத்துக்கு அரசு கூறும் காரணங்கள் மூன்று. முதலாவது காரணம், கச்சா எண்ணெய் விலை. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால் அதற்கேற்றபடி பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவதைத் தவிர, வேறு வழியில்லை என்று அரசும் எண்ணெய் நிறுவனங்களும் கூறுகின்றன.
 ஆனால், இதில் உண்மையில்லை. கச்சா எண்ணெயின் இப்போதைய விலை பீப்பாய்க்கு 94 அமெரிக்க டாலர்கள். கடந்த மாதத்திலிருந்து எடுத்துக்கொண்டால் சராசரியாக 100 டாலர்கள். ஒரு டாலரின் மாற்று மதிப்பு 44.9 ரூபாய். சராசரியாகக் கணக்கிட்டால் ஒரு பீப்பாயின் விலை ரூ.4,490. ஒரு பீப்பாய் என்பது 159.99 லிட்டர். ஆக ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் மதிப்பு ரூ.28.
 பெட்ரோல் உற்பத்தியில் கச்சா எண்ணெய் 90 சதவீதமும் உள்நாட்டில் தயாராகும் பொருள்கள் 10 சதவீதமும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஒட்டுமொத்தமாக உற்பத்திச் செலவு ஒரு லிட்டருக்கு 30 ரூபாயைத் தாண்டாது. இந்தக் கணக்கின்படி பார்த்தால் கடந்த 2006-07-ம் ஆண்டில் உற்பத்திச் செலவு ரூ.19.47 ஆகவும், 2007-08-ம் ஆண்டில் 24.71 ஆகவும், 2008-09-ம் ஆண்டில் ரூ.26.11 ஆகவும், 2009-10-ம் ஆண்டில் ரூ. 21.75 ஆகவும் இருந்திருக்கும். அரசின் தகவல்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. வரிவகையில் அரசு எந்த லாபத்தையும் எதிர்பார்க்கவில்லை என்றால் பெட்ரோலை இதே விலைக்கே மக்களுக்குத் தந்திருக்க முடியும். அதனால் கச்சா எண்ணெயைக் காரணம் காட்டுவது போலியானது.
 பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு அரசு கூறும் இரண்டாவது காரணம், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படுவதாகக் கூறப்படும் இழப்பு. கடந்த நிதியாண்டில் மட்டும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ.78 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 208 கோடி நஷ்டம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் அரசு கூறுகிறது. இதன் அடிப்படையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு நியாயப்படுத்தப்படுகிறது.
 இந்த வாதமும் மோசடியானது. ஏனெனில், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படுவது நஷ்டமே அல்ல. அது அரசின் விலைக்கும், இறக்குமதி விலைக்கும் இடையிலான வேறுபாடு மட்டுமே. இதை ரங்கராஜன் கமிட்டி தெளிவாக்கியிருக்கிறது. உண்மையில் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் லாபத்தில் இயங்குகின்றன என்பதை அந்தந்த நிறுவனங்களின் ஆண்டு அறிக்கையைப் பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.
 கடந்த 2006 முதல் 2010 வரையிலான நான்கு நிதியாண்டுகளில் இந்த நிறுவனங்கள் ரூ.1,26,288 கோடி லாபம் ஈட்டியிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 பெட்ரோலிய உயர்வுக்கு அரசு கூறும் மூன்றாவது காரணம், மானியங்களால் ஏற்படும் பொருளாதாரச் சுமை. சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், டீசல் போன்றவற்றுக்கு அதிக அளவில் மானியங்கள் தரப்படுவதால் அவற்றை ஈடுகட்டும் வகையில் பெட்ரோல் மற்றும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்த வேண்டியிருக்கிறது என்று அரசு கூறுகிறது.
 ஆனால், புள்ளிவிவரங்களின்படி 2006-07 முதல் 2009-10 வரையிலான நிதியாண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களுக்கு அரசு வழங்கியிருக்கும் மானியம் ரூ.23,325 கோடி. இதே காலகட்டத்தில் பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரிகள் மூலம் அரசுக்குக் கிடைத்திருக்கும் வருவாய் ரூ.4,10,842 கோடி. இதன்படி அரசு வழங்கியிருக்கும் மானியம், லாபத்தில் வெறும் 5.67 சதவீதம்தான். மாநிலங்களின் வரி வருவாயான ரூ.2,63,766 கோடியையும் சேர்த்தால் இந்த அளவு வெறும் 3.45 சதவீதம்தான்.
 கிடைக்கும் லாபத்தில் சிறு துரும்பைத்தான் மானியம் என்கிற பெயரில் அரசு கிள்ளிப் போட்டிருக்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது. மொத்தத்தில் பெட்ரோலியத் துறை லாபம் கொழிக்கும் துறை. பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை உயர்த்துவதன் நோக்கம் லாபத்தை அதிகரிப்பதேயன்றி, நஷ்டத்தைச் சமாளிப்பதல்ல.
 இதுதவிர டீசலில் லிட்டருக்கு ரூ.18.19, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெயில் லிட்டருக்கு ரூ. 29.69, சமையல் எரிவாயு சிலிண்டரில் ரூ.329.73 நஷ்டம் ஏற்படுவதாக அரசு கூறி வருகிறது. இப்படிப் பூதாகரமான நஷ்டக் கணக்கைக் காட்டுவதன் மூலம் மக்களின் எதிர்ப்பை அடக்கலாம் என்பது அரசின் திட்டம்.
 பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவதற்கு அரசு போலியான காரணங்களைக் கூறிவருவதைப் பார்த்தால், சமையல் எரிவாயு, டீசல் போன்றவற்றின் விலையையும் கடுமையாக உயர்த்துவதே அதன் நோக்கமாக இருக்கும் என்று தெரிகிறது. இதுஒருபுறம் என்றால், முடிந்தால் எல்லா வகையான மானியங்களையும் ஒழித்துவிடவும் அரசு திட்டமிட்டு வருகிறது.
 வீட்டு உபயோக எரிவாயுவுக்கு வழங்கப்படும் மானியத்தை இனிமேல் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கலாம் என்கிற திட்டம் அரசிடம் இருக்கிறது.
 இதனால் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிக விலை கொடுத்து எரிவாயு சிலிண்டர்களை வாங்க வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் மானிய விலையில்கூட எரிவாயு சிலிண்டர்களை வாங்க முடியாத நிலையில் இருப்பவர்கள் என்பதால், ஒட்டுமொத்தமாகவே மானியம் என்பது இல்லாமல் போய்விடும்.
 இதுபோன்ற பெட்ரோலியப் பொருள்களில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற அரசின் கொள்கையால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி பல்வேறு சீர்திருத்தங்களை அவ்வப்போது அறிவித்து வருகிறது.
 இந்த நடவடிக்கைகளில் சில, பொருளாதார வளர்ச்சியுடன் சமரசம் செய்து கொள்பவையாகக் கூட இருக்கின்றன. ஆனால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது.
 ரிசர்வ் வங்கியின் கொள்கைகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்கலாம். ஆனாலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது ஒன்றே ரிசர்வ் வங்கிக் கொள்கைகளின் நோக்கம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், இதற்கு நேர் எதிராக அரசின் கொள்கைகள் இருக்கின்றன. பெட்ரோலியப் பொருள்களின் விலையை அவ்வப்போது உயர்த்துவதன் மூலமாக பணவீக்கம் உயர்வதற்கு அரசே காரணமாக இருக்கிறது. இதனால் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் எதுவும் உரிய பலனைத் தருவதில்லை.
 நாடு சுதந்திரமடைந்தபோது, நமது தலைவர்கள் பெட்ரோலியத் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார்கள். அதனால்தான் அந்தத் துறை அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிற கொள்கையை வகுத்தார்கள்.
 இந்தத் துறையில் அரசின் பொறுப்புகளை வலியுறுத்தினார்கள். ஆனால், எதிலும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இப்போதைய அரசு, அதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டது. கஜானாவில் பணத்தைக் கொட்டும் காமதேனுவாக மட்டுமே பெட்ரோலியத் துறையைப் பார்க்கிறது. அதன் விளைவுதான் பெட்ரோலிய பொருள்களின் அதிகப்படியான விலையேற்றம்.. 

செவ்வாய், 21 ஜூன், 2011

தகவல் பெறும் உரிமைச் சட்டம்.. "சிவப்பு நாடா' ..


காமாலைக் கண்ணால் பார்த்தால் எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியும் என்பார்கள், அதேபோல, கடந்த 64 ஆண்டுகளில் இந்தியாவில் உருப்படியாக எதுவுமே நடக்கவில்லை என்று யாராவது சொன்னால், அது காமாலைப் பார்வை என்றுதான் கூறவேண்டும். நாம் முன்னேறியிருக்க வேண்டிய அளவுக்கு முன்னேறவில்லையே தவிர, இந்தியாவின் முன்னேற்றம் அபரிமிதமானது என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
 நமது வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கற்களாக இருப்பவை, மக்கள் மத்தியில் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும், நமது நியாயமான உரிமைகளைக் கேட்டுப்பெற வேண்டும் என்கிற உணர்வு இல்லாமல் இருப்பதும், ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் "சிவப்பு நாடா' கலாசாரமும்தான். இவை இரண்டுமே, காலனிய அடிப்படைச் சிந்தனைகள்தான் என்பதை 64 ஆண்டுகளாகியும் நாம் உணர்ந்து அதிலிருந்து விடுபடாமல் தொடர்வதுதான் துர்பாக்கியம்.
 இந்தக் காலனிய சிந்தனையைத் தகர்த்தெறியும் விதத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்து எழுந்த மக்கள் குரல், மத்திய அரசை நிர்பந்தித்து தகவல் பெறும் உரிமையைச் சட்டமாக்க வைத்தது. அதிகம் படிப்பறிவில்லாத ராஜஸ்தானிய கிராமத்தினரின் போராட்டம், அகில இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது மட்டுமல்ல, இப்போது அந்தச் சட்டத்தின் தொடர்விளைவாக, அரசியல் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை ஓரளவுக்கு உறுதிப்படுத்தவும் உதவியிருக்கிறது.
 எந்த அளவுக்குத் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பொதுமக்களால் பயன்படுத்தப்படுகிறது என்பது விவாதத்துக்குரிய ஒன்றாக இருந்தாலும், நிச்சயமாக இந்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகளை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதும், நாளுக்கு நாள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் இந்திய ஜனநாயகம் தனது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறது.
 பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மிகப்பெரிய சாதனை "தகவல் பெறும் உரிமைச் சட்டம் - 2005' என்றால் இப்போது இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனையாக தொலைநோக்குப் பார்வையுடன் இன்னொரு மசோதா விரைவிலேயே சட்டமாக்கப்பட இருக்கிறது. தகவல் பெறும் உரிமைச்சட்டம் எந்த அளவுக்கு அரசியல் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த உதவியதோ, அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக விரைவில் தாக்கல் செய்யப்படவிருக்கும் ஒரு மசோதா பயன்படும்.
 நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கும் "மின்னணுவழிச் சேவை வழங்கல் வரைவு மசோதா - 2011' பல வகைகளில் அரசு அலுவலகங்களில் காணப்படும் கையூட்டுகளுக்கு முடிவுகட்ட உதவும். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் இணையதளத்தில் காணப்படும் இந்த வரைவு மசோதா சட்டமாக்கப்பட்டால், அரசு அலுவலகங்களில் மனுக்களைக் கொடுத்துவிட்டு மேஜைக்கு மேஜை ஒவ்வோர் அதிகாரியாக கெஞ்சிக் கூத்தாடி, கையில் கொடுத்து, காலைப் பிடித்து நமது நியாயமான உரிமைகளுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும் பொதுமக்கள் போராட வேண்டிய தேவையிருக்காது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டுவிட்டால், லைசென்ஸ், பர்மிட், சான்றிதழ், அனுமதி அல்லது உத்தரவு, பணம் அடைப்பது அல்லது பெறுவது போன்ற எல்லா அரசுத் துறைகள் சம்பந்தப்பட்ட அலுவல்களையும் இணையதளத்தின் மூலம் இனிமேல் செய்துகொள்ள முடியும். தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ல் காணப்பட்டதுபோலவே, இந்தச் சட்டத்திலும் குறைகளைப் பதிவு செய்யவும் சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படாத அரசு அலுவலர் அல்லது அதிகாரிக்கு அபராதம் விதிக்கவும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் எல்லாத் துறைகளும் இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு அலுவல்கள் அனைத்திலும் மின்னணு சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என்கிறது இந்த மசோதா. இந்தச் சட்டம் மத்திய அரசுக்கு மட்டுமல்லாமல், தகவல் பெறும் உரிமைச்சட்டத்தைப்போலவே எல்லா மாநில அரசுகளுக்கும்கூடப் பொருந்தும்.
 இந்தியாவைப் பொறுத்தவரை இணையதள சேவை மூலம் அரசு அலுவல்கள் நடைபெறுவது என்பது காலத்தின் கட்டாயம். இல்லாமல் போனால், அரசு அலுவல்களைப் பீடித்திருக்கும் லஞ்சமெனும் காலனிய அடிமைத்தன அடையாளமான புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வின்படி இணையதள சேவையைச் செயல்படுத்துவதில் உலகிலுள்ள 192 நாடுகளில் இந்தியா 119-வது இடத்தில்தான் இருக்கிறது. மின்னணு சேவை உறுதிப்படுத்தப்படுமேயானால், ஐக்கிய நாடுகள் சபையின் லஞ்ச ஊழல் பட்டியலிலும் நிர்வாகத் திறமையின்மைப் பட்டியலிலும் இந்தியா நகைப்புக்குரியதாக இருக்கும் இன்றைய நிலைமை தொடராது.
 தகவல் பெறும் உரிமைச்சட்டமும் சரி, மின்னணு சேவையை உறுதிப்படுத்தக் கொண்டுவரப்படும் சட்டமும் சரி, ஒருவேளை ஆளும் கூட்டணிக்கேகூட எதிரான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று தெரிந்தும், இந்தியாவின் வருங்காலத்தை மட்டுமே கருத்தில்கொண்டு இதைச் சட்டமாக்க முன்வந்திருக்கும் மன்மோகன் சிங் அரசை நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். நல்ல நேர்மையான நிர்வாகம் உறுதிப்படுத்தப்பட்டு, அடிப்படைச் சேவைகளில் லஞ்ச ஊழல் ஒழிக்கப்படுவது என்பதேகூட அரசுக்கு நல்ல பெயரை வாங்கித்தரக் கூடும்.
 சட்டங்களை இயற்றுவதால் மட்டுமே மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியாது. சட்டம் என்பது வெறும் ஆயுதம் மட்டுமே. அதை முறையாகப் பயன்படுத்தினால்தான் பயனை அனுபவிக்க முடியும். தகவல் பெறும் உரிமைச்சட்டத்தையும் மின்னணுவழிச் சேவை வழங்கல் சட்டத்தையும் முறையாகப் பயன்படுத்தி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது மக்களின் கையில்தான் இருக்கிறது. 

வெள்ளி, 17 ஜூன், 2011

கங்கை எங்கே போகிறாள்?....dm..


வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக பாபா ராம்தேவ் நடத்திய உண்ணாவிரதப் போராட்டமும், ஊழல் செய்யும் அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்று ஜன் லோக்பால் சட்டம் கோரும் அண்ணா ஹசாரே நடத்தும் உண்ணாவிரதப் போராட்டங்களும் பேசப்பட்ட அளவுக்கு நிகமானந்தா நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் பேசப்படவில்லை.

தனது போராட்டத்துக்காக அவர் உயிரைவிட்ட நிலையிலும்கூட அவை வெறும் செய்தியாக மாறியதே தவிர, இந்திய மனங்களில் சிலிர்ப்பை, தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முக்திபெற சாதுக்கள் எல்லோரும் கங்கையில் உயிரைவிட வேண்டும் என்று விரும்பும்போது, அவர் மட்டும் கங்கைக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தித் தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.

கங்கையில், கும்ப் என்ற இடத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் நடைபெற்றுவரும் சுரங்கப்பணிகள் தடை செய்யப்பட வேண்டும். கங்கையின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை. நிகழாண்டில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கிய அவரது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏப்ரல் 27-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹிமாலயன் மருத்துவஅறநிலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மே 2-ம் தேதி கோமா நிலைக்குச் சென்றவர் ஜூன் 13-ம் தேதி உயிர் துறந்தார்.

இதே காலகட்டத்தில் இப்போது பாஜகவில் இணைந்துள்ள உமாபாரதியும் கங்கையின் பொருட்டு உண்ணாவிரதம் இருந்தார். அவரது போராட்டம், கங்கையின் குறுக்கே கட்டப்படும் அணையைக் கட்டாமல் நிறுத்த வேண்டும் என்பதுதான். இந்த அணை கட்டப்படுமேயானால், அணையினால் தேங்கும் நீர்பரப்பில் புராதனமான கோயில் மூழ்கும் நிலை ஏற்படுகிறது என்பதைக் கண்டித்துத்தான் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. அவருடன் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தொலைபேசியில் தொடர்புகொண்டு சமாதானப்படுத்தியதும் அந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

ஆனால், நிகமானந்தா நடத்திய போராட்டத்துக்கு இந்தக் கவனம் அல்லது அக்கறை காட்டப்படவில்லை. காரணம், அவர் அரசியல்வாதியல்ல. அவருக்குப் பின்துணை என்று எந்த அரசியல் இயக்கமும் இருக்கவில்லை.

கங்கை நதி தூய்மையற்றது என்றும், அதில் எரிக்கப்பட்ட, எரிக்கப்படாத நிலையில் பிணங்கள் வீசப்படுவதாலும்தான் நதியின் தூய்மை கெட்டுப்போவதாகவும் பொதுவாகச் சொல்லப்பட்டாலும்கூட, அது உண்மையல்ல. காலம்காலமாக கங்கையில் பிணங்கள் சென்றுகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இந்த அழுகும் பிணங்களை ஆற்றில் இருந்த நுண்ணியிர்கள் தின்று செரித்தன. மீன்களும் தின்றன. அதனால் கங்கை, புனித கங்கையாகத் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது.

இன்று கங்கையில் இந்த நுண்ணுயிர்கள் இல்லை. ரசாயனக் கழிவுகளால் கங்கையின் பிரத்யேக நுண்ணுயிர்கள் அழிந்துவிட்டன. கங்கையில் மற்ற நதிகளைக் காட்டிலும் மேலதிகமான ஆக்ஸிஜன் இப்போதும் இருந்தாலும்கூட, ரசாயன மாசுகளால் அதன் அளவு மிகவும் குறைந்துவிட்டது. அதனால்தான் கங்கை இப்போது வெறும் சாக்கடையாக மாறிவிட்ட நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதில் முன்பு இருந்ததுபோல நுண்ணுயிர்களும், மீன்களும் இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

ரிஷிகேசம் முதல் பிரயாகை வரையிலான இடைப்பட்ட பகுதியில் 146 தொழிற்சாலைகளின் ஆலைக்கழிவுகள் கங்கையில் கலக்கின்றன. ஒரு நாளைக்கு 260 மில்லியன் லிட்டர் ரசாயனக் கழிவுகள் கங்கையில் கலக்கின்றன என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

வழியோரம் உள்ள 100-க்கும் மேற்பட்ட நகரங்களின் சாக்கடை சுமார் 1.3 பில்லியன் லிட்டர் கங்கையில் கலக்கிறது. இத்தனை மாசுகளையும் மீறித்தான் இப்போதைய கங்கை இன்னமும் முற்றிலும், தனது புனிதத்தை இழக்காமல் இருக்கிறது.

பக்தர்கள் கங்கை நீரை ஒரு பாத்திரத்தில் நிறைத்து வைத்து, இந்தியா முழுவதும் கொண்டுசெல்கின்றனர். இந்த நீர் ஏன் பல ஆண்டுகளானாலும் கெடாமல் இருக்கிறது என்று ஆய்வு செய்தவர்கள், இந்த நதியின் மிகையான ஆக்ஸிஜன், கனிமம், நுண்ணுயிர்கள்தான் காரணம் என்பதைத் தெரிந்துகொண்டனர். ஆனால், அது பழங்கதை. இப்போது இந்த நீர் சில வாரங்களிலேயே தன்மை கெட்டுப்போய் விடுகிறது.

நிகமானந்தாவின் மரணம் என்பது ஏதோ ஒரு துறவியின், வேலையற்ற சோம்பேறி சாமியாரின் மரணமல்ல. ஒரு தியாகியின் மரணம். நாளைய தலைமுறைக்கு, நா வறண்டு விடாமல் நல்ல தண்ணீர் கிடைக்க வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கில், தனது உயிரை மாய்த்து, அரசுக்கு உணர்த்த முயன்ற ஒரு மகாத்மாவின் மரணம்.

அண்ணா ஹசாரேவுக்காகவும், பாபா ராம்தேவுக்காகவும் குரல் கொடுக்க முன்வந்த இந்தியா ஓர் உண்மையான தேசபக்தனுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடக்கூட மறந்துவிட்டதே! இந்தியாவிலுள்ள நிலத்தடி நீரெல்லாம் கங்கைதான் என்பதை நினைவில் கொள்வோமேயானால், கங்கை வற்றினால் நமது நா வறண்டுவிடும் என்கிற உண்மையைப் புரிந்துகொள்வோமேயானால், நிகமானந்தாவின் உண்ணாநோன்பின் உன்னதமும், அவரது மரணத்தின் தியாகமும் எத்தகையது என்பது நமக்குப் புரியும்.

அண்மையில் இந்திய அரசு கங்கையைத் தூய்மை செய்ய சில ஆயிரம் கோடி ரூபாயில் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பாகவும் இதுபோன்ற திட்டங்களுக்காக பல கோடி செலவிடப்பட்டுள்ளது. இப்போது இந்தத் திட்டமும் அதேபோன்று ஒதுக்கீடைக் கபளீகரம் செய்வதற்கான ஒரு திட்டமாக மாறிவிடக்கூடாது, அதுதான் நிகமானந்தாவுக்கு நாம் செய்யக்கூடிய நினைவஞ்சலி!

இந்திய தொழில்நுட்பக் கல்லூரிகள் (ஐஐடி) இந்திய மேலாண்மைக் கல்லூரிகள் (ஐஐஎம்)


இந்தியாவில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்லூரிகள் (ஐஐடி) இந்திய மேலாண்மைக் கல்லூரிகள் (ஐஐஎம்) ஆகியன உலகத் தரத்தில் அமைந்திருக்கவில்லை. இவை ஆய்வுகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை. ஏதோ மாணவர்களின் புத்திசாலித்தனத்தால் பிரபல்யம் அடைந்துள்ளதே தவிர, இவை தன்னளவில் சிறந்ததாகவும், சிறந்த புலமைபெற்றவர்களைக் கொண்டதாகவும் இக்கல்லூரிகள் இல்லை என்கிற கருத்தை ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

இந்தக் கருத்து, மனித வள மேம்பாட்டுத் துறையை ஏற்றிருக்கும் கபில் சிபலுக்கு வருத்தம் அளித்திருக்கிறது என்பதோடு அதற்கு பல்வேறு மறுப்புகளையும் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் வெளியாகும் 1,400 ஆய்வுக் கட்டுரைகளில் சுமார் 1,000 கட்டுரைகள் ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆகியவற்றிலிருந்து வெளிவந்துள்ளன. இந்தியாவின் 25 சதவீத பேராசிரியர்கள் ஐஐடி-யில் உருவானவர்கள் என்பதுதான் கபில் சிபல் வாதம்.

கபில் சிபில் வாதம் உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், ஜெய்ராம் ரமேஷ் கூறிய கருத்தில் உள்ள நியாயம் வெளிப்படையானது. ஒருவேளை அவர் சொல்லிய விதம் கருத்து மாறுபாட்டுக்கு இடம் தரலாமேயொழிய, அந்தக் கருத்து சிந்தனைக்கு உரியது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.டி எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. இவற்றுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஐ.ஐ.டி-யும் தொழில்நுட்பக் கல்வியை வழங்குகிறது என்றாலும்கூட, இதன் தரம் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. இதற்கான தனி நுழைவுத் தேர்வுகள் உள்ளன. அதேபோன்றுதான் ஐஐஎம் கல்லூரிகளில் மேலாண்மைக் கல்வி தொடர்பான படிப்புக்கும் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவை இரண்டு படிப்புகளிலும் சேருபவர்கள் இந்தியாவில் மிக உயர்ந்த அறிவுத்திறன் (ஐ.கியு) உள்ளவர்கள் என்று கணிக்கப்படுகிறது. இந்தக் கல்வி நிறுவனங்களுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையால் செலவிடப்படுகிறது.

இவையன்றி, ஐஐடி, ஐஐஎம் ஆகியவற்றுக்கு இணையான கல்வியைத் தருவதாகக் கூறும் தனியார் பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. இந்தக் கல்வி நிறுவனங்கள் அண்மைக்காலமாக வெறுமனே ஆண்டுக்கு ரூ. 18 லட்சம் முதல் ரூ. 25 லட்சம்வரை சம்பளம் வாங்கும் பட்டதாரிகளை உற்பத்தி செய்து அனுப்புகின்றனவே தவிர, இவை ஆராய்ச்சிகளில் ஈடுபடவில்லை என்பதும், இவற்றின் சிறந்த மாணவர்கள் இதே கல்வி நிறுவனங்களில் கல்வி பயிற்றுவிக்கும் பணிக்குத் திரும்புவதில்லை என்பதும் மாபெரும் உண்மை. இதற்கு மிகப்பெரும் காரணமாக இருப்பது, இந்த ஆய்வுகளிலும், கல்விப் பணியிலும் பன்னாட்டு நிறுவனங்களில் இவர்களுக்குச் சம்பளமாகக் கிடைக்கும் பெருந்தொகை இதில் கிடைப்பதில்லை என்பதுதான்.

மிகப் பெரும்பான்மையான ஆய்வுக் கட்டுரைகள் ஐஐடி, ஐஐஎம் ஆகியவற்றிலிருந்துதான் வெளியாகியுள்ளன என்று அமைச்சர் கபில் சிபல் கூறினாலும், இந்த ஆய்வுகள் எவை குறித்தவை, யாருக்காகச் செய்யப்பட்டவை என்பதை நுட்பமாகப் பார்த்தோமேயானால், இவை பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களின் நிதிநல்கையுடன், அவர்களது குறிக்கோளையெட்டுதற்கான களம் அமைத்துக் கொடுக்கும் ஆய்வுகளாகத்தான் இருக்கின்றன என்பது தெரியவரும்.

இன்றைய விவசாயத்தின் சிக்கல் என்ன, இன்றைய விவசாயியின் தேவை என்ன, இதை எவ்வாறு அரசும் தனி நபர்களும் செய்ய முடியும் என்பது பற்றிய ஆய்வுகள் நடந்திருக்குமா என்றால் நிச்சயம் இருக்காது என்று சொல்லிவிடலாம். அதேபோன்று, இன்றைய நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் தேவை, அவர்களது வாங்குதிறன் குறித்த பொருளாதார ஆய்வுகளும் மிகக் குறைவு. இன்றைய அரிய கண்டுபிடிப்புகளை எவ்வாறு எளிமைப்படுத்தி, மக்களுக்குப் பயன்படும் வகையில் புதிய கருவிகளை உருவாக்க முடியும் என்கிற அறிவியல் ஆய்வுகளும் மிகக் குறைவு.

அப்படியே, அறிவியலில் ஆய்வுகள் செய்தால், அவை பன்னாட்டு நிறுவனத்தின் இயந்திரங்களை மேலும் நுட்பமானதாக மாற்றி, அவற்றை நம் தலைமேல் கட்டுவதற்காகத்தான் இருக்கும். அதேபோன்று இந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் நடத்தும் ஆய்வுகள் பெரும்பாலும், இந்தியர்களை மேலும் மோசமான நுகர்வோராக மாற்றுவது எப்படி என்பதாகத்தான் இருக்கின்றன.

இவர்களது தொழில்நுட்ப ஆய்வுகள் இந்தியாவின் தொழிற்கருவிகளின் விலையைக் குறைக்க உதவவில்லை என்பது குறிப்பிட்ட இயந்திரத் தயாரிப்பில் எந்த நிறுவனங்கள் பயனடைகின்றன என்பதைப் பார்த்தாலே தெரியும். இவர்கள் ஆய்வுகளால் பன்னாட்டு நிறுவனங்கள் நம் மீது திணித்து வரும் பொருள்களின் பட்டியல் நீளமானது.

இந்த நிலைமையை மாற்றி, இந்திய மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் இந்தக் கல்வி நிறுவனங்கள் ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து, குறிப்பாக இந்தியாவின் தேவைகளை முன்னிறுத்திய ஆய்வுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதேபோன்று இவர்களது மேலாண்மைப் படிப்புகளும் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாமல், வெறுமனே வெளிநாடுகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியாவின் அதிபுத்திசாலிகளை அனுப்பி வைக்கும் வாசலாக இக்கல்லூரிகள் இருந்தால் அதனால் இந்தியாவுக்கு என்ன லாபம்?

ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணங்களை உயர்த்துவது பற்றிய ஆலோசனைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த உயர் கல்வி நிறுவனங்களில் படித்து முடிப்பதற்கு முன்பாகவே பல கார்ப்பரேட் நிறுவனங்களில் ஐந்து இலக்க ஊதியம் பெறவும், பன்னாட்டு நிறுவனங்களால் அடையாளம் காணப்பட்டு வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெறவும் முடியும் என்கிற நிலையில் இப்படியொரு எதிர்ப்பு கிளம்புவதே வேடிக்கையாக இருக்கிறது. இங்கே படித்துப் பட்டம் பெற்றால், அடுத்த பத்தாண்டுகளுக்காவது இந்தியாவில்தான் பணியாற்றுவோம் என்று உறுதிமொழி கொடுப்பவர்களுக்கு வேண்டுமானால் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதை ஏற்கலாமே தவிர, மற்றவர்களுக்குக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தினால்கூட தவறே இல்லை. குறைந்த கட்டணத்தில் அரசு வரிப்பணத்தில் யாருக்கோ பயன்படப்போகும் இவர்களது படிப்பால் இந்தியாவுக்கு என்ன லாபம்?

வெள்ளி, 3 ஜூன், 2011

சூரிய ஒளி மின் உற்பத்தி: ல.ஆதிமூலம்...இரண்டாம் பகுதி..

குஜராத்தில் இந்த வெற்றி பார்முலாவை தொடர்ந்து, ராஜஸ்தான், அரியானா, மேற்கு வங்கம், டில்லி, மகாராஷ்ட்ரா, ஒடிசா, ஆகிய மாநிலங்கள் தனிக் கொள்கையை வகுத்துள்ளன. இருந்தும் குஜராத் போல், இந்த மாநிலங்களில் அதிக அளவு சோலார் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியவில்லை. இதற்கு காரணம் குஜராத் போல் அதே விலைக்கு சோலார் மின்சாரத்தை வாங்கிய போதிலும், குஜராத் போல் அதிகாரிகள் மட்டத்தில், ஒத்துழைப்பு இருக்காது. என்ற நம்பிக்கையும், சில மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் பிரச்னையாலும் சில மாநிலங்களில் கிராமங்களில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் பிரச்னையாலும், தங்கள் முதலீட்டை குஜராத்தில் அதிகப்படுத்துகிறார்களே தவிர, இந்த மாநிலங்களில் போக வேண்டும் என்று எண்ணுவதில்லை. ஒரு வேலை தமிழகத்தில் சோலார் மின் உற்பத்தியை கூடுதல் விலையில் வாங்குவார்கள் என்று திட்டம் வகுத்து கொடுத்தால் மட்டுமே தமிழகத்தின் பக்கம், இவர்களை ஈர்க்க முடியும். 


அதிகாரிகள் ஒத்துழைப்பு: தமிழகத்தில் உள்ள சில அதிகாரிகளின் ஒத்துழைப்பு பிரசித்தி பெற்றது. இவர்களால் ஒரு போதும் குஜராத் அதிகாரிகள் போல் தொழில் செய்ய வருபவர்களுக்கு ஓத்துழைப்பு கொடுக்க முன் வரமாட்டார்கள். இதை ஈடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு குஜராத்தை விட அதிக சலுகை வழங்கினால் மட்டுமே இந்த திட்டம் வெற்றிகரமாய் நிறைவேறும். மின் துறையில் உள்ள பல அதிகாரிகளுக்கு சூரிய ஒளி மின் உற்பத்தி என்றாலே ஒரு நம்பிக்கை இல்லாத, முடியாத ஒரு திட்டமாக கருதுகிறார்கள். சூரிய ஒளி மின் உற்பத்தி மூலம் கிடைக்கும். ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.15 செலவாகும் என்பது தான் இதற்கு அவர்கள் சொல்லும் ஒரே காரணம். மின் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு பிற மாநிலங்களில் இருந்து யூனிட்டுக்கு ரூ.13 வரை கொடுத்து மின்சாரத்தை விலைக்கு வாங்குகிறது. சில சமயங்களில் டீசல் ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்பவர்களிடமிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.12 வரை விலை கொடுத்து வாங்குகிறது. இப்படியிருந்தும் சூரிய ஒளி ரூ.15 கொடுக்க வேண்டுமே என்று அதிகாரிகள் நினைக்கிறார்களே தவிர ஒரு மெகா வாட்டுக்கு 14 கோடி முதலீடு செய்ய தனியார் முன் வருகிறார்களே என்று நினைப்பதில்லை. அரசு செய்ய வேண்டிய முதலீட்டுக்கு பதில் தனியார் செய்ய முற்படும்போது அதை ஊக்குவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் நினைப்பதில்லை. முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தி, அரசு அதிகாரிகளின் தலையீடே இல்லாமல் ஒரு திட்டத்தை வகுத்து கொடுத்தாலே அரசு நினைக்கும் பல அடிப்படை திட்டங்கள் வெற்றிகரமாக முடியும். 


அதிகாரிகளின் நிலை: ஆற்காடுவீராசாமி அமைச்சகத்தின் கீழ் இருந்த சில அதிகாரிகளுக்கு சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தில் விழிப்புணர்வு இல்லாததும், நாட்டின் முன்னேற்றத்தில் நம்பிக்கை இல்லாததும், தனியார் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாததால் தான் கடந்த ஆட்சியில் மின்சாரத்துறை இவ்வளவு மோசமாக இருந்தது. இதுவே கடந்த ஆட்சிக்கு ஏற்பட்ட மிக பெரிய கெட்ட பெயராகும். சூரிய மின் திட்டத்தின் மூலம் ஒரு மெகா வாட்டிற்கு 14 கோடி தேவைப்படுவதால் இதை தயாரிக்க ஒரு யூனிட்டிற்கு ரூ.12 ஆகும். தனியாரிடமிருந்து இதை பெறும்போது, அவர்கள் ரூ.15 க்கு குறையாமல் விற்பார்கள். அதனால் அரசு மானியம் இல்லாமல் சூரிய மின் ஒளி திட்டம் நிறைவேற்ற முடியாது. அனல் மின் நிலையத்திற்கு ஒரு மெகாவாட்டிற்கு ரூ. 5 கோடி தான் ஆகும் என்று கூறும் அதிகாரிகள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். அனல் மின் நிலையம் குறைந்தது 1000 முதல் 3000 மெகா வாட் நிலையமாக தான் இருக்க முடியும். இது போக திட்டத்தில் வராத செலவாக அனல்மின் நிலையத்திலிருந்து பிற பகுதிகளுக்கு எடுத்து செல்வதற்கு (Sub Station) மற்றும் மின் விநியோகம்) ஒரு மெகாவாட் 5 கோடி செலவு ஏற்படும். இதை திட்ட செலவில் சோர்க்காமல், அரசு பட்ஜெட்டில் சேர்க்கப்படுகிறது. இதனாலே அனல்மின் நிலையம் அமைக்க வெறும் 5 கோடி ரூபாய் தான் ஆகும் இவர்கள், மேலும் அரசு செய்யும் செலவை சேர்க்காமல் அனல்மின் நிலையம் மூலம் பெறப்படும் ஒரு யூனிட்டிற்கு ரூ.3 க்கு குறைவாக கிடைக்கும் என்று அரசை நம்ப வைக்கிறார்கள். 


எப்படி செயல்படுத்துவது: சூரிய ஒளி மின் திட்டத்தை அமல் செய்ய, தலைமைச் செயலர் அந்தஸ்தில் ஓர் அதிகாரியை தமிழ் அரசு நியமிக்க வேண்டும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பை பெற வேண்டியிருப்பதாலும் அத்துறையினரின் ஈடுபாடும் உதவியும் தேவைப்படுகிறது. பல்வேறு துறைகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்கு அஞ்சியே முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள். ஆகவே, தலைமைச் செயலர் அளவிலான அந்தஸ்தில் இருந்தால் தான் மற்ற துறை செயலர்கள் இத்திட்டத்தில் முனைப்புடன் செயல்பட முடியும். இது வளரும் தொழில்நுட்பம் கொண்ட துறை என்பதால் இத்துறையில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த சிலரை உறுப்பினராகவும் திட்டத்தில் சேர்க்க வேண்டும். 


கிராம ராஜ்யமே ராம ராஜ்யம்: கிராமங்களில் அடிப்படை பிரச்னைகளைத் தீர்த்தால், கிராம மக்கள் நகரங்களை நோக்கிச் செல்ல மாட்டார்கள். நகர வளர்ச்சி மற்றும் நெருக்கடி தீர்க்க அரசு செய்யும் செலவு கோடிக்கணக்கில் குறையும். கிராமப்புறங்களில் மின்சாரம் இல்லை. இருந்தாலும் தாழ்வழுத்த மின்சாரமே வழங்கப்படுகிறது. அப்பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் குழந்தைகளை காக்கும் இன்குபேட்டர், அறுவை சிகிச்சை அறைகளுக்கு போதுமான மின்சாரம் இல்லை. உயிர்காக்கும் கருவிகளை இயக்கவும் மின்சாரம் இல்லை. விதைகளை பாதுகாக்க, உற்பத்தி செய்த காய்கறி பழங்களை காப்பாற்றவும், கால்நடை இனவிருத்திக் கூடங்களை இயக்கவும் மின்சாரம் இல்லை. இந்நிலை மாற ஒவ்வொரு பஞ்சாயத்தும் 2 மெ.வா., மின்சாரத்தை நிறுவி அவர்களே மின்வினியோகம் செய்யும் முறைக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும். சில மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது. 2003ம் ஆண்டு மின்சார உற்பத்திச் சட்டத்திலும் இதற்கான வழிமுறை இடம்பெற்றுள்ளது. 


பஞ்சாயத்து மட்டத்திலும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இதற்காக சோலார் தொழிலில் ஈடுபட்டு வரும் Wipro, Tata BP, Moserbaer உள்ளிட்ட நிறுவனங்களை பயன்படுத்தினால், அவர்களே இந்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி சோலார் மின்சார திட்டத்தை நிறுவி அதனை விநியோகித்தும் செயல்படுத்தியும் கொடுப்பார்கள். அரசு இதற்கு உத்தரவும், தனிக்கொள்கையும் ஏற்படுத்தி கொடுத்தால் போதும். 3 ஆண்டுகளில் குறைந்தது 200 பஞ்சாயத்துகளில் 2 மெ.வா., திட்டங்களை நிறைவேற்றலாம். இதற்கு திடமான எண்ணமும், சரியான திட்டமும் நடைமுறைப்படுத்தும் வைராக்கியமும் நேர்மையான அதிகாரிகளும் இருந்தால் போதுமானது. 


தேசிய சோலார் மிஷன் தமிழகத்தின் பொறுப்பு என்ன?: கடந்த 2009 நவம்பரில், தேசிய சோலார் மிஷன் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார். இத்திட்டம் மூன்று கட்டங்களாக அமல் செய்யப்படும். முதல் கட்டமாக 2010-13 ஆண்டுகளில் 1000 மெ.வா., மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்தது. 2010ல் துவங்கும் முதல் கட்டத்தை இரண்டாக பிரித்து, 30 நிறுவனங்களுக்கு 150 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் அதிகபட்சமாக 5 மெ.வா., உற்பத்தி செய்யலாம். தமிழகத்தில் தூத்துக்குடியில் 5 மெ.வா., மின் உற்பத்திக்கு ஒரு தனியார் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.
இக்கொள்கையின் படி, தேசிய அனல்மின் உற்பத்திக்கழக வியாபார அங்கமான என்.வி.வி.என்., (என்.டி.பி.சி., வித்யூத் வியாபார் நிகாம் லிட்.,) எனும் அமைப்பு தான் தற்போது, சூரிய ஒளி மின் உற்பத்தியை விலை கொடுத்து வாங்கவும், அதை மாநில அரசுகளுக்கு விற்கவும் உள்ள அதிகாரப்பூர்வ ஏஜன்சியாக செயல்படுகிறது. 


இந்த அமைப்புதான் சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களின் தகுதிகளை முடிவு செய்து, ஒரு யூனிட்டுக்கு ரூ. 17.91 விலை கொடுத்து, இருபத்தைந்து ஆண்டு கால ஒப்பந்தம் செய்து கொள்ளும். அத்துடன், மின் உற்பத்திக்கு ஏற்ப பணத்தையும் நேரடியாக வழங்கும். தற்போது மாநிலங்களில் உள்ள, மின் உற்பத்தி தொடர்பான எந்த துறைக்கும், தேசிய சோலார் மிஷன் திட்டத்தில் உள்ள பொறுப்பு பற்றி தெரிவிக்கப்படவில்லை.


தேசிய சேலார் மிஷன் திட்டப்படி, சூரிய ஒளி மின்உற்பத்தி செய்யும் தனியாரிடம் ஒரு யூனிட் ரூ. 17.91 வீதம் மின்சாரத்தைப் பெற்று, என்.டி.பி.சி., தன்னிடம் உள்ள மாநிலங்களுக்கு ஒதுக்கப்படாத மத்திய தொகுப்பிலிருந்து 3 மடங்கு மின்சாரத்தைச் சேர்த்து மாநிலங்களுக்கு திருப்பி வழங்கும். உதாரணமாக ஒரு சூரிய ஒளி மின்திட்டத்தில் 1000 யூனிட் மின் உற்பத்தியானால், 3000 யூனிட் சேர்த்து, 4 ஆயிரம் யூனிட்டாக மாநிலத்திற்கு திருப்பி வழங்கும். இதனால் மாநிலங்கள் பெறும் மின் உற்பத்திக்கு ரூ. 5.50 வீதம் என்.வி.வி.என்.,க்கு செலுத்தினாலே போதும். இதன் மூலம் தேசிய அனல் மின்கழக நிறுவனத்துக்கு (என்.டி.பி.சி.,) ஏற்படும் நஷ்டம் மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து சமாளித்து கொள்ளப்படுகிறது. 


குறிப்பிட்ட சதவீதம்: ஒவ்வொரு மாநிலமும் அம்மாநிலங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் மொத்த அளவில் மரபுசாரா மின்சக்தியை குறிப்பிட்ட சதவீதம் பயன்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுடன் மத்திய மின்சார ஒழுங்குமுறை கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு ஆர்.பி.ஓ., (ரெனியூவல் பர்ச்சேஸ் அப்ளிகேஷன்) என்று பெயர். காற்றாலை மின் உற்பத்தியால் இந்த இலக்கை தமிழகம் எளிதில் பூர்த்தி செய்து வந்தது. ஆனால் தற்போது சூரிய ஒளியை பயன்படுத்தி குறிப்பிட்ட சதவீதம் மின் உற்பத்தி செய்ய வேண்டும் என்று தனி ஆர்.பி.ஓ., தேசிய சோலார் மிஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்.பி.ஓ.,வை கடைபிடிக்காத மாநிலங்களுக்கு எதிர்காலத்தில் மின்வினியோகம் மற்றும் பிற உதவிகளை மத்திய அரசு குறைத்து விடும் அபாயம் உள்ளது.


