செவ்வாய், 28 ஜூன், 2011

காமராஜ் வழியில்... அண்ணா வழியில்...


ஒரு மனிதன் உயிரோடு வாழ்கிறான் என்பதற்கு எது சான்று என்றால் எண்ணும் எழுத்தும் கற்றவனாக இருத்தல் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
கல்விச் செல்வத்தைப் பெறாதவனுடைய கண்கள் இரண்டிலும் புண்கள் என்கிறார்.
முனிவர்களும் ஞானிகளும் தங்களது குழந்தைகளாக மாணவர்களைத் தங்களோடு வைத்து உணவு, உடை, உறையுள் அனைத்தும் தந்து கல்வி கற்றுத்தந்த நாடு இது.
"எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்' என்றாள் அவ்வைப் பெருமாட்டி. "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது அதிவீரராமபாண்டினின் வெற்றிவேட்கை என்கிற நீதிநூல்.
மூன்று கல் தொலைவுக்கு ஒரு கல்விக்கூடம் என்று கொண்டு வந்த காமராஜ் தான் முதன்முதலாக மாணவர்களிடம் சொன்னார். பிள்ளைகளா, ""பிச்சை எடுத்தாவது படின்னு புலவங்க சொல்லியிருக்காங்கன்னேன். நான் சொல்லுதேன்; நீங்க போயிப் பள்ளிக்கூடத்திலே படிங்க. நான் போயி உங்களுக்காகப் பிச்சை எடுக்கேன்னார்.''
அரசுப் பள்ளிக்கூட ஆசிரியர்களின் மாநாட்டில் பேசும்போது சொன்னார். ஏழைப் பிள்ளைகள் நல்லா சொல்லிக் கொடுங்கய்யா, ஏமாத்திறாதீங்க. படிக்க வச்சிட்டீங்கன்னா பொழச்சுக்கிடுவாம்ய்யா. கை கூப்பி நின்றார். ஒருநேரம் சோறு போட்டாவது ஏழைகளைப் பள்ளிக்கு வர வைக்க ஏற்பாடு செய்தார். 1963-ல் தி.மு.க.வில் இருந்த எம்.ஜி.ஆர். காமராஜின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு, "காமராஜ் என் தலைவர்; அண்ணா என் வழிகாட்டி' என்றார். அதனால்தான் எம்.ஜி.ஆர். மதிய உணவை சத்துணவு ஆக்கினார்.
1980 சட்டப்பேரவைத் தேர்தலிலே பேசினார். கும்பகோணத்திலே எங்கள் தாய், வீடுகளிலே பத்துப் பாத்திரம் தேய்த்து என்னையும் என் அண்ணனையும் காப்பாற்றினார். வேலைக்குப் போகும் நேரங்களிலே என்னையும் என்னுடைய அண்ணனையும் வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டுப் போய்விடுவார். காரணம், பசியில் நாங்கள் பக்கத்து வீட்டில்போய் கையேந்திவிடக் கூடாது என்று. மேடைகளிலே தனது உண்மை வாழ்க்கையை எம்.ஜி.ஆர். சொன்னார். அதனால்தான் சோறு என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். சத்துணவை அதனால்தான் போட்டேன்.
தன்னை ராஜராஜ சோழன் பரம்பரை என்றெல்லாம் பிதற்றவில்லை. அவர்கள் எல்லோரும் கல்வியில் அக்கறை காட்டியதற்குக் காரணம் அவர்களுக்குச் சரியான கல்வி கிடைக்கிற வாய்ப்பில்லை.
அந்தக் கல்வியின் நிலைமை இன்று என்ன? அரசுப் பள்ளிக்கூடங்களிலும், மாநகராட்சிப் பள்ளிக்கூடங்களிலும் மாநிலத்திலேயே முதலாவது வருகிறார்கள் மாணவர்களும் மாணவிகளும். ஆனால், அரசு ஊழியர்களும் அரசுப் பள்ளிக்கூட ஆசிரியர்களும்கூட தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிக்கூடங்களிலே சேர்க்கின்றனர். நமது கல்வியாளர்களும், வருங்காலம் பற்றி அக்கறையுள்ள பெரியவர்களும் கலைமகள் விலைமகளாக்கப்பட்டு விட்டாள் என்று புலம்புகின்றனர்.
அநியாயக் கொள்ளை. நடுத்தர மக்களும் தங்கள் நிலைபுரியாமல் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகளிலே தங்கள் குழந்தைகளைச் சேர்த்துவிட்டுக் கட்டணம் கட்ட முடியாமல் அவமானப்படுகின்றனர். மேட்டுப்பாளையத்தில் ஒரு தாய் கேவலம் யு.கே.ஜி. படிக்கிற தன் குழந்தைக்குக் கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
முதலில் அரசு செய்ய வேண்டியது அரசுப் பள்ளிக்கூடங்கள் பெற்றிருக்கிற தேர்ச்சியை விளம்பரம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களின் எல்லாப் பிரிவினரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிக்கூடங்களில்தான் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். அரசுப் பள்ளிக்கூடத்தில் வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்.