அதன்படி, 2010 முதல் ஒரு மாநிலம் பயன்படுத்தும் மொத்த மின்சாரத்தில் 0.25 சதவீதம் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 0.25 சதவீதம் அதிகரித்து 2022ல் இதன் மொத்த உற்பத்தி 3 சதவீதமாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு தமிழகத்தில் சுமார் 7 லட்சம் மில்லியன் யூனிட்டுகள் செலவானது. இதில் 0.25 சதவீதத்தை கணக்கிட்டால் 100 மெ.வா., மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்திருக்க வேண்டும். ஆனால் சிவகங்கையில் மோசர் பெயர் நிறுவனம் மத்திய அரசின் பழைய திட்டத்தின் படி, 5 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்தியை மட்டுமே துவக்கி உள்ளது.


தேசிய சோலார் மிஷன் திட்டப்படி, 2010-11 ஆண்டில் இரண்டாவது கட்டத்தில் 500 மெ.வா., திட்டங்களுக்கு இந்த ஜூன் மாதம் மத்திய அரசு டெண்டர் விட உத்தேசித்துள்ளது. இது போக சிறு முதலீட்டாளர்கள் பங்குபெற வேண்டும் என்ற நோக்கில், ஆர்.பி.எஸ்., எஸ்.ஜி.பி., எனும் மற்றொரு திட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தில் தமிழகத்தில் மொத்தம் 7 நிறுவனங்கள் தேர்வாகின. அடுத்த மார்ச் மாதத்துக்குள் உற்பத்தி துவக்க வேண்டும். 


இன்ஜினியரிங் கல்லூரிகளில் சூரிய ஒளி மின்உற்பத்தி: கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பெரிய நிறுவனங்கள் அவர்கள் உபயோகிக்கும் மின்சாரத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சூரிய ஒளி மின்சாரமாக உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். 2 ஆண்டுகளில் இதை நடைமுறைப்படுத்த அறிவுறுத்த வேண்டும். பள்ளிகள், திருமண மண்டபங்கள், கம்யூனிட்டி ஹால்கள், கிளப்புகள் என்று இத்திட்டத்தை விரிவுபடுத்திக்கொண்டே போகலாம்.


தமிழகத்தில் 600 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இவை குறைந்தபட்சம் 500 கி.வா., முதல் 1000 கி.வா., வரை மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றன. குறைந்தது 100 கி.வா., சோலார் மின் உற்பத்தியை செய்ய வேண்டும் என்று கட்டாயமாக்க வேண்டும். இதற்கு அவர்கள் ஒன்றரைக்கோடி வரை முதலீடு செய் வேண்டும். இதனால் 60 மெ.வா., மின்உற்பத்தியை இன்ஜினியரிங் கல்லூரிகள் வழியாக உற்பத்தி செய்ய முடியும். இன்ஜினியரிங் கல்லூரிகள் கிராமப்பகுதியில் அதிகம் இருப்பதால் இடப்பற்றாக்குறை என்ற பிரச்னை இல்லை.


பயோ கேஸ்: 500 பேருக்கும் மேல் சாப்பிடும் கேன்டீன்கள் ஹோட்டல்கள், தொழிற்சாலை கேன்டீன்களில் சமையலுக்கென அதிக மின்சாரம் செலவாகிறது. இதற்கு இந்த சமையல் கூடங்களில் சூரிய ஒளி மூலம் தான் வெந்நீர் உற்பத்தி செய்ய வேண்டும். அதேபோல், உணவுக்கழிவுகளிலிருந்து பயோகேஸ் உற்பத்திக்கான திட்டத்தை நிறைவேற்றவும் தமிழக அரசு உத்தரவிடவேண்டும். சில மாநிலங்கள் இம்முறையை பின்பற்றி வருகிறது. பாபா அணு ஆராய்ச்சி கழகம் இதற்கென தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது. தினமும் 500 கிலோ உணவு மற்றும் காய்கறி கழிவிலிருந்து 29 கிலோ எல்.பி.ஜி.,க்கு இணையான பயோகேஸ் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு குறைந்தது ரூ. 5 லட்சம் முதலீடு தேவைப்படும். இதையே 2 ஆண்டுகளில் அனைத்து கேன்டீன், ஹோட்டல்கள் திருமண மண்டபங்களில் நிறுவ அரசு உத்தரவிடவேண்டும். மின் நிதிக்கழகத்திலிருந்து இதற்கும் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். இதில் முதலீட்டாளர்களுக்கு 2 ஆண்டுகளில் முதலீடு செய்த பணத்தை மீட்டுவிடும் வாய்ப்புள்ளது. 


வாட்டர் ஹீட்டர்கள்: பெங்களூரு மற்றும் டில்லி போல, சூரியஒளி வாட்டர் ஹீட்டர்களை ஊக்குவிக்க, அதை நிறுவும் வீடுகள் மற்றும் பிளாட்டுகளுக்கு மட்டும் வீடுகட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். தொழிற்சாலைகள், கேன்டீன், ஹோட்டல்கள், மடங்கள், சர்ச் உள்ளிட்டவற்றில், குறிப்பதற்கான வெந்நீர் தேவை அதிகம் உள்ளது. ஏற்கனவே மானியமும் குறைந்த வட்டி வங்கிக்கடனும் நடைமுறையில் உள்ளது. அரசு கண்டிப்பாக சட்டம் இயற்றினால் ஒழிய இதை நிறுவ யாரும் முன்வரமாட்டார்கள். 


நியான் விளக்குகள்: நகரங்களில் உள்ள பல நிறுவனங்கள் நியான் விளக்குகளை பயன்படுத்துகின்றன. இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் அதிக விலை கொடுத்து அந்நிறுவனங்கள் மின்சாரத்தை வாங்குகின்றன. நியான் விளக்குகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிடவேண்டும். அதிக விலை கொடுத்தாலும், சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். டில்லியில் உள்ள விளம்பர பலகைகள் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்த மின்சாரத்தைப் பயன்படுத்தியே விளக்குளை எரிக்கின்றன. அதுபோல், நியான் விளக்குகளுக்கும் இம்முறையை
தமிழக அரசு உடனே கொண்டு வரவேண்டும்.