கொள்ளையும் அடித்துவிட்டு, கல்வித் தந்தை, கல்வி வள்ளல், கல்விக் கடவுள் என்று பட்டம் போட்டுக் கொள்கிறவர்களைத் தண்டிக்க வேண்டும். நான்கு, ஐந்து ஆண்டுகளிலே கல்விச்சாலைகளை அமைத்தவர்கள் கோடீஸ்வரர்களாக வலம் வருகிற கொடுமையைத் தடுத்தேயாக வேண்டும். அரசுப் பள்ளிக்கூடங்கள்தான் பள்ளிக்கூடங்கள். மற்றவை அரசு அங்கீகாரம் பெற்றவைதான் என்று விவரம் சொல்ல வேண்டும்.
இன்னொரு கொடுமை, ஒருமுறை சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிவிட்டால் அதிலே பாதிப் பேர் கல்வி வணிகர்களாகி விடுகின்றனர். காந்தியடிகள் படத்தையும் காமராஜ் படத்தையும் போட்டுப் பிழைப்பு நடத்துகிற காங்கிரஸ்காரர்களும் இந்தக் கல்விக் கொள்ளையர்கள் மத்தியில் இடம்பெற்றிருக்கின்றனர் என்பதுதான் மிகப்பெரிய கொடுமை. எல்லோருக்கும் கல்வி அளிக்க ஆணையிட்ட அவர்கள் படங்களையோ சிலைகளையோ தொடக்கூடத் தகுதியற்றவர்கள் இவர்கள்.
அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி என்று மூன்று பிரிவுகளாகக் கல்விச்சாலைகள் செயல்படுகின்றன. ஏழைகளுக்கும் வசதியற்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் என்றும், வசதி படைத்தவர்களுக்குத்தான் தனியார் பள்ளிகள் என்றும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
பணம் படைத்திருந்தால் நல்ல கல்வி, ஆங்கிலக் கல்வி என்றும், பணம் இல்லாத ஏழைகளுக்கு அரசுப்பள்ளி என்பதும் சமத்துவ, சமதர்ம சமுதாயம் என்கிற தத்துவத்தையே கேலி செய்வதாக அல்லவா இருக்கிறது? "சமச்சீர் கல்வி' என்கிற போர்வையில் கல்வியின் தரத்தைக் குறைப்பது எப்படித் தவறோ அதேபோல குழந்தைகளை ஏழை பணக்காரர்கள் என்று பார்த்துப்பார்த்து அதற்குத் தகுந்தாற்போல கல்வி அளிப்பது என்பதும் தவறுதானே!
கல்விதான் இலவசமாகத் தரப்பட வேண்டியது. அதை இலவசமாகத் தருவதற்கே அரசு முயல வேண்டும், மற்ற இலவசங்களைப் புறந்தள்ளி விடலாம். மக்கள் வருத்தம் கொள்ள மாட்டார்கள். ஆனால், ஏழையாகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தரமான கல்வி தரப்படாது என்று ஒரு குழந்தைக்கு மறுக்கப்படுவது அநியாயத்திலும் அநியாயமல்லவா?
"உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்'.
செல்வர்கள் முன் வறியவர்கள் கையேந்தி நிற்பதுபோல கற்ற பெரியவரிடம் பணிந்து கல்வியைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. ஆனால், இன்று நிலை கையேந்தி நின்றவர்களுக்கு உதவினார்கள் செல்வந்தர்கள். அதுபோலவே கல்வியை நல்லுடைமையாகக் கொண்டிருந்த பெரியவர்களும் அதனைத் தானமாகத் தருவதிலே மகிழ்வு கொண்டிருந்தனர் .
இன்று பணக்காரர்கள்தான் இருக்கின்றனர். செல்வந்தர்கள் இல்லை. பணக்காரர்களுக்கு எல்லாமே வணிகம்தான்.
அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் அரசுப் பள்ளிகளிலும் அதிகச் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால், சிறப்பான கல்வி கற்றுத் தரப்படுவதில்லை. தனியார் பள்ளிகளில், தரமான கல்வி என்கிற பெயரில் பெற்றோர் பிழிந்தெடுக்கப்படுகின்றனர். கேள்விகேட்க ஆளில்லை என்கிற நிலைமை.
தனியார் பள்ளிகளுக்கும் கட்டண நிர்ணயக் குழுவுக்கும் இடையில் நிர்ணாயசமாகச் செயல்பட வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்லவா? அரசுதானே பெற்றோர்களின் பிரதிநிதியாகச் செயல்பட வேண்டும்?
அனைவருக்கும் கல்வி என்பது மட்டுமே முக்கியமல்ல. அனைவருக்கும் தரமான கல்வி என்பதும், இலவசக் கல்வி என்பதும்கூட முக்கியம். பத்தாம் வகுப்பு வரையில் அனைவருக்கும் இலவசக் கல்வி என்பது பெருந்தலைவர் காமராஜும், அறிஞர் அண்ணாவும் வரையறுத்த வழிமுறை. கல்விக் கொள்ளையிலிருந்து தமிழகத்தைக் காக்க வேண்டிய கடமை தமிழக முதல்வருக்கு உண்டு. இது அவருக்குத் தெரியாமலா இருக்கும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக